தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Crpf : சிஆர்பிஎப் கணினித் தேர்வை தமிழிலும் நடத்த அமித்ஷாவுக்கு முதல்வர் கடிதம்

CRPF : சிஆர்பிஎப் கணினித் தேர்வை தமிழிலும் நடத்த அமித்ஷாவுக்கு முதல்வர் கடிதம்

Pandeeswari Gurusamy HT Tamil
Apr 09, 2023 01:11 PM IST

CRPF Exam: தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு என அரசியல் சாசனத்தில் அங்கீகரிக்கப்பட்டுள்ள அனைத்து மொழிகளிலும் தேர்வு நடத்தப்படுவது என பெரும்பாலானோர் வலியுறுத்தி உள்ளனர்.

ஸ்டாலின் கடிதம்
ஸ்டாலின் கடிதம்

ட்ரெண்டிங் செய்திகள்

சுமார் 10,000 சி.ஆர்.பி.எப். காவலர் பணியிடங்களுக்கான தேர்வு அறிவிக்கை வெளியான நிலையில் ஹிந்தி மற்றும் ஆங்கிலத்தில் மட்டும் தேர்வு நடத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இந்தி பேசாத மாநிலங்களைச் சேர்ந்த இளைஞர்களுக்கு இழைக்கப்படும் அநீதி என பெரும்பாலானோர் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு என அரசியல் சாசனத்தில் அங்கீகரிக்கப்பட்டுள்ள அனைத்து மொழிகளிலும் தேர்வு நடத்தப்படுவது அவசியமாகும். அப்போதுதான், ஹிந்தி பேசாத மாநில இளைஞர்களுக்கு சமவாய்ப்பு கிடைக்கும் என பலரும் கருத்து தெரிவித்து வந்தனர். இந்நிலையில் சிஆர்பிஎப் கணினி தேர்வை தமிழிலும் நடந்த வேண்டும் என உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதி உள்ளார்.

முதல்வர் எழுதிய கடிதம் பின்வருமாறு:

ஒன்றிய அரசின் உள்துறை அமைச்சகத்தின்கீழ் வரும் மத்திய பின்னிருப்புக் காவல் படையில் (CRPF) 9,212 காவலர்கள் ஆட்சேர்க்கைக்கான அறிவிக்கை தொடர்பாகத் தங்களது கனிவான கவனத்தைக் கோருகிறேன். நமது அரசமைப்புச்சட்டத்தின் எட்டாவது அட்டவணை தமிழ் உள்ளிட்ட மாநில மொழிகளை அலுவல் மொழிகளாக அங்கீகரிக்கும்போதிலும், மேற்கூறிய ஆட்சேர்க்கைக்கான கணினித் தேர்வு ஆங்கிலம் மற்றும் இந்தியில் மட்டுமே நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருப்பது தமிழ்நாட்டின் ஒவ்வொரு இளைஞரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

சி.ஆர்.பி.எப் வெளியிட்டுள்ள அறிவிக்கையின்படி மொத்தமுள்ள 9,212 காலிப் பணியிடங்களில் 579 பணியிடங்கள் தமிழ்நாட்டில் நிரப்பப்படவுள்ளன. தமிழ்நாட்டில் 12 மையங்களில் இந்தத் தேர்வு நடைபெற உள்ளது. ஆனால், தமிழ்நாட்டில் இருந்து இந்த தேர்வுக்கு விண்ணப்பிப்போர் சொந்த மாநிலத்திலேயே தங்கள் தாய்மொழியில் தேர்வினை எழுத முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இந்த அறிவிக்கையின் மற்றொரு மறைமுக அம்சமாக, மொத்தமுள்ள 100 மதிப்பெண்களில் 25 மதிபெண்கள் இந்தி மொழியில் அடிப்படைப் புரிதலுக்கெனெக் ஒதுக்கப்பட்டுள்ளது. இதனால் இத்தேர்வு இந்தி மொழி பேசுவோருக்கே மிகவும் சாதகமானதாக அமைந்துள்ளது. சுருங்கச் சொன்னால், மத்திய பின்னிருப்புக் காவல்படையின் இந்த அறிவிக்கை தமிழ்நாட்டில் இருந்து விண்ணப்பிப்போரின் நலனுக்கு முற்றிலும் எதிரானதாக உள்ளது. இது தன்னிச்சையானது மட்டுமல்லாமல் பாகுபாடு காட்டக்கூடியதும் ஆகும்.

விருப்புவெறுப்பின்றி இந்த அறிவிக்கையை நோக்குகையில், இது தமிழ்நாட்டில் இருந்து விண்ணப்பிப்போருக்கு எதிரான பாகுபாட்டுடனும், அவர்கள் நாட்டின் துணைராணுவப் படையில் பணியாற்றும் வாய்ப்பைப் பறிக்கும் நோக்குடனும் அமைக்கப்பட்டுள்ளதை அறியமுடிகிறது. ஆங்கிலத்திலும் இந்தியிலும் மட்டுமே கணினித் தேர்வு நடத்தப்படும் என்ற அறிவிப்பானது இத்தேர்வை எழுத விரும்பும் இளைஞர்களுக்கு அரசியலமைப்பு வழங்கியுள்ள உரிமையைப் பாதிப்பதாகவும், அரசுப் பணித் தேர்வில் சம வாய்ப்பை மறுப்பதாகவும் இருக்கிறது.

எனவே, தாங்கள் இதில் உடனடியாகத் தலையிட்டு, இந்தி பேசாத மாநில இளைஞர்களும் சி.ஆர்.பி.எப்-இல் பணியாற்ற சமவாய்ப்பு பெறும் வகையில் தமிழ் உள்ளிட்ட பிற மாநில மொழிகளிலும் இக்கணினித் தேர்வை நடத்துவதற்கு ஏதுவாக அறிவிக்கையில் மாற்றங்களைச் செய்ய மத்தியப் பின்னிருப்புக் காவல்படை அதிகாரிகளை அறிவுறுத்துமாறு கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

IPL_Entry_Point

டாபிக்ஸ்