Tamil News  /  Tamilnadu  /  Tiruvannamalai North District Secretary Pagalavan Suspended From Vck
விசிக தலைவர் தொல்.திருமாவளவன் - கோப்புபடம்
விசிக தலைவர் தொல்.திருமாவளவன் - கோப்புபடம்

காவலர்களை இழிவாக விமர்சித்த விசிக மாவட்ட செயலாளர் சஸ்பெண்ட்: திருமாவளவன் அதிரடி

30 January 2023, 14:51 ISTKarthikeyan S
30 January 2023, 14:51 IST

VCK District Secretary Suspended: விடுதலை சிறுத்தைகள் கட்சியின் திருவண்ணாமலை வடக்கு மாவட்ட செயலாளர் பகலவன் கட்சியில் இருந்து இடை நீக்கம் செய்யப்படுவதாக அக்கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் அறிவித்துள்ளார்.

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் நடைபெற்ற போராட்டத்தின் போது காவலர்களை இழிவாக விமர்சித்ததாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில், அந்த மாவட்ட செயலாளரை இடை நீக்கம் செய்து அக்கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் உத்தரவிட்டுள்ளார்.

ட்ரெண்டிங் செய்திகள்

இது குறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில்," திருவண்ணாமலை வடக்கு மாவட்ட செயலாளர் கட்சியின் நன்மதிப்புக்கு ஊறு விளைவிக்கும் வகையில் செயல்பட்டிருப்பது அதிர்ச்சியளிக்கிறது. உழைக்கும் மக்களின் உரிமைகளை நசுக்கும் காவல்துறை உள்ளிட்ட அதிகார வர்க்கத்தின் அடக்குமுறைகளுக்கு எதிராகப் போராடுவது பாராட்டுதலுக்குரியதே.

எனினும் கட்சியின் நலன் மற்றும் மக்கள் நலன்களைக் கருத்தில் கொண்டு அவற்றின் அடிப்படையிலான கட்டுப்பாடுகளை மீறாமல் செயலாற்றுவது இன்றியமையாததாகும். அவ்வாறின்றி சிலர் பொதுவெளியில் நடந்து கொண்ட போக்குகள் கவலையளிப்பவையாக உள்ளன.எனவே,இதற்கு பொறுப்பேற்க வேண்டிய மாவட்ட செயலாளர் பகலவன் அவர்கள். மூன்று மாத காலத்துக்கு இடைநீக்கம் செய்யப்படுகிறார்.

இது குறித்து முழுமையாக விசாரிப்பதற்கு மாநிலப் பொறுப்பாளர் ஒருவர் தலைமையில் விசாரணைக் குழு பின்னர் நியமிக்கப்படும்." இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

முன்னதாக, திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில் கடந்த 26 ஆம் தேதி விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் அனுமதியின்று ஊர்வலமாக சென்றனர். காவல் நிலையம் அருகே சென்ற விசிகவினர், காவல்துறையினரை ஒருமையில் திட்டியதோடு, கொலை மிரட்டல் விடுக்கும் தோணியில் பேசியதாக குற்றச்சாட்டு எழுந்தது. இது குறித்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.

காவல்துறையினரை அவதூறாக பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலாளர் பகலவன் உள்பட 50க்கும் மேற்பட்டோர் மீது ஜாமீனில் வெளிவர முடியாதபடி 9 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துனர். இதில், 10 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், தலைமறைவாக உள்ள பகலவன் உள்ளிட்டோரை தனிப்படை அமைத்து போலீசார் தேடி வருகின்றனர்.

இந்த நிலையில், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் திருவண்ணாமலை வடக்கு மாவட்ட செயலாளர் பகலவன் கட்சியில் இருந்து இடை நீக்கம் செய்யப்படுவதாக அக்கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் அறிவித்துள்ளார்.

 

 

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

டாபிக்ஸ்