தமிழ் செய்திகள்  /  தேர்தல்கள்  /  Bjp-ammk Allaiance: பாஜக உடன் கூட்டணி உறுதி! அணிலை போல் உதவ ரெடி! டிடிவி தினகரன் அறிவிப்பு!

BJP-AMMK Allaiance: பாஜக உடன் கூட்டணி உறுதி! அணிலை போல் உதவ ரெடி! டிடிவி தினகரன் அறிவிப்பு!

Kathiravan V HT Tamil
Mar 11, 2024 05:32 PM IST

”TTV Dinakaran: எத்தனை தொகுதி, என்னென்ன தொகுதி என்பது எங்களுக்கு பிரச்னை கிடையாது. எங்களிடம் எந்த நிர்பந்தத்தையும் பாஜக அளிக்கவில்லை. பாஜக உடன் கூட்டணி வைப்பதில் எங்களுக்கு எந்த உறுத்தலும் இல்லை. நாடாளுமன்றத் தேர்தலில் குக்கர் சின்னத்தில்தான் அமமுக போட்டியிடும்”

பாஜக உடன் கூட்டணி உறுதி ஆகிவிட்டதாக டிடிவி தினகரன் பேட்டி
பாஜக உடன் கூட்டணி உறுதி ஆகிவிட்டதாக டிடிவி தினகரன் பேட்டி

ட்ரெண்டிங் செய்திகள்

திருச்சியில் செய்தியாளர்களை சந்தித்த அவர், பாஜக கூட்டணிக்கு நிபந்தனை அற்ற ஆதரவை நான் அளித்துள்ளேன். மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டி உடனும், பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை உடனும் இன்று தொலைபேசியில் பேசினோம்.

கூட்டணியில் தொகுதி சம்பந்தமான கோரிக்கைகள் என்ன என்பது ஏற்கெனவே அவர்களுக்கு தெரியும், கடிதம் மூலமாக கொடுத்துவிட்டோம். தமிழ்நாட்டில் சிறப்பான வெற்றியை பாஜக பெற அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் அணிலை போல் உதவிகரமாக அமையும் என கூறி உள்ளார். 

தொடர்ந்து பேசிய அவர், யார் பிரதமர் என்பதுதான் பாராளுமன்றத் தேர்தலில் முக்கிய விஷயம். எனவே அதிக இடங்களை பாஜக பெற வேண்டும் என்பதற்காக நிபந்தனை அற்ற ஆதரவை கொடுத்துள்ளோம். 

கடந்த 6 மாதங்களாக இது குறித்து பேசி வருகிறார்கள். எத்தனை தொகுதி, என்னென்ன தொகுதி என்பது எங்களுக்கு பிரச்னை கிடையாது. எங்களின் தேவை என்ன என்பதும் அவர்களுக்கு தெரியும். 

தாமரை சின்னத்தில் போட்டியிட பாஜக நிர்பந்தம் அளித்துள்ளதாக வெளியான தகவல் குறித்த கேள்விக்கு, எங்களிடம் எந்த நிர்பந்தத்தையும் பாஜக அளிக்கவில்லை; அது பொய் என கூறிய டிடிவி தினகரன், பாஜக உடன் கூட்டணி வைப்பதில் எங்களுக்கு எந்த உறுத்தலும் இல்லை. நாடாளுமன்றத் தேர்தலில் குக்கர் சின்னத்தில்தான் அமமுக போட்டியிடும் என கூறினார். 

எந்த கட்டத்திலும் பாஜகவோ அல்லது யாருமே எங்களை குறிப்பிட்ட சின்னத்தில் நிற்க சொல்லி அச்சுறுத்தவில்லை என கூறினார். 

அதிமுக உடன் பாஜக மறைமுக கூட்டணியில் இருப்பதாக கூறப்படும் கேள்விக்கு யூகங்களுக்கு பதில் தர முடியாது, எங்கள் நிலைப்பாட்டை ஏற்கெனவே தெரிவித்துவிட்டோம். அது தொடரும் என்றார். 

சென்னை வந்துள்ள மத்திய அமைச்சர் கிஷண் ரெட்டி, விகே.சிங் ஆகியோரிடம் நேரில் வரமுடியாத காரணம் குறித்து தெரிவித்துவிட்டேன், மறுபடியும் சந்திப்போம் என அவர்கள் கூறி உள்ளனர். 

தொலைக்காட்சி பேட்டி ஒன்றில் நான் பேசியது திரித்து கூறப்படுகிறது. நான் சொன்னது என்னவென்றால், ’தமிழ்நாட்டு மக்களுக்கு எதிரான திட்டங்களை அமல்படுத்தினால் வாழ்நாள் முழுவதும் பாஜக உடன் போக முடியாது’ என கூறினேன்.  ஆனால் தற்போது தமிழ்நாட்டை பாதிக்கும் ஸ்டெர்லைட், ஹைட்ரோ கார்பன் உள்ளிட்ட திட்டங்களை அமல்படுத்த பாஜக அழுத்தம் கொடுப்பதில்லை. இன்னும் வருங்காலத்தில் தமிழ்நாட்டுக்காக நிறைய திட்டங்களை கொடுத்து உதவுவோம் என மோடி சொல்லி உள்ளார். எனவே எந்த வித உருத்தலும் இல்லாமல்தான் பாஜக உடன் கூட்டணி அமைத்துள்ளோம். 

பாஜக பல மாநிலங்களில் கூட்டணி பேசி முடித்த பின்னர் தமிழ்நாட்டுக்கு வந்துள்ளனர். ஆனால் ஏற்கெனவே தொடர்ந்து கூட்டணி குறித்து பாஜகவினர் பேசிதான் வந்துள்ளனர். 

1999 நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக உடன் கூட்டணி சேரமாட்டேன் என்றார் ஆனால் 2004 நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக உடன் கூட்டணி சேர்ந்தார். அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் அம்மாவின் வழியில் கொள்கைகளை கொண்டு செல்கிறது. தற்போதைய அரசியல் சூழலுக்கு எந்த முடிவு எடுக்க வேண்டுமோ அதே முடிவைதான் தற்போது எடுத்துள்ளது. 

ஒரு காலத்தில் பாஜக எங்களை புரிந்து கொள்ளாமல் இருந்து இருக்கலாம் ஆனால் தற்போது டிடிவி தினகரனை பற்றி நன்றாக புரிந்து வைத்து இருக்கலாம். கடந்த 2021 தேர்தலிலேயே அந்த கூட்டணியில் அமமுக சேர வாய்ப்பு இருந்தது. ஆனால் அது சரிவராததால் தனித்து நின்றோம். தற்போது பாஜக தலைமையிலான கூட்டணியில் நட்போடு பயணித்து வருகிறோம். 

நான் தேர்தலில் போட்டியிடுவது குறித்து எந்த முடிவும் எடுக்கவில்லை. பாஜக இந்தியாவின் வளர்ச்சிக்கான ஒரு இயக்கம், இந்த காலகட்டத்திற்கு தேவையான கட்சியாக பாஜக உள்ளது என டிடிவி தினகரன் கூறினார். 

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:-

ட்விட்டர்: https://twitter.com/httamilnews 

பேஸ்புக்: https://www.facebook.com/HTTamilNews 

யூடியுப்: https://www.youtube.com/@httamil 

கூகுள் நியூஸ்: https://bit.ly/3onGqm9 

WhatsApp channel