தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Udhayanidhi Stalin : நேற்று வரை உதயநிதி.. இன்று சின்னவர்... நாளை என்ன ??

Udhayanidhi Stalin : நேற்று வரை உதயநிதி.. இன்று சின்னவர்... நாளை என்ன ??

Divya Sekar HT Tamil
Nov 27, 2022 02:10 PM IST

தற்போது சினிமாவில் கலகத் தலைவனாக உலா வருவதை போன்று எளிமையானது அல்ல கழகத் தலைவர் பொறுப்பு என்பது. அதனை அடைய நீண்ட நெடிய பயணத்தை தொடங்கி இருக்கும் உதயநிதிக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

உதயநிதி ஸ்டாலின்
உதயநிதி ஸ்டாலின்

ட்ரெண்டிங் செய்திகள்

உதயநிதி ஸ்டாலின், முதன்முதலில் தயாரிப்பாளராகத் தான் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். தமிழில் இவர் முதன்முதலில் தயாரித்த படம் 2008 ஆம் ஆண்டு வெளியான விஜய், திரிஷா நடித்த குருவி. இதைத் தொடர்ந்து சூர்யா, கமல், சிம்பு என தொடர்ந்து பெரிய நடிகர்களின் படங்களை தயாரித்து வந்தார். பின்னர் படிப்படியாக தனது ரெட் ஜெயண்ட் மூவீஸ் மூலம் படங்களை வெளியிடவும் தொடங்கினார்.அவர் முதன்முதலில் வெளியீடு செய்த திரைப்படம் கௌதம் மேனனின் விண்ணைத்தாண்டி வருவாயா. இப்படத்தின் தயாரிப்பாளரும் அவர்தான்.

2009 ஆம் ஆண்டு வெளியான ஆதவன் திரைப்படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்ததின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார். அதன் பிறகு 2012ல் வெளியான ஒரு கல் ஒரு கண்ணாடி திரைப்படத்தில் நாயகனாக அறிமுகமானார். அவர் நாயகனாக நடித்த முதல் படம் மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றது. பின்னர், அதனை தொடர்ந்து இது கதிர்வேலன் காதல்,நண்பேன்டா, கெத்து,மனிதன்,கண்ணே கலைமானே,சைக்கோ,நெஞ்சுக்கு நீதி போன்ற பல படங்களில் நாயகனாக தொடர்ந்து நடித்துள்ளார்.

ஒரு கல் ஒரு கண்ணாடி திரைப்படத்தில் நாயகனாக உதயநிதி ஸ்டாலின்
ஒரு கல் ஒரு கண்ணாடி திரைப்படத்தில் நாயகனாக உதயநிதி ஸ்டாலின்

இப்படி திரைத்துறையில் வெற்றி கண்ட இவர் அரசியலிலும் ஆதிக்கம் செலுத்தி வருகிறார். இவர் திமுகவில் எந்த ஒரு பொறுப்பில் இல்லாத நிலையிலும் பல பிரச்சாரங்களை மேற்கொண்டார். நாடாளுமன்றத் தேர்தலுக்கான பிரச்சாரத்தின்போது, உதயநிதி ஸ்டாலினும் மாநிலம் முழுவதும் பிரச்சாரம் மேற்கொண்டது வெகுவாக கவனிக்கப்பட்ட நிலையில், அவருக்கு கட்சியில் குறிப்பிடத்தக்க பதவி வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. அதன்படி திமுக இளைஞரணி செயலாளராக உதயநிதி ஸ்டாலின் கடந்த 2019ஆம் ஆண்டு ஜூலை மாதம் நியமனம் செய்யப்பட்டார்.

இதனிடையே உதயநிதியின் அரசியல் பயணம் தொடங்கிய போது மு.க ஸ்டாலின் மீதும் தொடர்ந்து வைக்கப்படும் வாரிசு அரசியல் குறித்த விமர்சனத்தை உதயநிதி எதிர்கொண்டார். பின்னர், 2021ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்தது. அப்போது சேப்பாக்கம் திருவல்லிக்கேணி தொகுதியில் உதயநிதி ஸ்டாலின் 93,285 வாக்குகள் பெற்று சட்டப்பேரவை உறுப்பினரானார்.

உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரம்
உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரம்

தேர்தல் நேரத்தில் கலைஞரைப் போல் அடுக்குமொழியில் பிரச்சாரம், அனல் கக்கும் பொதுக்கூட்ட பேச்சுக்களையும் திமுகவில் இன்று யாரும் செய்ய முடியாத போது, மாறிவரும் தலைமுறைகளுக்கு ஏற்ப உதயநிதி தனது பிரச்சாரத்தை தனித்துவமான பாணியில் தொடங்கினார்.

நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் அவர் செய்த பிரச்சாரத்தில் குறிப்பிடத்தக்கது ஒற்றை செங்கல் பிராச்சாரம். தமிழகத்தோடு சேர்ந்து அறிவிக்கப்பட்ட எய்ம்ஸ் மருத்துவமனைகள் மற்ற மாநிலங்களில் கட்டி முடிக்கப்பட்ட நிலையில், மதுரையில் மட்டும் கட்டுமானப் பணிகள் மந்த நிலையில் இருந்தது.

இந்த சூழலில், உதயநிதி ஸ்டாலின், சாத்தூர் அருகே பிரசாரத்தில் ஈடுபட்ட போது, “மதுரையில் மோடி கட்டிய எய்ம்ஸ் மருத்துவமனையை கையோடு எடுத்து வந்திருக்கிறேன்” என்று கூறி ஒரு செங்கலை காட்டினார். உதயநிதியின் இந்த பிரசாரம் பொது மக்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றது. அப்போது இந்த பிராசாரம் ட்ரெண்டானது.

செங்கல் வைத்து உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரம்
செங்கல் வைத்து உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரம்

சித்திரை வெயிலில் அவர் பிரச்சாரத்தை தொடங்கிய போது,ஏசி அறையில் இருந்த எதிர்க்கட்சித் தலைவர்களுக்கு கடுமையாக வேர்க்கத் தொடங்கியது. அதற்குக் காரணம் அவர் பேசிய பேச்சுக்கள் அனைத்தும் வெகு மக்களின் என்ன ஓட்டத்தை பிரதிபலிக்கும் படி இருந்தது. தேர்தல் நேரத்தில் உதயநிதி தங்கை வீட்டில் வருமானவரித்துறை சோதனை மேற்கொண்ட போது தைரியம் இருந்தா என் வீட்டுக்கே வாங்க என்று சொல்லி அவரது வீட்டின் முகவரியை சொல்லி வருமானவரித்துறையை விட்டுக்கு அழைத்ததெல்லாம் பிரச்சாரத்தின் உச்சம்.

இப்படியாக தனது அரசியல் பயணத்தை தொடர்ந்து வருகிறார். அவருக்கு தமிழக அமைச்சரவையில் முக்கிய பொறுப்பு வழங்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் உதயநிதியின் நெருங்கிய நண்பர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பள்ளிக்கல்வித் துறை அமைச்சராக நியமிக்கப்பட்டார்.

இந்நிலையில், ஒருபக்கம் திமுகவினர் தொடர்ந்து உதயநிதி ஸ்டாலின் அமைச்சராக வேண்டும் என்று சமூக வலைதளங்களில் கோரிக்கையை விடுத்து வருகின்றனர். அமைச்சர்கள் அன்பில் மகேஷ், திண்டுக்கல் ஐ.பெரியசாமி போன்ற அமைச்சர்கள் தங்கள் மாவட்டங்களில் இது தொடர்பாக தீர்மானங்களை சில மாதங்களுக்கு முன்பு நிறைவேற்றினார்கள்.

உதயநிதி ஸ்டாலின்
உதயநிதி ஸ்டாலின்

இந்நிலையில், திமுகவில் உள்கட்சி தேர்தல் நடைபெற்றது. இதில், திமுக தலைவராக மு.க ஸ்டாலின் மீண்டும் தேர்வு செய்யப்பட்டார். இளைஞரணி செயலாளராக இரண்டாவது முறையாக உதயநிதி ஸ்டாலின் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

திமுகவில் ஸ்டாலின் அரசியல் பயணம் ஆரம்பித்த காலத்தில், அக்கட்சியின் முன்னாள் தலைவர் கலைஞர் மீது கடும் விமர்சனம் எழுந்தது. இருப்பினும் ஸ்டாலின் தனது அரைநூற்றாண்டு கால அரசியல் உழைப்பின் மூலம் தன்னை நிரூபித்து இன்றைக்கு கட்சியின் தலைவராகவும் தமிழ்நாட்டின் முதல்வராகவும் இருக்கிறார். இப்படி முதல்வர் ஸ்டாலின் பயணம் நீண்ட நெடியது.

பெற்றோருடன் உதயநிதி ஸ்டாலின்
பெற்றோருடன் உதயநிதி ஸ்டாலின்

தற்போது சினிமாவில் கலகத் தலைவனாக உலா வருவதை போன்று எளிமையானது அல்ல கழகத் தலைவர் பொறுப்பு என்பது. அதனை அடைய தொட வேண்டிய உயரமும், செல்ல வேண்டிய பாதையும் அவ்வளவு சுலபமானது கிடையாது. நீண்ட நெடிய பயணத்தை தொடங்கி இருக்கும் உதயநிதிக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

கலகத் தலைவன்
கலகத் தலைவன்

தன் செல்ல வேண்டிய தூரம் மிகப்பெரியது என்று உதயநிதி உணர்ந்தே அதற்காக உழைத்துக் கொண்டும் இருக்கிறார்..பயணப்படுங்கள் உதயநிதி.

IPL_Entry_Point

டாபிக்ஸ்