TN Police:விநாயகர் சதுர்த்தி பாதுகாப்பு பணி- காவல் துறையினருக்கு டிஜிபி பாராட்டு
விநாயகர் சதுர்த்தி பாதுகாப்பு பணியை திறம்பட மேற்கொண்ட காவலர்களுக்கு டிஜிபி சைலேந்திரபாபு பாராட்டு தெரிவித்துள்ளார்.
சென்னை: விநாயகர் சதுர்த்தி மற்றும் அதைத்தொடர்ந்து நடைபெற்ற சிலை கரைப்பின்போது சிறப்பாக பாதுகாப்பு வழங்கியதாக போலீஸாருக்கு தமிழக டிஜிபி சைலேந்திரபாபு பாராட்டு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக டிஜிபி அனைத்து போலீஸாருக்கும் வழங்கிய பாராட்டு செய்தியில், வழக்கம்போல் இந்த ஆண்டும் தமிழகம் முழுவதும் விநாயகர் சிலைகள் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு நீர் நிலைகளில் கரைக்கப்பட்டன.
இறுதியில் நடைபெற்ற விநாயகர் சிலை ஊர்வல பாதுகாப்பு பணியில் 75,812 காவல் துறை அதிகாரிகளும் காவலர்களும் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். எப்போதும் இல்லாத வகையில் சிறு அசம்பாவிதம் கூட இல்லாமல் மிகவும் அமைதியாக விநாயகர் சதுர்த்தி நிகழ்வு நடத்தி முடிக்கப்பட்டது.
சென்னை காவல் ஆணையர், சட்டம் ஒழுங்கு காவல் துறை கூடுதல் இயக்குநர், அனைத்து காவல் ஆணையாளர்கள், மண்டல ஐஜிகள், சரக டிஐஜிகள் மற்றும் மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர்கள் இப்பாதுகாப்புகளை முன்கூட்டியே திட்டமிட்டு சிறப்பாக செயல்படுத்தினர்.
அதோடு, பாதுகாப்புப் பணிக்காக அழைக்கப்பட்ட காவல் அதிகாரிகள், காவலர்கள் மற்றும் ஊர்காவல் படையினர் அனைவரும் பொறுப்புணர்வுடனும் அர்ப்பணிப்புடனும், எச்சரிக்கை உணர்வுடனும் இப்பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர். நுண்ணறிவுப் பிரிவின் கூடுதல் இயக்குநர் மற்றும் அவரது நுண்ணறிவு காவலர்களின் பங்களிப்பு சிறப்பாக அமைந்தது.
இப்பாதுகாப்புப் பணியில் தமிழக காவல் துறையினர் காட்டிய மனதைரியம், கடமை உணர்வு, தன்னடக்கம், பொறுமை போன்றவை எதிர்கால சந்ததியினர் கடைபிடிக்கும் வகையில் சிறப்பாக அமைந்தது. சிலைகளை நிறுவுவது, பாதுகாப்பது, கரைக்கும் இடங்களில் மக்கள் கூட்டத்தை சிறப்பாக கையாண்டது பற்றிய பாதுகாப்பு குறிப்புகள் பிற்கால பயன்பாட்டுக்காக காவல் நிலையங்களில் பாதுகாப்பாக பராமரிக்கப்பட வேண்டும்.
விநாயகர் சதுர்த்தி பாதுகாப்பு பணியை திறம்பட மேற்கொண்டு, தமிழ்நாடு காவல் துறைக்கு பெருமை சேர்த்த அனைத்து அதிகாரிகள், காவலர்கள் மற்றும் ஊர்காவல் படையினர் ஆகியோருக்கு பாராட்டு, நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்.
டாபிக்ஸ்