Chandrashekar Rao: சந்திரசேகர ராவ் 48 மணி நேரம் பிரச்சாரம் செய்ய தடை விதித்தது தேர்தல் ஆணையம்..என்ன காரணம்?
Chandrashekar Rao, Election Commission, தெலங்கானா முன்னாள் முதல்வரும், பி.ஆர்.எஸ் கட்சியின் தலைவருமான சந்திரசேகர ராவ் 48 மணி நேரம் பிரச்சாரம் செய்ய தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது.

தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாக தெலங்கானா முன்னாள் முதல்வரும், பிஆர்எஸ் கட்சியின் தலைவருமான சந்திரசேகர ராவ் 48 மணி நேரம் பிரச்சாரம் செய்ய தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது. இந்த தற்காலிக தடை இன்று (மே 1) இரவு 8 மணி முதல் அமலுக்கு வருவதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் ஜி நிரஞ்சன் அளித்த புகாரின் அடிப்படையில் தேர்தல் ஆணையம் இந்த கடுமையான நடவடிக்கையை எடுத்துள்ளது.
தேர்தல் ஆணையம் தனது உத்தரவில், “தேர்தல் நடத்தை விதிகளை மீறி, ஏப்ரல் 5, 2024 அன்று சிர்சில்லாவில் நடந்த செய்தியாளர் சந்திப்பின் போது சந்திரசேகர ராவ் வெளியிட்ட அவதூறான கருத்துக்களை வன்மையாக கண்டிக்கிறோம். அவரின் தவறான நடத்தைக்காக சந்திரசேகர் ராவை பிரச்சாரம் செய்ய தடை விதிக்கப்படுகிறது.” என்று கூறியுள்ளது.
தெலுங்கானாவின் தலைமை தேர்தல் அதிகாரி ஏப்ரல் 9 ஆம் தேதி புகார் குறித்து உண்மை அறிக்கையை அனுப்பியதாக தேர்தல் ஆணையம் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.