விஜய் செய்யும் Work From Home அரசியல்.. 2026ல் எடுபடுமா? ஸ்கோர் செய்ய தவறியது ஏன்!
எதுவுமே செய்யாமல், ட்விட்டர் என்கிற எக்ஸ் தளத்தில் மட்டும் அறிக்கை வெளியிட்டு, 2026 தேர்தலை எதிர்கொள்ளப் போகிறாரா விஜய்? மாற்று சக்தியாக வரத்துடிக்கும் விஜய், நிறைய மாற்றங்களை செய்ய வேண்டியிருக்கிறது

விக்கிரவாண்டியில் வி.சாலையில் விஜய் மாநாடு. இப்படி தான், விஜய் கட்சியின் தொடக்கம், ஒவ்வொரு நாள் அறிக்கையில், பரபரப்பானது. ஒருவழியாக மாநாடு நடத்தி, கட்சியின் கொள்கையை அறிவித்த தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், அதன் பிறகு, அனல் பறக்கும் அரசியலில் இறங்குவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அவர் நடித்து வரும் படங்களின் அப்டேட் மட்டும் தான் வருகிறதே தவிர, அரசியல் சத்தம் அறவே இல்லாமல் போனது.
ஸ்கோர் செய்ய தவறிய விஜய்
இந்த நேரத்தில் தான், ஃபெஞ்சல் புயல் வடமாவட்டங்களில் ஒரு காட்டு காட்டிச் சென்றத. கடலூர், விழுப்புரம், திருவண்ணாமலை, சேலம், கிருஷ்ணகிரி, தர்மபுரி என பெரும்பாலான மாவட்டங்கள், புயலின் தாக்கத்தாலும், திறக்கப்பட்ட அணை நீரின் கோரத்தாலும், தங்கள் வாழ்வாதாரத்தை இழந்து தவித்துக் கொண்டிருக்கிறார்கள்.
பிரதான எதிர்கட்சிகள் களத்தில் இறங்கி, சம்பவம் செய்து கொண்டிருக்கிறார்கள். சம்பவம் செய்வார் என்று எதிர்பார்க்கப்பட்ட விஜய், சத்தமே இல்லாமல் இருந்தார். தாமதமாக ஒரு அறிக்கை வந்தது. அத்தோடு முடித்திருந்தால் கூட பரவாயில்லை. பாதிக்கப்பட்ட மக்களை தனது தலைமை கழக அலுவலகமான பனையூருக்கு வரவைத்து, அவர்களுக்கு நிவாரணம் வழங்கியிருக்கிறார் விஜய்.
