தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Tnpsc Group 4: டி.என்.பி.எஸ்.சி காலியிடங்களின் எண்ணிக்கை போதுமானதல்ல- அன்புமணி

TNPSC Group 4: டி.என்.பி.எஸ்.சி காலியிடங்களின் எண்ணிக்கை போதுமானதல்ல- அன்புமணி

Pandeeswari Gurusamy HT Tamil
Jun 21, 2023 10:50 AM IST

டி.என்.பி.எஸ்.சி நான்காம் தொகுதி பணியாளர்கள் தான் பெரும்பாலும் மக்களுக்கு நேரடியாக பணி செய்பவர்கள். அவர்களின் எண்ணிக்கை குறைந்தால் மக்களுக்கு வழங்கப்படும் அரசு சேவைகள் பாதிக்கப்படும்-அன்புமணி

அன்புமணி ராமதாஸ்
அன்புமணி ராமதாஸ்

ட்ரெண்டிங் செய்திகள்

"தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் கடந்த ஆண்டு ஜுலை மாதம் 24-ஆம் நாள் நடத்தப்பட்ட தொகுதி 4 தேர்வின் மூலம் தேர்ந்தெடுக்கப்படவுள்ள பணியாளர்களின் எண்ணிக்கையை, ஏற்கனவே அறிவிக்கப்பட்ட 10,117 என்பதிலிருந்து 10,748 ஆக உயர்த்த தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் முடிவு செய்திருப்பதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன. காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை வெறும் 631 மட்டுமே உயர்த்தப்படவிருக்கிறது. தமிழ்நாட்டில் படித்துவிட்டு வேலையில்லாமல் இருக்கும் இளைஞர்களின் வேலைவாய்ப்பு தேவை என்ற யானைப்பசிக்கு இது சோளப்பொறி போன்றது தான். இது போதுமானதல்ல.

கடந்த ஆண்டு மார்ச் மாதம் 30-ஆம் நாள் அறிவிக்கப்பட்ட நான்காம் தொகுதி பணிகளுக்கான போட்டித்தேர்வு ஜூலை மாதம் நடத்தப்பட்டது. அதன்பின் கடந்த மார்ச் 25-ஆம் நாள் போட்டித்தேர்வுக்கான முடிவுகள் அறிவிக்கப்பட்டது. அதன்பின் 3 மாதங்களாகிவிட்ட நிலையில் இன்று வரை சான்றிதழ் சரிபார்ப்பு முடிவடைந்து பணியமர்த்தல் ஆணைகள் வழங்கப்படவில்லை. நான்காம் தொகுதி தேர்வு அறிவிக்கப்பட்டு, இதுவரை 15 மாதங்களாகி விட்ட நிலையில், இந்த 15 மாதங்களில் மட்டும் சுமார் 15 ஆயிரம் பணியிடங்கள் காலியாகியிருக்கக் கூடும். அந்த இடங்களைக் கூட நிரப்பாமல் 10,748 பணியிடங்கள் மட்டும் தான் நிரப்பப்படும் என்பது எந்த வகையிலும் நியாயமல்ல.

டி.என்.பி.எஸ்.சி நான்காம் தொகுதி பணியாளர்கள் தான் பெரும்பாலும் மக்களுக்கு நேரடியாக பணி செய்பவர்கள். அவர்களின் எண்ணிக்கை குறைந்தால் மக்களுக்கு வழங்கப்படும் அரசு சேவைகள் பாதிக்கப்படும். இதைக் கருத்தில் கொண்டு ஆண்டுக்கு ஒருமுறை நான்காம் தொகுதி பணியாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும். ஆனால், கடந்த 11 ஆண்டுகளில் மூன்று முறை மட்டும் தான் நான்காம் தொகுதி பணியாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். அதனால் தான் இம்முறை கடந்த ஆண்டு ஜூலை மாதம் நடத்தப்பட்ட போட்டித் தேர்வின் மூலம் குறைந்தது 30 ஆயிரம் நான்காம் தொகுதி பணியாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்று படித்த இளைஞர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

தமிழ்நாட்டில் இன்றைய சூழலில் நான்கரை லட்சம் அரசு பணியிடங்கள் காலியாக உள்ளன. அவற்றில் குறைந்தது மூன்றில் ஒரு பங்கு நான்காம் தொகுதி பணிகள் ஆகும். இந்த காலியிடங்களை நிரப்ப ஆண்டுக்கு 50,000 நான்காம் தொகுதி பணியாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும். இதைக் கருத்தில் கொண்டு கடந்த ஆண்டு நடத்தப்பட்ட போட்டித்தேர்வுகளின் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படவுள்ள நான்காம் தொகுதி பணியாளர்களின் எண்ணிக்கையை குறைந்தபட்சம் 20 ஆயிரமாக அதிகரிக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்; அதன்மூலம் தமிழ்நாட்டில் படித்து விட்டு வேலையில்லாமல் இருக்கும் இளைஞர்களின் இருண்ட வாழ்வில் தமிழக அரசு ஒளியேற்றவேண்டும்" இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. 

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

 

IPL_Entry_Point

டாபிக்ஸ்