தமிழ் செய்திகள்  /  மட்டைப்பந்து  /  Srh Vs Rr Result: ஒரு ரன்னில் த்ரில் வெற்றி! சிஎஸ்கேவை பின்னுக்கு தள்ளிய சன் ரைசர்ஸ்

SRH vs RR Result: ஒரு ரன்னில் த்ரில் வெற்றி! சிஎஸ்கேவை பின்னுக்கு தள்ளிய சன் ரைசர்ஸ்

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
May 02, 2024 11:57 PM IST

முதல் ஓவரிலேயே இரண்டு விக்கெட்டுகள் இழந்தபோதிலும், யஷஸ்வி ஜெய்ஸ்வால் - ரியான் பிராக் இணைந்து பார்ட்னர்ஷிப் அமைத்து 134 ரன்கள் சேர்த்தனர். ஆனாலும் கடைசி ஒவரில் 13 ரன்கள் தேவைப்பட சிறப்பாக பவுலிங் செய்து நன்கு கட்டுபடுத்தி சன் ரைசர்ஸ் அணி வெற்றி பெற காரணமாக இருந்தார்.

சன் ரைசர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் யஷஸ்வி ஜெய்ஸ்வால்
சன் ரைசர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் யஷஸ்வி ஜெய்ஸ்வால் (AP)

ட்ரெண்டிங் செய்திகள்

இந்த இரு அணிகளுக்கு இடையே இந்த சீசனில் முதல் மோதலாக இந்த போட்டி அமைந்துள்ளது. சன் ரைசர்ஸ் அணியில் ஐடன் மார்கரம்க்கு பதிலாக மார்கே ஜான்சன் சேர்க்கப்பட்டுள்ளார். ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.

சன் ரைசர்ஸ் பேட்டிங்

இந்த போட்டியில் டாஸ் வென்ற சன் ரைசர்ஸ் கேப்டன் பேட் கம்மின்ஸ் பேட்டிங்கை தேர்வு செய்தார். இதையடுத்து முதலில் பேட் செய்த அந்த அணி 20 ஓவரில் 3 விக்கெட் இழப்புக்கு 201 ரன்கள் அடித்தது. அதிகபட்சமாக நிதிஷ் குமார் ரெட்டி 76, ட்ராவிஸ் ஹெட் 58, ஹென்ரிச் கிளாசன் 42 ரன்கள் அடித்தனர்.

ராஜஸ்தான் ராயல்ஸ் பவுலர்களில் ஆவேஷ் கான் 2 விக்கெட்டுகளையும், சந்தீப் ஷர்மா ஒரு விக்கெட்டையும் எடுத்தனர். அந்த அணியின் ஸ்டிரைக் பவுலரும், ஸ்பின்னருமான யஸ்வேந்திரா சஹால் ஓவரை சன் ரைசர்ஸ் பேட்ஸ்மேன்கள் அடித்து நொறுக்கினார்கள். 4 ஓவர்களில் 62 ரன்கள் வாரி வழங்கிய அவர் விக்கெட் எதுவும் வீழ்த்தவில்லை.

ராஜஸ்தான் ராயல்ஸ் சேஸிங்

202 ரன்கள் என்ற இலக்கை சேஸ் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் 20 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 200 ரன்கள் எடுத்துள்ளது. இதனால் 1 வித்தியசத்தில் சன் ரைசர்ஸ்   அணி வெற்றியை பெற்றுள்ளது. இந்த வெற்றியால்  சிஎஸ்கேவை பின்னுக்கு தள்ளி புள்ளி பட்டியலில் 4வது இடத்துக்கு சன் ரைசர்ஸ் முன்னேறியுள்ளது

ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் அதிகபட்சமாக ரியான் பிராக் 77, யஷஸ்வி ஜெயஸ்வால் 67 ரன்கள் அடித்தனர்

சன் ரைசர்ஸ் பவுலர்களில் புவனேஷ்வர் குமார் 3, நடராஜன் 2, கம்மின்ஸ் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

முதல் ஓவரில் 2 விக்கெட்

புவனேஷ்வர் குமார் வீசிய ஆட்டத்தின் முதல் ஓவரின் இரண்டாவது பந்தில் ஜாஸ் பட்லர் கோல்டன் டக் அவுட்டாகி வெளியேறினார். தான் எதிர் கொண்ட முதல் பந்தில் ஸ்லிப் திசையில் கேட்ச் முறையில் அவுட்டானார். இதைத்தொடர்ந்து பேட் செய்ய வந்த அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன், அந்த ஓவரின் ஐந்தாவது பந்தில் கிளீன் போல்டானார். இதனால் ராஜஸ்தான் ராயல்ஸ் ஒரு ரன்னில் இரண்டு முக்கிய விக்கெட்டுகளை இழந்து தவித்தது.

ஜெய்ஸ்வால் - ரியான் பிராக் பார்ட்னர்ஷிப்

அணியை சரிவில் இருந்து மீட்கும் விதமாக களத்தில் இருந்த ஜெய்ஸ்வால் - ரியான் பிராக் ஆகியோர் இணைந்து பொறுப்புடன் பேட் செய்தனர். பார்ட்னர்ஷிப் அமைத்து ரன் குவிப்பில் ஈடுபட்ட இவர்கள் தேவைப்படும் ரன்ரேட்டுக்கு ஏற்ப விளையாடி வந்தனர்.

ஜெய்ஸ்வால், ரியான் பிராக் ஆகிய இருவரும் தங்களது அரைசதத்தை பூர்த்தி செய்தனர். அதிரடியாக பேட் செய்து ரன்களை குவித்து வந்த ஜெய்ஸ்வால் 40 பந்துகளில் 67 ரன்கள் எடுத்த நிலையில், யார்க்கர் மன்னன் நடராஜன் பந்தில் போல்டு ஆனார்.

இவரை தொடர்ந்து அடுத்த சில ஓவர்களில் ரியான் பிராக் 49 பந்துகளில் 77 ரன்கள் எடுத்த நிலையில் கம்மின்ஸ் பந்தில் சிக்ஸர் அடிக்க முயற்சித்து அவுட்டானார். ஜெய்ஸ்வால் - ரியான் பிராக் இணைந்து 134 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர்

கடைசி ஓவர் த்ரில்லர்

ஆட்டத்தின் கடைசி ஓவரில் 13 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் களத்தில் அஸ்வின், ரோவ்மன் பவுல் ஆகியோர் இருந்தனர். சிறப்பாக பேட் செய்து வந்த பவல் ஒரு பவுண்டரி, மூன்று 2 ரன்கள் அடித்தார். கடைசி பந்தில் 2 ரன்கள் தேவைப்பட, புவனேஷ்வர் குமார் அற்புதமாக பந்து வீசி ரோவ்மன் பவலை எல்பிடபிள்யூ முறையில் அவுட்டாக்கினார். இதன் மூலம் சன்ரைசர்ஸ் ஒரு ரன்னில் த்ரில் வெற்றி பெற்றது.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

ஹிந்துஸ்தான் தமிழ் வாட்ஸ் அப் குடும்பத்தில் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்.

IPL_Entry_Point