Anbumani Ramadoss: ஆம்ஸ்ட்ராங் படுகொலைக்கு சிபிஐ விசாரணை கோரி போராடியோர் மீது வழக்கா? - அன்புமணி ஆவேசம்!-anbumani ramadoss urges withdraw of a case against who protested for a cbi probe into armstrong murder case - HT Tamil ,தமிழ்நாடு செய்திகள்
தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Anbumani Ramadoss: ஆம்ஸ்ட்ராங் படுகொலைக்கு சிபிஐ விசாரணை கோரி போராடியோர் மீது வழக்கா? - அன்புமணி ஆவேசம்!

Anbumani Ramadoss: ஆம்ஸ்ட்ராங் படுகொலைக்கு சிபிஐ விசாரணை கோரி போராடியோர் மீது வழக்கா? - அன்புமணி ஆவேசம்!

Karthikeyan S HT Tamil
Aug 10, 2024 04:50 PM IST

Anbumani Ramadoss: ஆம்ஸ்ட்ராங் படுகொலை தொடர்பாக பல்வேறு தரப்புகளைச் சேர்ந்த 23 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர். ஆனாலும், கொலையின் பின்னணியில் உள்ள சூத்திரதாரி யார்? என்பது இதுவரை கண்டறியப்படவில்லை என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

Anbumani Ramadoss: ஆம்ஸ்ட்ராங் படுகொலைக்கு சிபிஐ விசாரணை கோரி போராடியோர் மீது வழக்கா? - அன்புமணி ஆவேசம்!
Anbumani Ramadoss: ஆம்ஸ்ட்ராங் படுகொலைக்கு சிபிஐ விசாரணை கோரி போராடியோர் மீது வழக்கா? - அன்புமணி ஆவேசம்!

இதுதொடர்பாக இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "பகுஜன்சமாஜ் கட்சியின் தமிழ்நாடு மாநிலத் தலைவர் அம்ஸ்ட்ராங் படுகொலையின் பின்னணியில் புதைந்து கிடக்கும் அனைத்து உண்மைகளையும் வெளிக்கொண்டு வருவதற்கு வசதியாக வழக்கை சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்ற வேண்டும் என்று சென்னையில் நேற்று பேரணி நடத்திய ஆம்ஸ்ட்ராங்கின் மனைவி, 2 வயது குழந்தை உள்ளிட்ட 1500-க்கும் மேற்பட்டோர் மீது காவல்துறை வழக்குப் பதிவு செய்திருக்கிறது. நீதி கேட்டு போராடுவோருக்கு நீதி வழங்காமல் வழக்கு தொடர்வது கண்டிக்கத்தக்கது.

பகுஜன்சமாஜ் கட்சியின் தமிழ்நாடு மாநிலத் தலைவர் அம்ஸ்ட்ராங் கடந்த ஜூலை மாதம் 5ஆம் நாள், சென்னை பெரம்பூரில் அவர் புதிதாக கட்டி வந்த வீட்டின் முன் வைத்து கொடூரமாக படுகொலை செய்யப்பட்டார். அவரது கொலை தொடர்பாக பல்வேறு தரப்புகளைச் சேர்ந்த 23 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர். ஆனாலும், கொலையின் பின்னணியில் உள்ள சூத்திரதாரி யார்? என்பது இதுவரை கண்டறியப்படவில்லை. ஆம்ஸ்ட்ராங்கை படுகொலை செய்யும்படி கூலிப்படைகளை ஏவி விட்டவர்கள் யார்? என்பதைக் கண்டறிய வேண்டும்; உண்மைக் குற்றவாளிகளை கைது செய்து தண்டனை பெற்றுத் தர வேண்டும்; அதற்காக சி.பி.ஐ. விசாரணைக்கு ஆணையிட வேண்டும் என்று ஆம்ஸ்ட்ராங்கின் குடும்பத்தினர், பகுஜன்சமாஜ் கட்சி உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.

இந்தக் கோரிக்கையை வலியுறுத்தி நேற்று பகுஜன் சமாஜ் கட்சி, நீலம் பண்பாட்டு மையம் ஆகிய அமைப்புகளின் சார்பில் எழும்பூர் முதல் வள்ளுவர் கோட்டம் வரை பேரணியும், போராட்டமும் நடத்தப்பட்டன. ஆனால், போராட்டத்திற்கு அனுமதி பெறவில்லை என்று கோரி போராட்டத்தில் பங்கேற்ற ஆம்ஸ்ட்ராங்கின் மனைவி பொற்கொடி, அவரது 2 வயது மகள் சாவித்திரி பாய், இயக்குனர் ரஞ்சித் உள்ளிட்ட 1500-க்கும் மேற்பட்டோர் மீது நுங்கம்பாக்கம் காவல்துறை வழக்குப் பதிவு செய்திருக்கிறது. காவல்துறையின் இந்த செயல் எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாத அதிகார அத்துமீறல் ஆகும்.

கொலை செய்யப்பட்ட ஆம்ஸ்ட்ராங் ஒரு தேசியக் கட்சியின் மாநிலத் தலைவர். அவரது கொலையின் பின்னணியில் உள்ள சதி குறித்து அறிந்து கொள்ளும் உரிமை அவரது குடும்பத்தினர், பகுஜன் சமாஜ் கட்சி, அவரது ஆதரவு அமைப்புகள் உள்ளிட்ட அனைவருக்கும் உள்ளது. அதை தெளிவுபடுத்த வேண்டிய கடமை தமிழக அரசுக்கும், காவல்துறைக்கும் உள்ளது. அந்தக் கோரிக்கையை வலியுறுத்தி நடத்தப்பட்ட பேரணி நியாயமானது. அதற்காக ஆம்ஸ்ட்ராங்கின் 2 வயது மகள் உள்ளிட்ட அனைவர் மீதும் வழக்கு தொடர்வது நியாயமற்றது. காவல்துறையின் எந்திரத்தனமான செயல்பாட்டையே இது காட்டுகிறது.

ஜனநாயகத்தில் நியாயமான குரல்களுக்கு எப்போதும் இடம் உண்டு. அதை நசுக்க தமிழக அரசும், காவல்துறையும் முயலக் கூடாது. அனுமதியின்றி பேரணியும், போராட்டமும் நடத்தியதாக ஆம்ஸ்ட்ராங்க் மனைவி, குழந்தை, இயக்குனர் ரஞ்சித் உள்ளிட்ட 1500 பேர் மீதும் தொடரப்பட்ட வழக்கை உடனடியாக திரும்பப் பெற வேண்டும். அவர்களின் கோரிக்கையை நிறைவேற்றவும் தமிழக அரசு முன்வர வேண்டும்." என்று தெரிவித்துள்ளார்.

டாபிக்ஸ்

மேலும் தமிழ்நாட்டின் சமீபத்திய செய்திகள், குற்றச் செய்திகள் , ட்ரெண்டிங் செய்திகள் , அரசியல் செய்திகளை , இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் செய்தி தளத்தின் தமிழ்நாடு பிரிவில் பார்க்கவும்.