தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Upsc Exam: யுபிஎஸ்சி தேர்வு விண்ணப்பங்களில் திருத்தம் செய்ய வாய்ப்பு

UPSC Exam: யுபிஎஸ்சி தேர்வு விண்ணப்பங்களில் திருத்தம் செய்ய வாய்ப்பு

Priyadarshini R HT Tamil
Feb 15, 2023 12:57 PM IST

இந்திய ஆட்சிப் பணி (ஐஏஎஸ்) உள்ளிட்ட குடிமைப் பணித்தேர்வுக்கான விண்ணப்பத்தை நிறைவு செய்து சமர்ப்பித்த பிறகு அதைத் திரும்பப் பெற முடியாது என்றும், விண்ணப்பத்தில் ஏதேனும் திருத்தங்களை மேற்கொள்ள விண்ணப்பதாரர்கள் விரும்பினால் அதற்கான வசதி வரும் 22ம் தேதி முதல் 28ம் தேதி வரை வழங்கப்படும்.

கோப்புப்படம்.
கோப்புப்படம்.

ட்ரெண்டிங் செய்திகள்

இந்திய ஆட்சிப் பணி, இந்திய காவல் பணி (ஐபிஎஸ்), இந்திய வெளியுறவுப் பணி (ஐஎஃப்எஸ்), இந்திய வருவாய் பணி (ஐஆர்எஸ்) உள்ளிட்ட குடிமைப் பணி அதிகாரிகளைத் தேர்வு செய்வதற்கான தேர்வை மூன்று நிலைகளில் யுபிஎஸ்சி ஆண்டுதோறும் நடத்தி வருகிறது.

நடப்பு ஆண்டு தேர்வுக்கான அறிவிக்கை கடந்த 1ம் தேதி வெளியிடப்பட்டது. நடப்பாண்டில் 1,105 அதிகாரிகளைத் தேர்வு செய்ய யுபிஎஸ்சி திட்டமிட்டுள்ளது. குடிமைப் பணிகளுக்கான முதல்நிலைத் தேர்வு மே மாதம் 28ம் தேதி நடைபெறவுள்ளது. தேர்வுக்கான விண்ணப்ப காலம் கடந்த 1ம் தேதி தொடங்கியது. வரும் 21ம் தேதியுடன் விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் நிறைவடையவுள்ளது.

இந்நிலையில், விண்ணப்பத்தை சமர்ப்பித்த பிறகு அதைத் திரும்பப்பெறும் வசதி இனி விண்ணப்பதாரர்களுக்கு வழங்கப்படாது என யுபிஎஸ்சி அறிவித்துள்ளது. இந்த வசதியைக் கடந்த 2018ம் ஆண்டில் யுபிஎஸ்சி அறிமுகப்படுத்தியிருந்தது. குடிமைப் பணிகள் தேர்வுக்கு ஆண்டுதோறும் சுமார் 10 லட்சம் பேர் விண்ணப்பிக்கும் நிலையில், அவர்களில் பாதி பேர் மட்டுமே தேர்வு எழுதுவதைக் கருத்தில்கொண்டு விண்ணப்பத்தைத் திரும்பப்பெறும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டது.

இனி அந்த வசதி வழங்கப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது. அதே வேளையில், விண்ணப்பத்தில் ஏதேனும் திருத்தங்களை மேற்கொள்ள விண்ணப்பதாரர்கள் விரும்பினால் அதற்கான வசதி வரும் 22ம் தேதி முதல் 28ம் தேதி வரை வழங்கப்படும் என யுபிஎஸ்சி அறிவித்துள்ளது.

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

IPL_Entry_Point

டாபிக்ஸ்