தமிழ் செய்திகள்  /  Tamilnadu  /  Corona Virus Latest Updates

கொரோனா புதிய அலையா? பரிசோதனைகளில் பின்தங்குகிறதா தமிழகம்? எச்சரிக்கை மக்களே…

Priyadarshini R HT Tamil
Mar 28, 2023 11:55 AM IST

Corona Virus : அகில இந்திய அளவில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. சிகிச்சையில் இருப்பவர்களின் எண்ணிக்கை 10,000 பேரைத் தாண்டியுள்ளது. 14 மாநிலங்களில் உள்ள 32 மாவட்டங்களில் 100 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்தால்,10 பேருக்கு மேல் கொரோனா பாதிப்பு இருப்பது தெரிய வந்துள்ளது.

கோப்புப்படம்
கோப்புப்படம்

ட்ரெண்டிங் செய்திகள்

அண்டை மாநிலங்களான புதுச்சேரி, கர்நாடகா, கேரளா போன்றவற்றில் XBB.1.16ன் இருப்பு உறுதிசெய்யப்பட்டாலும், தமிழகத்தில் இதுவரை இந்த உருமாற்றம் பெற்ற வைரஸ் இருப்பது உறுதிசெய்யப்படவில்லை. XBB வகை தமிழகத்தில் அதிகம் இருப்பதாக மூலக்கூறு ஆய்வு மூலம் உறுதிசெய்யப்பட்டாலும், XBB உபவகையான XBB.1.16 இருப்பதாக கண்டறியப்படாமல் இருப்பது ஆச்சர்யமாக உள்ளது.

தமிழகத்தில் கொரோனாவால் இறந்த 27 வயது இளைஞருக்கும், ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் எம்எல்ஏவுக்கும் XBB இருப்பது உறுதிசெய்யப்பட்டாலும், அது ஏன் அதன் உபவகையான XBB.1.16 ஆக இருக்க வாய்ப்புகள் இல்லாமல் இல்லை. தமிழகத்தில் கடந்தாண்டே XBB இந்தியளவில் மிக அதிகமாக இருந்த நிலையில் தற்போது ஏன் கொரோனா அதிகரித்து வர வேண்டும்? ஏற்கனவே இருந்த XBBயால் திடீரென தமிழகத்தில் கொரோனா அதிகரிக்க முடியுமா? XBB.1.16 ன் காரணமாக தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகரிக்க வாய்ப்புள்ளது என்பதுதான் உண்மை. 

தமிழகத்தில் 2022ம் ஆண்டு நவம்பர் மாதத்திற்கு பின்னர், தற்போது கொரோனா பாதிப்பு 100 பேரைத் தாண்டி நேற்று பாதிப்பு 102 என பதிவாகியுள்ளது. இந்நிலையில், தமிழக அரசு போதியளவில் பரிசோதனைகள் செய்து வருகிறதா? கொரோனா அதிகரித்து வரும் சூழலில் நேற்றுமுன்தினம் 3,199 பேருக்கு பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு 99 பேருக்கு தொற்று உறுதியான நிலையில், நேற்று பரிசோதனைகளை அதிகப்படுத்தாமல், 2,888 பேருக்கு என பரிசோதனைகள் குறைக்கப்பட்ட நிலையில் கூட பாதிப்பு 102 என உயர்ந்துள்ளது.

குறிப்பாக மத்தியசுகாதாரத்துறை பரிசோதனைகளை அதிகரிக்க வேண்டும் என்று மாநில சுகாதாரச் செயலருக்கு அறிவுறுத்தியும் தமிழக அரசு தேவையான அளவிற்கு (140 பரிசோதனைகள்/10 லட்சம் பேர்) பரிசோதனைகளை மேற்கொள்ளாமல் விதிமுறைகளை மீறி நடக்கிறது. தமிழகம் போன்றே, அகில இந்திய அளவில் 22 மாநிலங்கள் பரிசோதனைகளை குறைத்து செய்து வருகிறது. ஆரம்பத்தில் கொரோனாவைக் கண்டறிந்தால் மட்டுமே உரிய தடுப்பு நடவடிக்கைகளை எடுக்க முடியும். இல்லையேல் அது பரவி மீண்டும் ஒரு "அலை" வருவதற்கான வாய்ப்பை ஏற்படுத்திவிடும்.

டெல்லி லோக் நாயக் மருத்துவமனையின் மருத்துவத்துறை இயக்குநர் சுரேஷ்குமார், கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்கள், கூடுதல் தடுப்பூசி (Booster dose) எடுத்துக் கொண்டவர்களும், பெருமளவு கொரோனா தாக்கத்திற்கு ஆளாகின்றனர். இதிலிருந்து தடுப்பூசிகள் தற்போதைய உருமாற்றம் பெற்ற கொரோனாவை (XBB.1.16) கட்டுப்படுத்தாது என்கிறார். 

மத்திய அரசின் கொரோனா வழிகாட்டுதல் நெறிமுறைகளில் கூட இயற்கை நோய் எதிர்ப்பு (கொரோனா தாக்குதலுக்கு உள்ளாகி அதிலிருந்து பெறும் நோய் எதிர்ப்புசக்தி) சக்தி, கொரோனா தடுப்பில் பெரும் பங்கு வகிக்கிறது என்று மேலும் அவர் சுட்டிக்காட்டுகிறார். 

தமிழக அரசு கொரோனா பரிசோதனைகளை குறைத்து வரும் நிலையில் எத்தனை மூலக்கூறு ஆய்வுகளை மேற்கொள்கிறது? எந்தெந்த இடத்தில், எந்த அடிப்படையில் மாதிரிகள் சேகரிக்கப்படுகின்றன என்ற புள்ளிவிவரமும் தமிழகத்தில் இல்லை. சமீபத்திய மத்திய அரசின் வழிகாட்டுதலிலும், பிரதமர் மோடி வலியுறுத்தியும், மூலக்கூறு ஆய்வுகளை அதிகரிப்பது குறித்து எந்த குறிப்பும் இல்லை. மூலக்கூறு ஆய்வுகள் 5% பாதித்தவர்கள் மத்தியில் செய்ய வேண்டும் என்ற விதிகளை கடைபிடிக்கவேண்டும்.

சென்னை தவிர்த்து பிற இடங்களிலும் கொரோனா அதிகரித்து வரும் சூழலில் கோயம்புத்தூரிலும் மூலக்குறு ஆய்வகம் இருப்பது தேவையாக இருந்தும், தமிழக அரசு அதிலும் போதிய ஆர்வம் காட்டவில்லை.  

அனைத்து புளூ போன்ற காய்ச்சல்களையும் (ILI), திடீரென வரும் சளித்தொல்லைகளையும் (SARI) பரிசோதிக்க வேண்டும் என மத்திய அரசின் வழிகாட்டுதலில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

கொரோனா பாதிப்பை சமூகத்தில் இனம் காணும் முன்பே, பாதிப்புள்ள இடங்களில் உள்ள கழிவுநீரை பரிசோதிப்பதின் மூலம் கொரோனா பாதிப்பை 6-10 நாட்கள் முன்கூட்டியே அறியலாம் என அறிவியல் ஆய்வுகள் சொல்வதை நாம் என் கடைபிடிக்கக்கூடாது?

விமான நிலையத்தில் 2 சதவீதம் மக்களை ரேண்டம் முறையில் பரிசோதிப்பதிலும், கூடவே விமானத்தின் கழிவறை கழிவுகளை பரிசோதிப்பதின் மூலம் எந்த விமானங்களுக்கு கூடுதல் முக்கியத்துவம் கொடுத்து பரிசோதிக்க வேண்டும் எனத் தெரியவரும் என இருந்தும் நாம் அதை மேற்கொள்ளவில்லை.

தமிழகம், கொரோனாவைக் கட்டுப்படுத்த கீழ்காணும் ஆலோசனைகளை பின்பற்றினால் நல்ல பலன் கிடைக்கும்.

போதிய அளவு பரிசோதனைகள், மூலக்குறு ஆய்வுகள் மேற்கொள்ளப்படவேண்டும். அதை பொதுவெளியில் வைக்க வேண்டும்.

சென்னை தவிர்த்து பிற இடங்களிலும் மூலக்கூறு ஆய்வகங்கள் வர நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கழிவுநீர் பரிசோதனைகள் பாதிப்புள்ள இடங்களிலும், விமானங்களிலும் மேற்கொள்ளப்படவேண்டும்.

ஒமிக்ரான் தடுப்பூசிக்கு கட்டுப்படாத சூழலில் அதை வலியுறுத்துவதில் பயனில்லை என்பதே அறிவியல் உணர்த்தும் உண்மை

அறிவியல் ரீதியான கொரோனா தடுப்பு முறைகளை பின்பற்றி,

மக்கள் ஒத்துழைப்புடன் கொரோனாவை கட்டுக்குள் கொண்டுவர வேண்டும் என்று கொரோனா விழிப்புணர்வு பிரச்சாரம் செய்துவரும் மருத்துவர் புகழேந்தி கூறியுள்ளார். 

 

IPL_Entry_Point

டாபிக்ஸ்