Bus Strike: ’பேருந்துகள் வழக்கம் போல் இயங்குகின்றது!’ அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் பேட்டி!
”பேச்சுவார்த்தையை தொழிற்சங்ககள்தான் முடித்துக் கொண்டு போராட்டம் அறிவித்துவிட்டார்கள்”
அகவிலைப்படி உயர்வு உள்ளிட்ட நிறைவேற்றப்படாமல் உள்ள கடந்த 8 ஆண்டுகால கோரிக்கைகளை வலியுறுத்தி போக்குவரத்து தொழிற்சங்ககள் காலவரையற்ற வேலை நிறுத்தத்தை அறிவித்துள்ளன.
போக்குவரத்துத்துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கருடன் நடைபெற்ற முத்தரப்பு பேச்சுவார்த்தை தோல்வி அடைந்த நிலையில், இன்று நள்ளிரவு 12 மணி முதல் வேலை நிறுத்தம் நடந்து வருகிறது.
அண்ணா தொழிற்சங்க பேரவை, சிஐடியு உள்ளிட்ட தொழிற்சங்கங்கள் இந்த வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள நிலையில், தொமுச, ஏஐசிடியூ உள்ளிட்ட தொழிற்சங்கங்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் கலந்து கொள்ளவில்லை.
இந்த வேலை நிறுத்தம் தொடர்பாக பேட்டி அளித்துள்ள போக்குவரத்து துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் கூறுகையில், போக்குவரத்து வழக்கம் போல் இயங்கி கொண்டிருக்கிறது. பொதுமக்கள் பயணத்திற்கு இடையூறு இல்லாமல் போக்குவரத்து சேவை தொடர வேண்டும் என முதலமைச்சர் அறிவுரை தந்துள்ளார். தமிழ்நாடு முழுவதும் எல்லா இடங்களிலும் வழக்கமாக பேருந்துகள் இயங்கி வருகிறது. மதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்தில் 10 சதவீத பேருந்துகள் இயக்கப்படுகிறது என்பது தவறான தகவல்.
பேச்சுவார்த்தையை தொழிற்சங்ககள்தான் முடித்துக் கொண்டு போராட்டம் அறிவித்துவிட்டார்கள். பணியாளர்கள் எடுக்கும் பணிகள் ஏற்கெனவே தொடங்கிவிட்டது. திமுக ஆட்சிக்கு வந்த பிறகு பணிநேரத்தில் இறந்தவர்கள் குடும்பத்திற்கு வேலை வாய்ப்புகள் தொடர்ந்து வழங்கப்பட்டு வருகிறது. போராட்டத்திற்கு வலுசேர்ப்பதற்காக 6 கோரிக்கை என்கிறார்களே தவிர அவர்கள் வலியுறுத்தும் கோரிக்கை ஒன்றுதான். 15வது ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தை தொடங்க வேண்டும் என்று சொல்லி உள்ளார்கள். அதற்கான குழு அமைக்கும் பணி தொடங்கி உள்ளது. விடியற்காலை முதல் தொடர்ந்து கண்காணித்து வருகிறேன். தமிழ்நாட்டில் வழக்கம் போல் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது என கூறினார்.