தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Senthil Balaji: ஒரு வழியாக முடிவுக்கு வந்தது அமைச்சர் செந்தில் பாலாஜியின் அறுவை சிகிச்சை!

Senthil Balaji: ஒரு வழியாக முடிவுக்கு வந்தது அமைச்சர் செந்தில் பாலாஜியின் அறுவை சிகிச்சை!

Pandeeswari Gurusamy HT Tamil
Jun 21, 2023 10:39 AM IST

செந்தில் பாலாஜி இதயத்தில் 4 இடங்களில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. இந்த சிகிச்சை 5 மணி நேரம் நடந்துள்ளது. தற்போது அமைச்சரின் உடல் நிலை சீராக உள்ளது என காவேரி மருத்துவமனை அறிவித்துள்ளது.

செந்தில் பாலாஜி
செந்தில் பாலாஜி

ட்ரெண்டிங் செய்திகள்

பண பரிவர்த்தனை விவகாரத்தில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜி உடல் நலக்குறைவால் காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் இன்று அவருக்கு இதய அறுவை சிகிச்சை நடைபெறும் என்று நேற்று தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியம் அறிவித்திருந்தார். தற்போது செந்தில் பாலாஜி அறுவை சிகிச்சைக்காக ஆப்ரேஷன் தியேட்டருக்கு இன்று காலை 5 மணியளவில் அழைத்து செல்லப்பட்டுள்ளார். இந்நிலையில் 5 மணி நேரம் நடந்த அறுவை சிகிச்சை முடிவுக்கு வந்துள்ளது. இதய அறுவை சிகிச்சை என்பதால் தற்போது வெண்டிலோட்டர் உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தொடர்ந்து மருத்துவர்கள் கண்காணித்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

இந்த சிகிச்சை குறித்து காவேரி மருத்துவமனை அதிகாரப்பூர்வ அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. 

அதில், மருத்துவர் ஏ.ஆர். ரகுராம்  அறுவை சிகிச்சை செய்தார். செந்தில் பாலாஜி இதயத்தில் 4 இடங்களில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. இந்த சிகிச்சை 5 மணி நேரம் நடந்துள்ளது. தற்போது அமைச்சரின் உடல் நிலை சீராக உள்ளது என காவேரி மருத்துவமனை அறிவித்துள்ளது. 

முன்னதாக சட்டவிரோத பணப்பரிவர்த்தனையில் ஈடுபட்டதாக அமைச்சர் செந்தில் பாலாஜி அமலாக்கத்துறையால் அதிரடியாக கைது செய்யப்பட்டிருக்கிறார். கடந்த 2015 ஆம் ஆண்டு அதிமுக ஆட்சியில் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்த போது, ஓட்டுனர், நடத்துனர் வேலை வாங்கி தருவதாக பலரிடம் பண மோசடியில் ஈடுபட்டதாக புகார் எழுந்தது. இதையடுத்து மத்திய குற்றப்பிரிவு போலீஸார் மற்றும் சிபிசிஐடி போலீஸார் செந்தில் பாலாஜி மீது 3 வழக்குகளை பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதனிடையே கடந்த 2021 ஆம் ஆண்டு சட்டவிரோத பணப்பரிமாற்ற தடை சட்டத்தின் கீழ் செந்தில் பாலாஜி மீது அமலாக்கத்துறை தனியாக ஒரு வழக்கை பதிவு செய்தது. இந்த வழக்கில் கடந்த 13 ஆம் தேதி நள்ளிரவு செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டார். செந்தில் பாலாஜியை கைது செய்த நிலையில், நெஞ்சுவலியால் பாதிக்கப்பட்ட அவரை முதலில் ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

சென்னை முதன்மை அமர்வு நீதிபதி அல்லி புதன்கிழமை பிற்பகலில் மருத்துவமனைக்கு நேரில் சென்று செந்தில் பாலாஜியை சந்தித்த பின்னர் வரும் 28 ஆம் தேதி வரை அவரை நீதிமன்றக் காவலில் வைக்க உத்தரவிட்டார். இதற்கிடையே ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் இருந்து காவேரி மருத்துவமனைக்கு செந்தில் பாலாஜி மாற்றப்பட்டார்.

மேலும் அவரை காவலில் எடுத்து விசாரிக்கும் அமலாக்கத்துறைக்கு பல்வேறு கட்டுப்பாடுகளையும், நிபந்தனைகளையும் நீதிமன்றம் விதித்துள்ளது. 8 நாட்கள் காவல் முடிந்து ஜூன் 23 ஆம் தேதி மாலை 3 மணிக்கு வீடியோ கான்பரஸ் மூலம் செந்தில் பாலாஜியை ஆஜர்படுத்த வேண்டும் எனவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்நிலையில் செந்தில் பாலாஜியின் வசம் இருந்த துறைகள் அவரிடம் இருந்து விலக்கி கொள்ளப்பட்டு தற்போது இலாக்கா இல்லாத அமைச்சராக தொடரும் செந்தில் பாலாஜி சிகிச்சை பெற்று வரும் சென்னை காவேரி மருத்துவமனையில் மத்திய படை போலீஸாரும் பாதுகாப்பு பணியை மேற்கொண்டு வருகின்றனர். நுழைவு வாயில் மற்றும் தரைத்தள பகுதிகளில் காவலர்கள், ஆயுதப்படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த நிலையில், அமலாக்க துறையின் விசாரணை வளையத்திற்குள் இருக்கும் இலாக்கா இல்லாத அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு நாளை அதிகாலை இதய அறுவை சிகிச்சை செய்ய வாய்ப்புள்ளது என நேற்று தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் ம.சுப்பிரமணியம் தெரிவித்திருந்தார். இதைத்தொடர்ந்து இன்று காலை அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு இதய அறுவை சிகிச்சை தொடங்கப்பட்டுள்ளது. தற்போது 5 மணி நேரம் நடந்த அறுவை சிகிச்சை முடிவுக்கு வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

IPL_Entry_Point

டாபிக்ஸ்