திசை திருப்ப முயற்சி.. குற்றவாளிகளைக் காப்பாற்ற அரசே சதி.. கள்ளச்சாராய சாவு பற்றி சி.பி.ஐ விசாரணை தேவை - ராமதாஸ்!
kallakurichi liquor death : கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய சாவுகள் குறித்த விசாரணையை சி.பி.ஐயிடம் தமிழக அரசு ஒப்படைக்க வேண்டும் என பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய சாவுகள் குறித்த அனைத்து உண்மைகளும் வெளிக்கொண்டு வரப்பட வேண்டும். கள்ளச்சாராய வணிகர்களுக்கு காவலர்களாக இருப்பவர்கள் எவ்வளவு உயர்பதவியில் இருந்தாலும் அவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு தண்டிக்கப்பட வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
குற்றவாளிகளைக் காப்பாற்ற அரசே சதி
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கள்ளக்குறிச்சி நகரம் கருணாபுரத்தில் 40&க்கும் மேற்பட்டோர் உயிரிழக்கக் காரணமான கள்ளச்சாராய வணிகர்கள் மற்றும் அவர்களுக்கு பின்னணியில் இருப்பவர்களை சட்டத்தின் முன் நிறுத்தி, கடுமையான தண்டனை பெற்றுத்தர வேண்டும் என்ற குரல்கள் ஓங்கி ஒலிக்கத் தொடங்கியுள்ள நிலையில், இந்த வழக்கின் குற்றவாளிகளை தப்ப வைக்க முயற்சிகள் நடக்கின்றன. ஏராளமான குடும்பங்கள் வீதிக்கு வருவதற்கு காரணமான குற்றவாளிகளைக் காப்பாற்ற அரசே சதி செய்வது கண்டிக்கத்தக்கதாகும்.
கள்ளக்குறிச்சியில் நிகழ்ந்த கள்ளச்சாராய சாவுகளை காவல்துறையின் அலட்சியத்தால் நடந்த ஒன்றாக கருதமுடியாது. ஆட்சியாளர்களின் ஆதரவுடன், அரசு எந்திரத்தின் ஒத்துழைப்புடன் நிகழ்த்தப்பட்ட படுகொலைகளாகவே பார்க்க வேண்டியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தின் ஆட்சியர், காவல்துறை உயரதிகாரிகள், ஆளுங்கட்சியின் மாவட்ட செயலாளர்களாக பணியாற்றும் இரு சட்டமன்ற உறுப்பினர்கள் முதல் மாவட்டத்தின் பொறுப்பு அமைச்சர் வரை அனைவரின் ஆதரவும் கள்ளச்சாராய வணிகர்களுக்கு இருந்திருக்கிறது.