தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Ht Special: ‘தென்னிந்திய முள்ளெலியும்.. மதுரை வெள்ளிமலை கோயில் காடும்’ ஆவணமானது அரிய உயிரினம்!

HT Special: ‘தென்னிந்திய முள்ளெலியும்.. மதுரை வெள்ளிமலை கோயில் காடும்’ ஆவணமானது அரிய உயிரினம்!

Stalin Navaneethakrishnan HT Tamil
May 04, 2023 11:17 AM IST

Hedgehog: தென்னிந்திய முள்ளெலிகள் அழிவின் விளிம்பிற்கு தள்ளப்பட்ட உயிரினகமாக இருப்பினும், பன்னாட்டு இயற்கை பாதுகாப்பு ஒன்றியம் (IUCN) முள்ளெலிகளை கவலைப்பட தேவையற்ற இனம் என்று வகைப்படுத்தி உள்ளது.

மதுரை வெள்ளிமலை கோயில் காடு பகுதியில் வலம் வந்த முள்ளெலி
மதுரை வெள்ளிமலை கோயில் காடு பகுதியில் வலம் வந்த முள்ளெலி (Photo: Veeresh R)

ட்ரெண்டிங் செய்திகள்

சாம்பல் நிற மெலிந்த தேவாங்குகளும் தென்னிந்திய முள்ளெலிகளுக்கும் இருக்கும் சில ஒற்றுமைகளில் முக்கியமான ஒன்று, இவை இரண்டுமே உலகில் தென்னிந்தியாவில் மட்டுமே காணப்படும் உயிரினங்களாகும். சாம்பல் நிற மெலிந்த தேவாங்குகளும், தென்னிந்திய முள்ளெலியும் தென்னிந்திய ஓரிடவாழிகளாகும்.

முள்ளெலி:

பார்ப்பதற்கு குட்டி முள்ளம் பன்றியைப்போல் தோன்றினாலும் இவை முள்ளம் பன்றி அல்ல. இவை அரை கிலோவுக்கும் குறைவான எடையுடன் ஒரு சிறிய தேங்காய் அளவு இருக்கும். இதன் உடலின் மேல் 2 முதல் 3 செ.மீட்டர் அளவுக்கு முட்களைக் கொண்டிருக்கும். இரவாடி உயிரினமான இவை பூச்சிகள், தவளைகள், பல்லிகள், சிறிய ஊர்வன போன்றவற்றை இரவு நேரங்களின் வேட்டையாடி உட்கொள்கிறது.

தேரிக்காடுகள், புதர்கள், வறண்ட நிலப்பகுதிகள், மேலும் உயரமான மலைப்பகுதிகள் போன்றவற்றில் இவை வாழும். உலகில் "உலகத்தில் 17 வகையான முள்ளெலிகள் உள்ளன. இந்தியாவில் மூன்று வகையான முள்ளெலிகள் உள்ளன. அவை நீள்காது முள்ளெலி, வெளிர் முள்ளெலி, மற்றும் தென்னிந்திய முள்ளெலி போன்றவையாகும்.

தென்னிந்தியாவை பூர்வீகமாக கொண்ட தென்னிந்திய முள்ளெலி 1851-ம் ஆண்டு முதல்முறையாக சென்னையில் கண்டறியப்பட்டது. அதன் காரணமாகவே இதற்கு சென்னை முள்ளெலி என்று பெயர் சூட்டப்பட்டது.

மதுரை கோயில்காட்டில் வலம் வந்த முள்ளெலி
மதுரை கோயில்காட்டில் வலம் வந்த முள்ளெலி (Photo: Veeresh R)

தென்னிந்திய முள்ளெலி:

தமிழ் நாடு, கேரளம், ஆந்திரா, கர்நாடகம் உள்ளிட்ட இந்தியாவின் தென்மாநிலங்களில் மட்டுமே இவ்வகை முள்ளெலி காணப்படுகிறது. சென்னை முள்ளெலியின் விலங்கியல் பெயர் - Paraechinus nudiventris. "முள்ளெலிகள் உணவு, மருந்துக்காக வேட்டையாடப்படுகின்றன.

தென்னிந்திய முள்ளெலிகள் அழிவின் விளிம்பிற்கு தள்ளப்பட்ட உயிரினகமாக இருப்பினும், பன்னாட்டு இயற்கை பாதுகாப்பு ஒன்றியம் (IUCN) முள்ளெலிகளை கவலைப்பட தேவையற்ற இனம் என்று வகைப்படுத்தி உள்ளது. அருகி வரும் (Endangered) பட்டியலில் சேர்ப்பதற்கான ஆவணங்களை ஆய்வாளர்கள் சமர்ப்பித்துள்ளனர்.

அருகி வரும் உயிரினமான முள்ளெலிகள் சமீபத்தில் இந்திய காட்டுயிர் பாதுகாப்பு சட்டத்தின் (WPA 1972) பட்டியல் 2இல் சேர்க்கப்பட்டுள்ளது. அருகி வரும் முள்ளெலிகளையும் அதன் வாழ்விடங்களை பாதுகாக்க நடவடிக்கைகள் எடுக்க வேண்டியது அரசின் கடமையாகும்.

மதுரை வெள்ளமலை கோயில் காட்டில் வாழ்ந்து வரும் முள்ளெலி
மதுரை வெள்ளமலை கோயில் காட்டில் வாழ்ந்து வரும் முள்ளெலி (Photo: Veeresh R)

வெள்ளிமலை கோயில்காடு:

மதுரை மாவட்டம் இடையப்பட்டி - தெற்காமூர் பகுதியில் அமைந்துள்ள வெள்ளிமலை கோயில்காடு தொடர்ந்து அரசின் பல்வேறு திட்டங்களுக்காக கையகப்படுத்தபட்டு அழிக்கப்பட்டு வருகிறது. இக்கோயில்காட்டில் 100க்கும் மேற்பட்ட தாவர வகைகள், மதுரைக்கே உரிய கடம்ப மரங்கள், 70க்கு மேற்பட்ட பறவை இனங்கள் ஆவணம் செய்யப்பட்டுள்ளது. புள்ளிமான்கள், உடம்பு, முயல், அலங்கு உள்ளிட்ட உயிரினங்களும் வெள்ளிமலை கோயில்காட்டை வாழிடமாக கொண்டுள்ளது.

மதுரையில் எஞ்சியிருக்கும் ஒரே ஒரு கோயில்காட்டை, தென்னிந்தியாவிற்க்கே உரித்தான சாம்பல் நிற மெலிந்த தேவாங்குகளுக்கும், தென்னிந்திய முள்ளெலிகளுக்கும் வாழிடமாக உள்ள வெள்ளிமலை கோயில்காட்டை பாதுகாக்கும் நோக்கோடு வெள்ளிமலை கோயில்காட்டை "பாரம்பரிய பல்லுயிரிய தலமாக'' அறிவிக்க உடனடி நடவடிக்கைகளை எடுக்க வேண்டுமென தமிழ்நாடு அரசுக்கு தொடர்ந்து கோரிக்கை வைக்கப்பட்டு வருகிறது.

பிரவீன்குமார் என்கிற சமூக ஆர்வலர் முள்ளெலி பாதுகாப்பிற்கு தொடர்ந்து பணி செய்துவரும் நிலையில், அதை ஆவணப்படுத்தும் பணியில் இரவீந்திரன், வீரேஷ், ராஜ்குமார், அருள்மணி உள்ளிட்டோர் மதுரை பன்னாட்டுச் சூழலியல் பேரவையுடன் இணைந்து பணியாற்றி வருகின்றனர். 

IPL_Entry_Point

டாபிக்ஸ்