தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Electricity Price Hike : வேலையில்லாத் திண்டாட்டம் பெருகும்.. மின்சாரக் கட்டணத்தை உயர்த்துவது நியாயமல்ல - அன்புமணி!

Electricity Price Hike : வேலையில்லாத் திண்டாட்டம் பெருகும்.. மின்சாரக் கட்டணத்தை உயர்த்துவது நியாயமல்ல - அன்புமணி!

Divya Sekar HT Tamil
Sep 24, 2023 10:47 AM IST

மின்கட்டணம் குறைக்கப்படாவிட்டால் தமிழக பொருளாதாரம் வீழ்ச்சியடையும் வேலையில்லாத் திண்டாட்டம் பெருகும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்

ட்ரெண்டிங் செய்திகள்

இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில்,” தமிழ்நாட்டில் கடந்த ஓராண்டில் அடுத்தடுத்து இரு முறை நடைமுறைப் படுத்தப்பட்ட மின்சாரக் கட்டண உயர்வு அதன் விளைவுகளைக் காட்டத் தொடங்கியுள்ளது. தொழில் மற்றும் வணிகப் பிரிவினருக்கான மின்சாரக் கட்டணம் நேரடியாகவும், மறைமுகமாகவும் உயர்த்தப்பட்டிருப்பதால் பொருட்களின் உற்பத்திச் செலவு அதிகரித்திருப்பதுடன், முதலீடு வெளியேறுதல், வேலையிழப்பு உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன.

தமிழ்நாட்டில் வீடுகளுக்கான மின்கட்டணம் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 52% வரை உயர்த்தப்பட்டது. தொழில் மற்றும் வணிகப் பயன்பாட்டுக்கான மின்கட்டணமும் கிட்டத்தட்ட அதே அளவில் உயர்ந்தது. அதனால், தொழில் மற்றும் வணிக நிறுவனங்கள் கடுமையான நெருக்கடியை எதிர்கொண்டன. கடந்த ஆண்டு உயர்த்தப்பட்ட மின்கட்டணத்தை குறைக்க வேண்டும் என்று சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில்துறை வலியுறுத்தி வந்த நிலையில், கடந்த ஜூலை மாதம் வணிகப் பயன்பாட்டுக்கான மின்கட்டணம் மீண்டும் 2.18% உயர்த்தபட்டது. 

அதுமட்டுமின்றி, நிலையான கட்டணம், காலையிலும், மாலையிலும் 6 மணி முதல் 10 மணி வரை அதிக மின் பயன்பாட்டு நேரக் கட்டணம் என பல வழிகளின் மறைமுகமாகவும் மின்சாரக் கட்டணம் உயர்த்தப்பட்டிருக்கிறது. இதை சமாளிக்க முடியாத சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் நாளை (செப்டம்பர் 25) ஒரு நாள் வேலைநிறுத்தப் போராட்டம் அறிவித்துள்ளன.

ஒவ்வொருமுறை மின்கட்டணம் உயர்த்தப்படும் போதும், அதை திரும்பப்பெற வேண்டும் என்று கோரி நடத்தப்படும் வழக்கமான போராட்டமாக இதை அரசு பார்க்கக்கூடாது. அடுத்தடுத்து விதிக்கப்பட்ட தாங்க முடியாத மின்கட்டண உயர்வால் அழிவின் விளிம்புக்கே சென்று விட்ட சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் தங்களைக் காப்பாற்றக் கோரி விடுக்கும் அபயக்குரலாகவே இதை அரசு பார்க்க வேண்டும். 

கொடிசியா எனப்படும் கோவை மாவட்ட சிறுதொழில் நிறுவனங்கள் சங்கம் உள்பட 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நிறுவனங்கள் இந்த வேலை நிறுத்தத்தில் பங்கேற்கின்றன; ஏறக்குறைய 3 கோடி தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் செய்யவுள்ளனர் என்பதிலிருந்தே நிலைமையின் தீவிரத்தை அரசு உணர்ந்து கொள்ள வேண்டும்; சிறு, குறு, நடுத்தர தொழில்களைக் காப்பாற்ற வேண்டும்.

சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களின் போராட்டம் மிகவும் நியாயமானது. மின்சாரக் கட்டண உயர்வைத் தாங்கிக் கொள்ள முடியாமல், சிறு, குறு மற்றும் தொழில் நிறுவனங்கள் தங்களை நிலைநிறுத்திக் கொள்ள போராடிக் கொண்டிருக்கின்றன என்பது தான் உண்மை. நிலையான கட்டணம் 400% அதிகரிக்கப்பட்டதாலும், ஒரு நாளைக்கு 10 மணி நேரம் அதிக மின்சார பயன்பாட்டு நேரமாக அறிவிக்கப்பட்டு, அந்த நேரத்தில் பயன்படுத்தப்படும் மின்சாரத்திற்கு 25% கூடுதல் கட்டணம் வசூலிக்கப் படுவதாலும் பல சிறு, குறு தொழில் நிறுவனங்கள் மூடப்பட்டு விட்டன. 

பல நிறுவனங்கள் குஜராத் போன்ற மாநிலங்களுக்கு இடம் பெயர்ந்து விட்டன. அதை விட அதிர்ச்சியளிக்கும் உண்மை கடந்த 4 மாதங்களில் கோவை மண்டலத்தில் குறிப்பிடத்தக்க வகையில் எந்த நிறுவனமும் தொடங்கப் படவில்லை. இவை அனைத்துமே சிறு, குறு, நடுத்தர தொழில்துறையின் வீழ்ச்சியையேக் காட்டுகின்றன. இதேநிலை தொடர்ந்தால் தமிழக பொருளாதாரம் வீழ்ச்சியடைவதுடன், வேலையில்லாத் திண்டாட்டமும் அதிகரிக்கும்.

வணிகப் பயன்பாட்டுக்கான மின்கட்டண உயர்வு தொழிற்சாலைகளையும், வணிக நிறுவனங்களையும் மட்டுமே மட்டுமே பாதிப்பது கிடையாது. தமிழ்நாட்டின் பொருளாதாரத்தையும், மக்களையும், விவசாயத்தையும் கூட மிகக்கடுமையாக பாதிக்கத் தொடங்கியுள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு வரை ரூ.6000க்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு குதிரைத் திறன் கொண்ட நீர் இறைக்கும் எந்திரத்தின் விலை இப்போது ரூ.11,000 ஆக, அதாவது கிட்டத்தட்ட இரு மடங்காக அதிகரித்திருக்கிறது. சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களில் உற்பத்தி செய்யப்படும் பிற பொருட்களின் விலைகளும் உயர்ந்திருக்கின்றன.

தமிழ்நாட்டின் வளர்ச்சியையும், தொழில் நிறுவனங்களின் வளர்ச்சியையும் தனித்தனியாக பிரித்துப் பார்க்க முடியாது. 2030&ஆம் ஆண்டுக்குள் தமிழ்நாட்டை ஒரு லட்சம் கோடி அமெரிக்க டாலர் மதிப்புள்ள பொருளாதாரமாக உயர்த்த இலக்கு நிர்ணயித்துள்ள தமிழக அரசு, அந்த இலக்கை அடைய வேண்டும் என்றால் தமிழ்நாட்டில் உள்ள சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களும் வளர்ச்சியடைய வேண்டும் என்பதை உணர வேண்டும். 

மராட்டியம், ஹரியானா, குஜராத் உள்ளிட்ட மாநிலங்களில் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு மின்சார மானியம் வழங்கப்படும் நிலையில், தமிழ்நாட்டில் மட்டும் மின்சாரக் கட்டணத்தை நேரடியாகவும், மறைமுகமாகவும் உயர்த்துவது நியாயமல்ல.இதுதொடர்பாக தமிழக அரசு நேற்று சில அறிவிப்புகளை வெளியிட்டாலும் கூட அதனால் பயனில்லை.

சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களை வீழ்ச்சியிலிருந்து காப்பாற்றும் நோக்குடன் அவற்றின் பிரதிநிதிகளை அழைத்துப் பேச வேண்டும். மின்கட்டணக் குறைப்பு உள்ளிட்ட அவர்களின் கோரிக்கைகளை எந்த அளவுக்கு நிறைவேற்ற முடியுமோ, அந்த அளவுக்கு நிறைவேற்ற வேண்டும்” என தெரிவித்துள்ளார்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

IPL_Entry_Point

டாபிக்ஸ்