தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Sethil Balaji Arrest : ‘அமைச்சர் செந்தில் பாலாஜியின் இதய பிரச்னை’ – மருத்துவர் கிளப்பும் சந்தேகங்கள் என்ன?

Sethil Balaji Arrest : ‘அமைச்சர் செந்தில் பாலாஜியின் இதய பிரச்னை’ – மருத்துவர் கிளப்பும் சந்தேகங்கள் என்ன?

Priyadarshini R HT Tamil
Jun 16, 2023 11:45 AM IST

Senthil Balaji Arrest : 47 வயது நிரம்பியவருக்கு அடைப்புகள் இருப்பது இயற்கையே. அடைப்பின் அளவைப் பொறுத்தே (80 சதவீத அடைப்பிற்கு மேல் இருந்தால் அறுவைசிகிச்சை தேவைப்படலாம்) அறுவைசிகிச்சை தீர்மானிக்கப்படும் என்பது விதியெனில், அதுகுறித்து எந்த தகவலும் ஏன் இல்லை?

திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டு மருத்துவமனைக்கு அழைத்துச்செல்லப்படும் அமைச்சர் செந்தில் பாலாஜி
திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டு மருத்துவமனைக்கு அழைத்துச்செல்லப்படும் அமைச்சர் செந்தில் பாலாஜி (PTI)

ட்ரெண்டிங் செய்திகள்

பின்னர் அமைச்சரின் மனைவி தொடர்ந்த வழக்கில் அமைச்சருக்கான சிகிச்சையை தனியார் மருத்துவமனையில் மேற்கொள்ள உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

ஆனால் தனியார் மருத்துவமனையில் அனுமதிப்பதற்கு முன் அமலாக்கத்துறை சார்பாக, எய்ம்ஸ் மருத்துவக் குழு (மாநிலம் அல்லாத மத்தியக் குழு) பரிசோதிக்க வேண்டும் எனும் கோரிக்கையை நீதிமன்றம் நிராகரித்தது.

தனியார் மருத்துவமனையில் இதய அறுவைசிகிச்சை முடிந்த பின் அமலாக்கத்துறையால் நியமிக்கப்படும் மருத்துவர் குழு அமைச்சரை பரிசோதிக்கலாம் என்றும், ஆய்வு முடிவுகளை கேட்டுப் பெறலாம் என்றும் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

இதில் மருத்துவ ரீதியலான சில கேள்விகளை மருத்துவர் புகழேந்தி முன் வைக்கிறார்.

அவை

• மூன்று ரத்தக் குழாய்களின் அடைப்பு கைதிற்கு முன் இருந்ததா? (முந்தைய நாளில்) இல்லையா? இருந்தது எனில் அவருக்கு முந்தைய நாளில் ஏன் நெஞ்சு வலி ஏற்படவில்லை?

• மூன்று ரத்தக் குழாய்களில் அடைப்பு ஒரே நாளில் நடக்குமா? அல்லது பல மாதங்களாக, ஆண்டுகளாக நடந்திருக்குமா?

• மூன்று ரத்தக் குழாய்களில் அடைப்பு என ஓமந்தூரார் மருத்துவமனை அறிக்கை கூறும்போது அடைப்பின் அளவு, எத்தனை சதவீதம் என ஏன் வெளியிடப்படவில்லை?

• 47 வயது நிரம்பியவருக்கு அடைப்புகள் இருப்பது இயற்கையே. அடைப்பின் அளவைப் பொறுத்தே (80 சதவீத அடைப்பிற்கு மேல் இருந்தால்அறுவைசிகிச்சை தேவைப்படலாம்) அறுவைசிகிச்சை தீர்மானிக்கப்படும் என்பது விதியெனில், அதுகுறித்து எந்த தகவலும் ஏன் இல்லை?

• ஒருமுறை இதயம் சுருங்கி விரியும்போது எவ்வளவு ரத்தம் வெளியேற்றப்படுகிறது?- (Ejection Fraction) என்பது முக்கியம். 60 சதவீதத்துக்கு மேல் EF இருந்தால் அது வழக்கமான அளவு. அதை வைத்துதான் (அது மிகக் குறைவாக இருந்தால் அறுவைசிகிச்சை தேவைப்படலாம்) அறுவைசிகிச்சை தேவையா? என மருத்துவ ரீதியாக முடிவெடுக்க முடியும். அதை வெளியிடாமலும், அடைப்பின் அளவை வெளியிடாமலும் அறுவைசிகிச்சை உடனடித் தேவை என அறிக்கை வெளியிடுவது சரியா?

• அமைச்சர் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு கொடுக்க உறுதியளித்த நிலையில் எய்ம்ஸ் மருத்துவக் குழு,தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவதற்கு முன் பரிசோதிப்பதை ஏன் நீதிமன்றம்/அமைச்சர் தரப்பு தடுக்க/மறுக்க வேண்டும்?

• அரசு மருத்துவர்கள் சங்கம், ஓமந்தூரார் மருத்துவமனை நிபுணர்களின் கருத்தை ஏன் பிற அமைப்புகள் (அமலாக்கத்துறை) நம்பாமல் இருக்க வேண்டும்? அது முறையல்ல என வாதிடும்போது ஏன் சிகிச்சையை (அறுவைசிகிச்சை)அரசு மருத்துவமனையில் வைத்துக்கொள்ளவில்லை. மாறாக தனியாருக்கு மாற்ற வேண்டும் என கூறுவதற்கு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை? அரசு மருத்துவமனையில் தரமான சிகிச்சை கிடைக்கவில்லையா?

• வெளிப்படைத் தன்மை கருதி அமலாக்கத்துறையின் எய்ம்ஸ் மருத்துவர் குழு அமைச்சரை பரிசோதிப்பது குறித்து ஏன் அறிக்கை வெளியிட அரசு மருத்துவர் சங்கம் தயங்க வேண்டும்?

• அமைச்சர் தர, தரவென்று இழுத்துச் செல்லப்பட்டார்; கைகள் முறுக்கப்பட்டது, அடித்து துன்புறுத்தப்பட்டார் என்றால் அதற்கான ஆதாரங்களை வெளியிட தயக்கமென்ன?

• மற்றொரு அமைச்சர் பாதிக்கப்பட்ட அமைச்சரை அழைத்தபோது, சுயநினைவற்று இருந்தார் எனில், சிறிது நேரத்தில் முதலமைச்சர் வந்தபோது, அமைச்சர் ஓரளவு தெளிவான நிலையில் இருந்ததற்கான மருத்துவ ரீதியான விளக்கங்கள் என்ன?

செந்தில் பாலாஜி விவகாரத்தில் அறிவியல், மருத்துவ கருத்துகளின் அடிப்படையில் வெளிப்படைத் தன்மையுடன் முடிவுகள் எடுப்பது மக்கள் மத்தியில் நிலவும் சந்தேகங்களை நிச்சயம் போக்கும் என்பதால், அரசும், மருத்துவத்துறையும் அதை பின்பற்றினால் நல்லது. 

அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ஏற்கனவே ஹெப்பாரின் ஊசி, ஆஸ்ப்பிரின் மாத்திரை கொடுக்கப்பட்டு, அவை (இரண்டும் ரத்தம் உறையாமல் இருக்க கொடுக்கப்படும் மருந்துகள்) நேற்றுதான் நிறுத்தப்பட்டுள்ளது. இதனால், அடுத்த 3 - 5 நாட்களுக்கு அமைச்சருக்கு இதய இருதயஅறுவை சிகிச்சை செய்ய முடியாது என்றும், அதுவரை அவர் தனியார் மருத்துவமனையில் கண்காணிப்பில் இருப்பார் என்றும் சமீபத்தில் செய்தி வெளியாகியுள்ளது.

எனில், அரசு ஓமந்தூரார் மருத்துவமனை அறிக்கை இதைப்பற்றி ஒன்றும் கூறாமல் உடனடி அறுவைசிகிச்சைக்கான தேவை உள்ளது என்று மட்டும் கூற காரணமென்ன? அமைச்சர் ரத்தம் உறையாமல் இருக்க மருந்துகள் எடுப்பது அரசு ஓமந்தூரார்  மருத்துவர்களுக்கு தெரிவிக்கப்படவில்லையா? அமைச்சர் அந்தமருந்துகளை கைதுக்கு முன்பே எடுத்து வருவது உண்மையா?

எனவே உண்மை தகவல்கள் வேண்டுமெனில், அதற்கு அமலாக்கத்துறையின் மருத்துவர் குழு அமைச்சரை பரிசோதிக்க அனுமதி வழங்கப்படுதல் மூலம் மட்டுமே அது சாத்தியம். 

அமைச்சர் விசாரணைக்கு ஒத்துழைக்க உறுதியாக இருக்கும் போது மாநில அரசின் மருத்துவ அறிக்கையில் உண்மை இருக்கும் பட்சத்தில் அமலாக்கத்துறை மருத்துவர் குழு அமைச்சரை பரிசோதிப்பதில் என்ன பிரச்சனை உள்ளது? 

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

IPL_Entry_Point

டாபிக்ஸ்