தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Protest: “எங்கள் எய்ம்ஸ் எங்கே?“ – 2000 பேரின் முழக்கத்தால் அதிர்ந்தது மதுரை

Protest: “எங்கள் எய்ம்ஸ் எங்கே?“ – 2000 பேரின் முழக்கத்தால் அதிர்ந்தது மதுரை

Priyadarshini R HT Tamil
Jan 24, 2023 01:16 PM IST

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமான பணிகள் தாமதமாவதை கண்டித்தும், வரும் பட்ஜெட்டில் கட்டுமான பணிக்கான நிதியை ஒதுக்கி பணிகளை துவங்க வேண்டும் என வலியுறுத்தியும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மற்றும் திமுக கூட்டணி கட்சிகள் இணைந்து மதுரை பழங்காநத்தம் பகுதியில் தொடர்முழக்க போராட்டத்தை நடத்தி வருகின்றன.

மதுரையில் நடந்த ‘எங்கள் எய்ம்ஸ் எங்கே‘ என்ற போராட்டத்தில் சு.வெங்கடேசன் எம்பி உள்ளிட்டோர்.
மதுரையில் நடந்த ‘எங்கள் எய்ம்ஸ் எங்கே‘ என்ற போராட்டத்தில் சு.வெங்கடேசன் எம்பி உள்ளிட்டோர்.

ட்ரெண்டிங் செய்திகள்

மேலும், தென்மாவட்ட மக்களின் கோரிக்கைகளான தூத்துக்குடி இருவழி ரயில்பாதை திட்டத்தை நிறைவேற்ற வேண்டும், தேசிய மருந்தியல் மற்றும் ஆராய்ச்சி நிலையத்தை (நெய்பர்) மதுரையில் துவங்க வேண்டும், 100 நாள் வேலைத்திட்டத்தை நகர்ப்புறத்திற்கும் விரிவுபடுத்தி குறைந்தபட்ச கூலியாக ரூ.600 வழங்க வேண்டும், மதுரையில் மெட்ரோ ரயில் சேவை துவக்கிட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளையும் போராட்டத்தில் முன்வைத்துள்ளனர்.

கடந்த 2018ம் ஆண்டு மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பதற்கான ஒப்புதலை மத்திய அரசு வழங்கியது. கிட்டத்தட்ட 4 ஆண்டுகள் கழித்தும் மத்திய அரசு இன்னும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. சு.வெங்கடேசன் எம்பி தொடர்ந்து முயற்சி எடுத்தும் எவ்வித பலனும் இல்லை என்பதால், இனி தொடர்ந்து போராட்டங்களை நடத்துவது என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி முடிவெடுத்துள்ளது. அதன் தொடக்கமாக இந்த தொடர் முழக்கப்போராட்டம் நடைபெறுகிறது. அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தேர்தல் பிரச்சாரத்தின்போது, ஒற்றை செங்கல்லை கையில் தூக்கி பிரச்சாரம் செய்ததைபோல், இந்த போராட்டத்தில் கலந்துகொண்டவர்கள் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டியதுடன் பணிகள் துவங்காமல் கிடப்பில் போடப்பட்டதை குறிக்கும் வகையில், ஒற்றை செங்கல்லை கைகளில் ஏந்தி போராட்டத்தில் கலந்துகொண்டது அனைவரையும் கவர்ந்தது. 

அப்போது சு.வெங்கடேசன் எம்பி கூறுகையில், 

“மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையில் படிக்கும் மாணவர்கள் பட்டம் பெறும்போது கூட அவர்களால் கல்லூரியை கண்ணால் பார்க்க முடியாது. கண்ணால் பார்க்க முடியாத கல்லூரியில் படிக்கும் மாணவர்களுக்கு பட்டம் கொடுக்கும் ஒரே பிரதமர் மோடி தான். ஏன் பிரதமர் மோடியே படிக்காமலே பட்டம் பெற்றவர் தான். அது தொடர்பான வழக்கு கூட நிலுவையில் உள்ளது. படிக்காமலேயே பட்டம் வாங்கிய பிரதமர், கல்லூரியை பார்க்காமலேயே மாணவர்கள் பட்டம் வாங்கும் அவலத்தை மாற்றவே போராடிக் கொண்டிருக்கிறோம்“ என்றார். 

IPL_Entry_Point

டாபிக்ஸ்