தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Theeran Chinnamalai Memorial Day: தீரன் சின்னமலை 218வது நினைவு நாள் - தலைவர்கள் மரியாதை

Theeran Chinnamalai Memorial Day: தீரன் சின்னமலை 218வது நினைவு நாள் - தலைவர்கள் மரியாதை

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
Aug 03, 2023 01:24 PM IST

சுதந்திர போராட்ட வீரர் தீரன் சின்னமலை நினைவுநாளையொட்டி அரசியல் தலைவர்கள் பலரும் அவரது திருவுருவ சிலைக்கு மரியாதை செலுத்தியதுடன், அவரை போற்றும் விதமாக பதிவுகளை பகிர்ந்து வருகின்றனர்.

தீரன் சின்னமலைக்கு அரசியல் தலைவர்கள் மரியாதை
தீரன் சின்னமலைக்கு அரசியல் தலைவர்கள் மரியாதை

ட்ரெண்டிங் செய்திகள்

இதையடுத்து தீரன் சின்னமலையின் 218ஆம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு அவருக்கு அரசியல் கட்சி தலைவர்கள் மரியாதை செலுத்தியுள்ளனர். அத்துடன் தங்களது சமூக வலைத்தள பக்கத்திலும் தீரன் சின்னமலை குறித்து பதிவுகளை பகிர்ந்துள்ளனர்.

சென்னை கிண்டி திரு.வி.க. தொழிற்பேட்டை வளாகத்தில் அமைந்துள்ள தீரன் சின்னமலை திருவுருவ சிலைக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று காலை மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

இதைத்தொடர்ந்து சட்டப்பேரவை எதிர்கட்சி தலைவரும், அதிமுக பொது செயாளருமான எடப்பாடி பழனிசாமி தீரன் சின்னமலை சிலைக்கு மாலை அணிவித்து, மலர் தூவி மரியாதை செலுத்தினார். இந்த நிகழ்வின்போது முன்னாள் அமைச்சர்கள் ஜெயக்குமார், பா. வளர்மதி, பொன்னையன், கோகுல இந்திரா உள்பட கட்சியின் மூத்த நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டனர்.

தீரன் சின்னமலை நினைவு நாள் தொடர்பாக பாமக நிறுவனர் ராமதாஸ் பகிர்ந்த டுவிட்டர் பதிவில், "ஆங்கிலேயரை வீழ்த்திய வீரத்தின் விளைநிலம் தீரன் சின்னமலை நினைவை போற்றுவோம்!

ஆங்கிலேயர்களை அஞ்ச வைத்த வீரத்திற்கும், தீரத்திற்கும் சொந்தக்காரரான கொங்கு நாட்டு மன்னர் தீரன் சின்னமலையின் 219-ஆவது நினைவுநாள் இன்று. தீரன் சின்னமலை என்றாலே அவரது வீரமும், வெற்றிகளும் தான் நினைவுக்கு வரும்.

1801-இல் ஈரோடு காவிரிக்கரையிலும், 1802-இல் ஓடாநிலையிலும், 1804-இல் அறச்சலூரிலும் ஆங்கிலேயர்களுடன் நடைபெற்ற போர்களில் சின்னமலை பெரும் வெற்றி பெற்றார். போரில் சின்னமலையை வெல்ல முடியாது என்பதை அறிந்த ஆங்கிலேயர்கள் சூழ்ச்சி மூலம், சின்னமலையைக் கைது செய்து சங்ககிரிக் கோட்டைக்குக் கொண்டு சென்று தூக்கிலிட்டனர். ஒரு தீரன் சூழ்ச்சியால் வீழ்த்தப்பட்ட நாள் இன்று.

தீரன் சின்னமலையில் வீர வரலாறு மாணவர்களுக்கு கற்பிக்கப்பட வேண்டும். தீரன் சின்னமலையின் வரலாற்றை அடுத்த தலைமுறையினரும் அறிந்து கொள்ளும் வகையில் பாடப்புத்தகத்தில் சேர்க்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். தீரன் சின்னமலையின் நினைவு நாளில் அவரது வீரத்தையும், தீரத்தையும் போற்றுவோம்!" என்று குறிப்பிட்டுள்ளார்.

பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் பகிர்ந்து டுவிட்டர் பதிவில், "இந்திய விடுதலைப் போராட்டத்தின் ஈடு இணையற்ற புரட்சியாளர் தீரன் சின்னமலை எனப்படும் தீர்த்தகிரி கவுண்டர் சூழ்ச்சியாலும், சதியாலும் வீழ்த்தப்பட்டதன் 219-ஆம் நினைவு நாள் இன்று. ஆங்கிலேயர்களைக் கண்டு பிற மன்னர்கள் அஞ்சிய நிலையில், ஆங்கிலேயர்களை அடுத்தடுத்து மூன்று போர்களில் வீழ்த்தி அஞ்ச வைத்த வரலாறு தீரனுக்கு உண்டு.

வீரத்தின் விளைநிலமாக திகழ்ந்த அவர், கொடைகளை வழங்குவதில் கோமானாக திகழ்ந்தார். தன்னிடமிருந்த பணத்தை மக்களுக்கு வாரி வழங்கியவர். கொங்கு நாட்டில் இருந்து மைசூர் மன்னரால் வசூலித்துச் செல்லப்பட்ட வரிப்பணத்தை பறித்து ஏழை, எளிய மக்களுக்கு வழங்கிய வீரன் சின்னமலை.

இளம் வயதிலேயே எண்ணற்ற சாதனைகளை படைத்து, வரலாற்றில் இடம் பெற்ற தீரன் சின்னமலையில் தியாகங்கள் இன்னும் மக்களிடம் முழுமையாக சென்றடையவில்லை. அதை மக்களிடம் கொண்டு செல்ல வேண்டியதும், அவரைப் போலவே அநீதிகளை எதிர்த்து போராட வேண்டியதும் நமது கடமை. அந்தக் கடமையை நிறைவேற்ற இந்த நாளில் நாம் உறுதியேற்றுக் கொள்வோம்" என்று குறிப்பிட்டுள்ளார்.

அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுசெயலாளர் டிடிவி தினகரன், சென்னை கிண்டியில் அமைக்கப்பட்டிருக்கும் தீரன் சின்னமலை சிலைக்கு மரியாதை செலுத்தினார்.

தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை சார்பில் தீரன் சின்னமலை தொடர்பாக பகிர்ந்த பதிவில், " தீரன் சின்னமலையின் நெருங்கிய நண்பராய், ஆங்கிலேயர்களுக்கு சிம்ம சொப்பனமாய் திகழ்ந்து, தாய்த் திருநாட்டின் விடுதலைக்காக, தூக்குக் கயிற்றை முத்தமிட்டு உயிர்த் தியாகம் செய்த வீரன் குணாளன் நாடார் நினைவு தினம் இன்று.

கட்டுத்தடிக்காரன் என்று அழைக்கப்படும் குணாளன் நாடார், மாவீரனாய், இரக்க குணம் மிகுந்தவராய்த் திகழ்ந்தவர். கொங்கு மண்டலத்தில் இவர் குறித்த நாட்டுப்புறப் பாடல்கள் இன்றும் பாடப்படுகின்றன.

அன்றைய காலத்தில் இளைஞர்களிடையே விடுதலை வேட்கையை ஏற்படுத்தியதில், தீரன் சின்னமலையுடன் இணைந்து செயல்பட்ட குணாளன் நாடார் அவர்கள் புகழைப் போற்றி வணங்குகிறோம்." என்று குறிப்பிட்டுள்ளார்.

இதேபோல் அமைச்சர்களும், முன்னாள் அமைச்சர்களும் தீரன் சின்னமலை நினைவை போற்றும் விதமாக டுவிட்டரில் அஞ்சலி செலுத்தியுள்ளனர்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

 

IPL_Entry_Point

டாபிக்ஸ்