தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Anbumani: ’கொள்ளிடத்தை கொள்ளையடிப்பதா?’ பாமக தலைவர் அன்புமணி ஆவேசம்!

Anbumani: ’கொள்ளிடத்தை கொள்ளையடிப்பதா?’ பாமக தலைவர் அன்புமணி ஆவேசம்!

Kathiravan V HT Tamil
Sep 03, 2023 11:48 AM IST

”ஓர் ஆற்றில் சராசரியாக 4 கி.மீக்கு ஒரு மணல் குவாரி என்பதை எந்த வகையிலும் நியாயப்படுத்த முடியாது”

பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்

ட்ரெண்டிங் செய்திகள்

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டில் கொள்ளிடம் ஆற்றில் 11 மணல் குவாரிகள் உள்பட மொத்தம் 25 மணல் குவாரிகள் ஏற்கனவே செயல்பட்டு வரும் நிலையில், மேலும் 10 மணல் குவாரிகளை திறக்க தமிழக அரசு முடிவு செய்திருப்பதாக வெளியாகியுள்ள செய்திகள் அதிர்ச்சியளிக்கின்றன. இந்த மணல் குவாரிகள் திறக்கப் பட்டால், கொள்ளிடம் ஆற்றில் மட்டும் 20 மணல் குவாரிகள் செயல்படும். 87 கி.மீ தொலைவுக்குள் 20 மணல் குவாரிகள் திறக்கப்பட்டால், அதைவிடக் கொடூரமாக கொள்ளிடம் ஆற்றை சீரழிக்க முடியாது.

தமிழ்நாட்டில் சில ஆண்டுகளுக்கு முன் 48 மணல் குவாரிகள் செயல்பட்டு வந்தன. அவற்றை மூட வேண்டும் என்று வலியுறுத்தி பா.ம.க. நடத்திய அரசியல் மற்றும் சட்டப் போராட்டங்கள் காரணமாக அவற்றில் பெரும்பாலானவை மூடப்பட்டன. கொரோனா பெருந்தொற்றுக்குப் பிறகு தமிழகத்தில் கிட்டத்தட்ட அனைத்து மணல் குவாரிகளும் மூடப்பட்டு விட்டன. கடந்த இரு ஆண்டுகளில் பல இடங்களில் மாட்டு வண்டி மணல் குவாரிகள் அமைக்கப்பட்டன. அதன் தொடர்ச்சியாக கடந்த மே மாதத்தில் காவிரி, கொள்ளிடம், வைப்பாறு, வெள்ளாறு உள்ளிட்ட 9 ஆறுகளில் மொத்தம் 25 மணல் குழிகள் திறக்கவும், அவற்றிலிருந்து 7.51 லட்சம் அலகுகள் மணல் வெட்டியெடுக்கவும் தமிழக அரசு அனுமதி அளித்தது.

அதன்பின் 3 மாதங்கள் மட்டுமே நிறைவடைந்துள்ள நிலையில் அடுத்தக்கட்டமாக மேலும் 10 மணல் குவாரிகளை அமைக்க நீர்வளத்துறை தீர்மானித்துள்ளது. தமிழக மணல் லாரி உரிமையாளர்கள் நல கூட்டமைப்புக்கு எழுதியுள்ள கடிதத்தில் நீர்வளத்துறையின் தஞ்சாவூர் கோட்ட செயற்பொறியாளர் முருகவேல் இதை உறுதி செய்திருக்கிறார். புதிதாக அமைக்கப்படவிருக்கும் 10 மணல் குவாரிகளும் கொள்ளிடம் ஆற்றில் தான் அமைக்கப்படவுள்ளன. தஞ்சாவூர் மாவட்டத்தில் மேலப்புனவாசல், வீரமாங்குடி மேற்கு, நடுபடுகை மேற்கு, முள்ளங்குடி, கோவிந்தநாட்டுச்சேரி, கருப்பூர்படுகை, குறிச்சி ஆகிய இடங்களிலும், மயிலாடுதுறை மாவட்டத்தில் சித்தமல்லி, குறிச்சி (மயிலாடுதுறை மாவட்டம்), அகர எலத்தூர் ஆகிய இடங்களிலும் புதிய மணல் குவாரிகள் அமைக்கப்படவிருப்பதாக நீர்வளத்துறை தெரிவித்திருக்கிறது.

தமிழ்நாட்டில் மே மாதம் திறக்கப்பட்ட 25 மணல் குவாரிகளில் 11 மணல் குவாரிகள் கொள்ளிடம் ஆற்றில் தான் அமைந்திருந்தன. இப்போது புதிதாக அறிவிக்கப்பட்ட 10 மணல் குவாரிகளில் கோவிந்த நாட்டுச்சேரி என்ற இடத்தில் அமையவுள்ள குவாரி ஏற்கனவே அறிவிக்கப்பட்ட பட்டியலில் இருந்தது ஆகும். மீதமுள்ள 9 மணல் குவாரிகளும் புதிதாக திறக்கப்படுபவை. திருமானூரையடுத்த மேலப்புனவாசல் முதல் திருப்பனந்தாள் அருகில் உள்ள குறிச்சி வரை 48 கி.மீ தொலைவில் 9 புதிய மணல் குவாரிகளும் அமைக்கப்படுகின்றன. ஏற்கனவே அறிவிக்கப்பட்ட மணல் குவாரிகளையும் சேர்த்தால் கொள்ளிடத்தில் 87 கி.மீ தொலைவில் 20 மணல் குவாரிகள், அதாவது 4 கி.மீக்கு ஒரு குவாரி அமைக்கப்படுகிறது.

ஓர் ஆற்றில் சராசரியாக 4 கி.மீக்கு ஒரு மணல் குவாரி என்பதை எந்த வகையிலும் நியாயப்படுத்த முடியாது. இவ்வளவு குறுகிய இடைவெளியில் மணல் குவாரிகள் அமைக்கப்பட்டால், ஒரு குவாரியின் எல்லை முடியும் முன்பே, அடுத்த குவாரியின் எல்லை தொடங்கி விடும். அப்படிப்பார்த்தால் கொள்ளிடம் ஆறு 87 கி.மீ தொலைவுக்கு இடைவெளி இல்லாமல் சூறையாடப்பட்டிருக்கும். இதனால், கொள்ளிடக் கரையோரம் உள்ள கிராமங்களில் நிலத்தடி நீர் மட்டம் குறைதல், கடல் நீர் உள்ளே நுழைதல் உள்ளிட்ட ஏராளமான பாதிப்புகள் ஏற்படும். இது குறித்த எந்தக் கவலையும் இல்லாமல், புதிது, புதிதாக மணல் குவாரிகளை திறப்பதற்கு நீர்வளத்துறை நடவடிக்கை எடுப்பதை எந்த வகையிலும் நியாயப்படுத்த முடியாது.

தமிழ்நாட்டில் கட்டுமானப் பணிகளுக்கு அதிக மணல் தேவைப்படுவதாகவும், மே மாதம் அறிவிக்கப் பட்ட 25 மணல் குவாரிகளில் பல திறக்கப்படவில்லை என்றும் நீர்வளத்துறை தெரிவித்திருக்கிறது. இதில் எந்த நியாயமும் இல்லை. கடந்த மே மாதம் அறிவிக்கப்பட்ட 25 மணல் குவாரிகளில் 8 குவாரிகள் தஞ்சாவூர் மாவட்டத்திலும், மயிலாடுதுறை மாவட்டத்திலும் உள்ளன. இவற்றில் 7 குவாரிகளில் மணல் இப்போதும் அள்ளப்பட்டு வருகிறது. கோவிந்தநாட்டுச்சேரி என்ற இடத்தில் மட்டும் தான் குவாரி அமைக்கப்படவில்லை. அங்கும் இப்போது மணல் குவாரி அமைக்க முடிவு செய்யப்பட்டிருக்கிறது.

கட்டுமானப் பணிகளுக்கு அதிக மணல் தேவைப்படுகிறது என்பது புதிய மணல் குவாரிகளை திறப்பதற்கான காரணமாக இருக்க முடியாது. அண்டை மாநிலமான கேரளத்தில் மணல் அள்ள தடை விதிக்கப்பட்டுள்ளது; கர்நாடகத்தில் மணல் அள்ள கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. ஆனாலும், அந்த மாநிலங்களில் கட்டுமானப் பணிகள் தடைபடாமல் நடந்து கொண்டு தான் இருக்கின்றன. அதுமட்டுமின்றி, ஆற்று மணலுக்கு ஏராளமான மாற்றுகளும் வந்து விட்டன. தமிழ்நாடு அரசும் நினைத்தால் வெளிநாடுகளில் இருந்து மணல் இறக்குமதியை அதிகரிப்பது, செயற்கை மணல் உற்பத்தி ஆகியவற்றின் மூலம் தமிழகத்தின் மணல் தேவையை பூர்த்தி செய்யலாம். அவற்றை செய்யாமல் மணல் குவாரிகளை ஒன்றன்பின் ஒன்றாக திறப்பது இயற்கை மீது நடத்தும் கொடும் தாக்குதலாகும்.

கொள்ளிடம் ஆற்றில் 10 கி.மீக்கு ஒரு தடுப்பணை கட்டி தண்ணீரை சேமிக்க வேண்டும் என்று பா.ம.க வலியுறுத்தி வருகிறது. ஆனால், தமிழக அரசு 10 கிமீக்கு 2 மணல் குவாரிகளை அமைத்து நிலத்தடி நீர்மட்டத்தை சீரழித்து வருகிறது. காலநிலை மாற்றம் பெரும் அச்சுறுத்தலாக உருவெடுத்து வருகிறது. காவிரியில் தண்ணீர் திறக்க கர்நாடகம் மறுத்து வருகிறது. இத்தகைய சூழலில் தடுப்பணைகள் கட்டி தண்ணீரை சேமிப்பது தான் அரசு செய்ய வேண்டிய செயலாகும். அதை விடுத்து குவாரிகளை அமைப்பதை அனுமதிக்க முடியாது. கொள்ளிடம் ஆற்றில் 10 புதிய மணல் குவாரிகளை அமைக்கும் முடிவை தமிழக அரசு உடனடியாக கைவிட வேண்டும். இல்லாவிட்டால், மண்ணையும், மக்களையும், நீர்வளத்தையும் காக்க மக்களைத் திரட்டி மிகப்பெரிய போராட்டத்தை பாட்டாளி மக்கள் கட்சி முன்னெடுக்கும்.

IPL_Entry_Point

டாபிக்ஸ்