‘நம்முடைய இலக்கு நாடாளுமன்றத் தேர்தல்-புதுவையையும் சேர்த்து 40-க்கு 40’-முதல்வர்
Tamilnadu CM Stalin: "1949-ஆம் ஆண்டு வட சென்னை பகுதியில் ராபின்சன் பூங்காவில் கொட்டும் மழையில் பேரறிஞர் அண்ணா இந்த இயக்கத்தைத் தொடங்கினார்."
‘நம்முடைய இலக்கு நாடாளுமன்றத் தேர்தல்-புதுவையையும் சேர்த்து 40-க்கு 40’ என்று தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
இன்று (11-03-2023) திமுக தலைவரும் தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் முன்னிலையில், கோயம்புத்தூர் மாவட்டம், சின்னியம்பாளையத்தில், ஒருங்கிணைந்த கோயம்புத்தூர் மாவட்டக் கழகத்தின் சார்பில் மாற்றுக்கட்சிகளைச் சேர்ந்தவர்கள் கழகத்தில் இணைந்தனர்.
நிகழ்ச்சில் கழகத் தலைவர் அவர்கள் ஆற்றிய உரையின் விவரம்:
திராவிட முன்னேற்றக் கழகத்தைப் பொறுத்தவரை, நாம் தாய்க்கழகம், தாய்க்கழகம் என்று சொல்கிறோம். இதற்கு என்ன காரணம் என்று கேட்டால், இந்தக் கழகத்திற்கென்று ஒரு வரலாறு இருக்கிறது.
ஏதோ இந்தக் கட்சியை தொடங்கிய நேரத்தில் அறிஞர் அண்ணா ஆட்சிக்கு வந்தே தீரவேண்டும், ஆட்சிப் பொறுப்புக்காக இந்த இயக்கம் துவக்கப்படுகிறது என்று இந்தக் கட்சியைத் தொடங்கவில்லை.
1949-ஆம் ஆண்டு வட சென்னை பகுதியில் ராபின்சன் பூங்காவில் கொட்டும் மழையில் பேரறிஞர் அண்ணா இந்த இயக்கத்தைத் தொடங்கினார். தொடங்கி வைத்த நேரத்தில் மிகத் தெளிவாக எடுத்துச் சொன்னார்கள், இந்தக் கழகம் ஆட்சிக்காக மட்டுமல்ல, இந்த நாட்டில் இருக்கும் ஏழை எளிய மக்களுக்கு, விவசாயப் பெருங்குடி மக்களுக்கு, நெசவாளத் தோழர்களுக்கு, தொழிலாளர் நண்பர்களுக்கு, பிற்படுத்தப்பட்ட அடித்தளத்தில் வாழ்ந்து கொண்டிருக்கும் மக்களுக்கு, ஒட்டுமொத்தமாக இந்தத் தமிழ் இனத்திற்காக, தமிழ்ச் சமுதாயத்திற்காக இந்தக் கழகம் தொடங்கப்படுகிறது, உருவாக்கப்படுகிறது என்றுதான் அறிஞர் அண்ணா அவர்கள் இந்த இயக்கத்தை உருவாக்கித் தந்தார்கள்.
நீங்கள் ஒன்றை எண்ணிப் பார்க்க வேண்டும். நாட்டில் இன்றைக்கு எத்தனையோ கட்சிகள் இருக்கிறது.
வரலாற்றில் இடம்பெற்றிருக்கக்கூடிய கட்சிகளும் உண்டு, அப்படி அந்த உணர்வோடு தோன்றிய கட்சிகளின் செயல்பாடுகளைப் பார்த்துக் கொண்டிருக்கிறோம்.
ஆனால், திராவிட முன்னேற்றக் கழகம் அப்படியல்ல. அதைத்தான் அண்ணா தொடங்குகிறபோதே சொன்னார், ஆட்சிக்காக மட்டுமல்ல.
நீங்கள் ஒன்றை மறந்துவிடக் கூடாது. 1949-இல் தொடங்கி நாம் எப்போது முதல்முறையில் தேர்தல் களத்தில் ஈடுபட்டோம், 1949-இல் தொடங்கி அதற்குப் பிறகு நடைபெற்றிருக்கக்கூடிய தேர்தலில் 1952-இல் நடந்த தேர்தலில் நாம் ஈடுபடவில்லை, 1957-ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில்தான் முதன்முதலில் திராவிட முன்னேற்றக் கழகம் களத்தில் இறங்கியது.
அதுவும் 1957-ஆம் ஆண்டு தேர்தலில் ஈடுபடலாமா, களத்தில் இறங்கலாமா என்று அறிஞர் அண்ணா திருச்சியில் நடைபெற்ற மாநில மாநாட்டில், அந்த மாநாட்டில் திரண்டிருக்கும் மக்களிடத்தில் ஒரு பெட்டியை வைத்து 1957-ஆம் ஆண்டு நடைபெறும் தேர்தலில் ஈடுபடலாமா?
வேண்டாமா? என்பதை வந்திருக்கும் கழகத் தோழர்கள், கட்சி நிர்வாகிகள், செயல் வீரர்கள் நீங்கள் சொல்லுங்கள், வாக்களியுங்கள், நீங்கள் முடிவு செய்யுங்கள் என்று ஒரு சீட்டு தரப்பட்டது.
அந்தச் சீட்டில் அத்தனை பேரும் தேர்தலில் ஈடுபடலாமா? வேண்டாமா? என்பதை எழுதி அந்தப் பெட்டியில் போட்டார்கள்.
அதற்குப் பிறகு பெட்டியைத் திறந்து, அந்தச் சீட்டை எண்ணிப்பார்த்த போது, தேர்தலில் ஈடுபடலாம் என்று அதிகமான பேர் ஆதரவு தந்தார்கள், வாக்களித்திருந்தார்கள்.
அதற்குப் பிறகுதான் 1957-ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றப் பொதுத் தேர்தலில், நாடாளுமன்றத் தேர்தலில் நாம் ஈடுபட்டோம்.
அண்ணாவின் மறைவிற்குப் பிறகு, கலைஞர் முதலமைச்சராகப் பொறுப்பேற்கிறார். முதலமைச்சராகப் பொறுப்பேற்றதற்குப் பிறகு 1971-இல் மீண்டும் சட்டமன்றத் தேர்தல்.
அந்த சட்டமன்றத் தேர்தலில் மீண்டும் திராவிட முன்னேற்றக் கழகம் வெற்றி பெற்று தலைவர் கலைஞர் தலைமையில் 184 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சிக்கு வருகிறோம்.
நான் பெருமையோடு சொல்கிறேன், இதுவரையில் தமிழ்நாட்டு வரலாற்றில் இவ்வளவு இடங்களை, 184 என்ற ஒரு பெரிய இலக்கைப் பெற்று ஆட்சிப் பொறுப்பேற்ற கட்சி எந்தக் கட்சியும் கிடையாது, நம்முடைய திமுகதான் கலைஞருடைய தலைமையில் ஆட்சிக்கு வந்தோம். இது வரலாறு.
எமர்ஜென்சிக்குப் பிறகு நடைபெற்ற தேர்தலில் வெற்றி பெறவில்லை. நம் ஆட்சி கலைக்கப்பட்டு 13 வருடம் நாம் ஆட்சிக்கு வர முடியவில்லை.
அதற்குப் பிறகு 1989-இல், 13 வருடத்திற்குப் பிறகு நாம் ஆட்சிக்கு வருகிறோம். 1991-இல் மீண்டும் நம்முடைய ஆட்சி கவிழ்க்கப்படுகிறது.
நம்மீது அபாண்டமான பழிபோட்டு நம் ஆட்சியைக் கவிழ்த்தார்கள். அதற்குப் பிறகு 1996-இல் மீண்டும் ஆட்சிக்கு வருகிறோம். 2001-இல் மீண்டும் ஆட்சி இல்லை.
அதற்குப் பிறகு 2006-இல் மீண்டும் ஐந்தாவது முறையாக நம்முடைய தலைவர் கலைஞர் அவர்கள் தமிழ்நாட்டினுடைய முதலமைச்சராகப் பொறுப்பேற்கிறார்.
அதற்குப் பிறகு ஒரு 10 வருடம் ஆட்சியில் இல்லை. இப்போது 2021-இல் ஆறாவது முறையாக என்னுடைய தலைமையில் இன்றைக்கு திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஆட்சி நடைபெறுகிறது.
நம்முடைய இலக்கு என்பது நாடாளுமன்றத் தேர்தல்தான். புதுவையையும் சேர்த்து 40-க்கு 40. நாடும் நமதே, நாளையும் நமதே என்றார் முதல்வர் ஸ்டாலின்.
டாபிக்ஸ்