சென்னை நகைக்கடையில் 9 கிலோ தங்க வைர நகைகள் கொள்ளை- 9 தனிப்படைகள் அமைத்து சோதனை
சென்னையில் ஜே.எல் கோல்டு பேலஸ் கடையில் சுமார் 9 கிலோ தங்க நகைகள் மற்றும் 20 லட்சம் மதிப்புள்ள வைர கற்கள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளதாக முதல் கட்ட தகவல்கள் வெளியாகி உள்ளது.

சென்னை பெரம்பூரில் செயல்பட்டு வரும் நகைக்கடை ஒன்றில் 9 கிலோ அளவிலான தங்கம் மற்றும் வைர நகைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றர்.
சென்னை பெரம்பூர் பகுதியில் உள்ள பேப்பர் மில் சாலையில் ஸ்ரீதர் என்பவருக்கு சொந்தமான ஜே.எல்.கோல்டு பேலஸ் என்ற நகைக்கடை செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் நேற்று ஸ்ரீதர் வழக்கம் போல் கடையை பூட்டிவிட்டு வீட்டிற்கு சென்றுள்ளார்.
இந்நிலையில் நேற்று இரவு ஸ்ரீதரின் நகைக்கடையின் ஷட்டரை வெல்டிங் மெஷினால் வெட்டி கொள்ளையர்கள் கொள்ளையடித்துள்ளனர். இதில் நகைக்கடையில் இருந்த சுமார் 9 கிலோ தங்க நகைகள் மற்றும் 20 லட்சம் மதிப்புள்ள வைர கற்கள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளதாக முதல் கட்ட தகவல்கள் வெளியாகி உள்ளது. மேலும் நகைக்கடையில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி ஹார்ட் டிஸ்கையும் கொள்ளையர்கள் எடுத்துச் சென்றுள்ளனர்.
