‘நம்மை வறுத்தெடுக்கிறார்கள்.. நெருக்கடியில் விசிக.. திமுக கூட்டணியை வெளியேற..’ திருமாவளவன் திடீர் பதிவு!
தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  ‘நம்மை வறுத்தெடுக்கிறார்கள்.. நெருக்கடியில் விசிக.. திமுக கூட்டணியை வெளியேற..’ திருமாவளவன் திடீர் பதிவு!

‘நம்மை வறுத்தெடுக்கிறார்கள்.. நெருக்கடியில் விசிக.. திமுக கூட்டணியை வெளியேற..’ திருமாவளவன் திடீர் பதிவு!

Stalin Navaneethakrishnan HT Tamil
Dec 06, 2024 01:32 PM IST

‘அப்படியே ஒருவேளை அவரோடு கூட்டணி அமைத்தால்தான் என்ன தவறு ? திருமாவுக்கு காலச் சூழலுக்கேற்ப அரசியல் செய்யத் தெரியவில்லையா? வராதுபோல் வந்த மாமணி போல் ஒரு வாய்ப்பு வரும்போது அதனைப் பயன்படுத்திக் கொள்ளுமளவுக்குச் சூழலைக் கையாளத் தெரியாமல் அவர் தடுமாறுகிறாரா? திமுக அவரை அச்சுறுத்துகிறதா?’

‘நம்மை வறுத்தெடுக்கிறார்கள்.. நெருக்கடியில் விசிக.. திமுக கூட்டணியை வெளியேற..’ திருமாவளவன் திடீர் பதிவு!
‘நம்மை வறுத்தெடுக்கிறார்கள்.. நெருக்கடியில் விசிக.. திமுக கூட்டணியை வெளியேற..’ திருமாவளவன் திடீர் பதிவு!

ஒரே மேடையில் நிற்பது தவிர்க்க முடியாதது

அந்த நாளேட்டுக்கு அப்படியொரு உள்நோக்கம் இல்லையெனில், அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தப்படாத ஒரு செய்திக்கு ஏன் அவ்வளவு முக்கியத்துவம் அளிக்க வேண்டும்? மாறுப்பட்ட கொள்கைகளும் முரண்பட்ட நிலைப்பாடுகளும் கொண்டவர்கள் பொது நிகழ்வுகளில் ஒரே மேடையில் பங்கேற்பது வாடிக்கையானது தானே! எதிரும் புதிருமாக அரசியல் களத்தில் கடுமையாக மோதிக்கொள்ளும் தலைவர்கள் கூட ஒரே மேடையில் நிற்பதும் தவிர்க்கமுடியாதது தானே!

இந்திய அமைச்சர் இராஜ்நாத் சிங் அவர்களும் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களும் ஒரே மேடையில் நின்றபோதும் அந்த நாளேடு அப்படித்தான் தலைப்புச் செய்தி வெளியிட்டதா? இந்நிலையில், இந்த நூல் வெளியீட்டு விழாவுக்கு அரசியல் உள்நோக்கம் கற்பித்து அதனைப் பூதாகரப்படுத்திய அந்த நாளேட்டின் சதி அரசியல் பற்றி ஏன் ஒருவரும் வாய் திறக்கவில்லை? அடுத்து, இந்த விழாவில் பங்கேற்க நான் ஓராண்டுக்கு முன்னரே இசைவளித்துவிட்டேன். விஜய் அவர்களின் மாநாட்டு உரைக்கு முன்னர், அவர் வருவதை அறிந்தபோதும்கூட அந்நிகழ்வில் நான் பங்கேற்பதை பதிப்பகத்தாரிடம் உறுதி செய்துவிட்டேன்.

ஆனால், அவரது மாநாட்டு உரைக்குப் பின்னர், 'அவர் நூல் வெளியீட்டு விழா மேடையில் என்ன பேசுவோரோ' என்கிற அச்சத்தை அவர்களிடம் வெளிப்படுத்தினேன். அப்போது, "அவர் துளியும் அரசியல் பேசமாட்டாரென" விகடன் தரப்பில் உறுதியளிக்கப்பட்டது. அதன்பின்னர் தான், அந்த நாளேடு இப்படியொரு தலைப்புச் செய்தியை வெளியிட்டுச் சமூக ஊடகங்களுக்குத் தீனி போட்டது. 'வெறும் வாய்க்கு அவல் கிடைத்த கதையாக' இன்று வரையிலும் பலபேர் அதனை அசைபோட்டுக் கொண்டே உள்ளனர்.

நாளேட்டின் உள்நோக்கம்

அந்த நாளேட்டின் உள்நோக்கம் பற்றி அலச விரும்பாமல் மிக இயல்பாக அதனைக் கடந்து போகிறவர்கள், விகடன் எடுத்த முடிவு பற்றியும் பேசாமல் மவுனித்திருப்பது ஏன்? அந்த நாளேட்டின் சதி அரசியல், தவெக தலைவர் விஜய் அவர்களுக்கு எந்த நெருக்கடியையும் ஏற்படுத்த வாய்ப்பில்லை. அவர் இனிமேல் தான் கூட்டணி அமைக்கப் போகிறார்.

ஆனால், விசிக ஏற்கனவே ஒரு கூட்டணியைத் தோழமை கட்சிகளோடு இணைந்து உருவாக்கியிருக்கிறது. திமுக தலைமையிலான அந்தக் கூட்டணியைக் கட்டுக்கோப்பாக வைத்திருப்பதையும் அதன்மூலம் தமிழ்நாட்டில் சனாதன சக்திகளைக் காலூன்றவிடாமல் தடுப்பதையும் தனது முதன்மையான கடமைகளாகவும் கொண்டு செயலாற்றி வருகிறது. இந்நிலையில், அந்த நாளேட்டின் உள்நோக்கத்தையும் அத்தகைய சக்திகளின் எதிர்பார்ப்புகளையும் புரிந்துகொண்டு, தொலைநோக்குப் பார்வையுடன் முடிவெடுக்கும் அரசியல் நெருக்கடியை விசிக எதிர்கொள்ள வேண்டிய சூழலுக்கு ஆளாகியது.

நம்மை வறுத்தெடுக்கிறார்கள்

யார் என்ன சொன்னாலும் அதனைப் பொருட்படுத்தாமல் விஜய் அவர்களோடு மேடையேறும் துணிச்சல்  திருமாவளவனுக்கு இல்லையா? அது அம்பேத்கர் பற்றிய நூல் வெளியீட்டுவிழா தானே; அதனை அவர் புறக்கணிக்கலாமா? திரையுலகின் சாதனையாளராகப் புகழ்பெற்ற கவர்ச்சிமிகு கதாநாயகர் விஜய் அவர்களோடு மேடை ஏறுவதற்கு கிடைத்த ஒரு அளப்பரிய வாய்ப்பை அவர் நழுவ விடலாமா?

அப்படியே ஒருவேளை அவரோடு கூட்டணி அமைத்தால்தான் என்ன தவறு ? திருமாவுக்கு காலச் சூழலுக்கேற்ப அரசியல் செய்யத் தெரியவில்லையா? வராதுபோல் வந்த மாமணி போல் ஒரு வாய்ப்பு வரும்போது அதனைப் பயன்படுத்திக் கொள்ளுமளவுக்குச் சூழலைக் கையாளத் தெரியாமல் அவர் தடுமாறுகிறாரா? திமுக அவரை அச்சுறுத்துகிறதா? அந்த அச்சுறுத்தலுக்கு அவர் பணிந்து விட்டாரா? திமுக கூட்டணியை விட்டு வெளியேற அவரை எது தடுக்கிறது?

இவ்வாறு சிலர் தங்களின் எதிர்பார்ப்பு நிறைவேறாத நிலையில் பல்வேறு ஊகங்களை ஊடகங்களில் அள்ளி இறைத்து நம்மை வறுத்தெடுக்கிறார்கள். இவர்களில் பெரும்பாலோர், திமுக கூட்டணியை உடைக்க வேண்டுமென்கிற செயல் திட்டத்தோடு நாளொருமேனியும் பொழுதொரு வண்ணமும் ஏதேதோ பிதற்றிக் கொண்டிருப்பவர்கள்.

அதை ஏன் எவரும் அலசவில்லை

இவர்களில் யாரும், விகடன் பதிப்பகம் ஏன் ஏற்கனவே இசைவளித்த திருமாவளவனை விட்டு விட்டு நிகழ்ச்சியை நடத்திட முடிவெடுத்தது?- என்கிற கேள்வியை எழுப்பவில்லை. "விஜய் போதும்; திருமா தேவையில்லை " என்கிற முடிவை விகடனால் எப்படி எடுக்க முடிந்தது?அதற்கு என்ன காரணமாக இருக்கமுடியும்? -என்று எவரும் அலசவில்லை.

மாறாக, விஜயோடு நிற்பது தனக்குப் பெருமையென கருதி திருமாவளவன் மேடைக்கு வருவார் என்றும்; அல்லது தேர்தலில் போட்டியிடக் கூடுதல் இடங்கள், அதிகாரப்பகிர்வு என ஆசைப்பட்டு திருமாவளவன் விஜய் அவர்களோடு கைகோர்ப்பார் என்றும்; அல்லது அதே வேட்கையோடு திமுக கூட்டணியை விட்டு வெளியேறி அதிமுகவோடு இணைவார் என்றும் தான், அவர்கள் நம்மைப் பற்றி கணக்குப் போடுகிறார்கள்.

இதுதான் நம்மைப் பற்றிய அவர்களின் மதிப்பீடு! அது நிறைவேறவில்லை என்றதும் தான், வாய்க்கு வந்தபடி அவதூறுகளை அள்ளி இறைக்கின்றனர். அவை, 'தங்களின் செயல்திட்டத்தைத் திருமாவளவன் நொறுக்கிவிட்டானே' என்று ஆதங்கப்படுவோர் அள்ளி வீசும் அமில வசவுகள்.

அவற்றுக்குச் செவிமடுக்க வேண்டாம். வழக்கம்போல கடந்து செல்வோம். நம்மை அச்சுறுத்துவதற்கும் நம்மை அவர்களின் கட்டுக்குள் வைத்திருப்பதற்கும் இங்கே எவரால் முடியும்? கடந்த கால் நூற்றாண்டு காலத் தேர்தல் அரசியலிலும் அதற்கு முன்னர் பத்தாண்டு காலத் தேர்தல் புறக்கணிப்பு அரசியல் களத்திலும் எத்தனை எத்தனை அடக்குமுறைகளையும் அச்சுறுத்தல்களையும் நாம் எதிர் கொண்டிருப்போம்?

சிறுத்தைகளுக்கு வலை வீச முடியுமா?

எவ்வளவுக்கு எவ்வளவு அவதூறுகளையும் அடாப்பழிகளையும் நாம் சந்தித்திருப்போம்? யாவற்றையும் பொறுத்து, அவதூறுகளைச் சகித்து, ஆதிக்கம் எதிர்த்து, அடக்குமுறைகள் தகர்த்து, சதிவலைகள் அறுத்து, சமத்துவக் களத்தில் வேரூன்றி நிலைத்து, கொள்கை பகைவீழ்த்தத் துளியும் சலிப்பின்றிச் சோர்வின்றித் துணிவுடன் போராடும் வாதாடும்சிறுத்தைகளை விலை பேசவும்; சிறுத்தைகளுக்கு வலை வீசவும்; இங்கே ஆற்றல் எவருக்குண்டு?

எவரும் உளறட்டும்!

ஏளனம் பேசட்டும்!

எதுவும் சொல்லட்டும்!

எள்ளல் செய்யட்டும்!

இழிவாய் தூற்றட்டும்!

இகழ்ந்து மகிழட்டும்!

அஞ்சுவது அஞ்சல்

அறிவார்த் தொழில்!

அய்யன் வள்ளுவனின்

அறன்விளையும் அறிவுரை!

பனைமரத்தடியில்

பால் அருந்தினாலும்

காண்பவர் கண்களுக்கு

கள்ளருந்துவதாகத் தானே

தோன்றும்?

அதன்படி, பொதுமக்கள்

நம்மீது கொண்டுள்ள

நம்பிக்கைக்குப் பாத்திரமாக

நடந்து கொள்வதே தற்போதைய

நமது முதன்மையான கடமை!

எனவே,

யாதுமுணர்ந்தே தவிர்த்தோம்!

-பகையின்

சூதுமறிந்தே தகர்த்தோம்!

என்று திருமாவளவன் அந்த எக்ஸ் பக்க அறிக்கையில் கூறியுள்ளார்.

Whats_app_banner

டாபிக்ஸ்

மேலும் தமிழ்நாட்டின் சமீபத்திய செய்திகள், குற்றச் செய்திகள் , ட்ரெண்டிங் செய்திகள் , அரசியல் செய்திகளை , இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் செய்தி தளத்தின் தமிழ்நாடு பிரிவில் பார்க்கவும்.