தமிழ் செய்திகள்  /  தேசம் மற்றும் உலகம்  /  மனித கடத்தலுக்கு எதிரான உலக தினம் .. 2021 ஆம் ஆண்டு காணாமல் போன குழந்தைகளின் எண்ணிக்கை 8,168.. முழு விவரம் இதோ!

மனித கடத்தலுக்கு எதிரான உலக தினம் .. 2021 ஆம் ஆண்டு காணாமல் போன குழந்தைகளின் எண்ணிக்கை 8,168.. முழு விவரம் இதோ!

Divya Sekar HT Tamil
Jul 30, 2023 01:07 PM IST

2021 ஆம் ஆண்டு இறுதியில் மொத்தம் காணாமல் போன குழந்தைகளின் எண்ணிக்கை 8168, அதில் 5949 பெண் குழந்தைகள் அதாவது 73 சதவிதத்தினர் பெண் குழந்தைகள்.

மனித கடத்தலுக்கு எதிரான உலக தினம்
மனித கடத்தலுக்கு எதிரான உலக தினம்

ட்ரெண்டிங் செய்திகள்

இந்தியாவின் இலாப நோக்கமற்ற முன்னணி அமைப்பான CRY அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில்,”சென்னை, ஜூலை 25, 2023: ஐக்கிய நாடுகள் சபையின் கோரிக்கை “ஆள் கடத்தலால் பாதிக்கப்பட்ட ஒவ்வொருவரையும் கண்டடையுங்கள், எவரையும் விட்டுவிட்டாதீர்கள்” என்பதுதான். இந்த மனித கடத்தலுக்கு எதிரான உலக தினத்தின் கருத்தாக்கமாக குழந்தைகள் இருக்கின்றார்கள்.

 இந்தியாவில் ஆள்கடத்தலால் பாதிக்கப்படுபவர்களில் பெரும்பான்மையானோர் குழந்தைகளாக இருப்பதால், கடைக்கோடியிலிருக்கும் குழந்தையையும் உள்ளடக்கிய செயல்திறன்மிக்க ஒரு பாதுகாப்பு வளையத்தை அமைப்பதின் அவசியத்தை CRY அமைப்பானது வலியுறுத்துகிறது.

“மறைந்திருக்கும்’ ஆபத்து

ஆள் கடத்தல் என்பது ஒரு “மறைவான’ குற்ற நடவடிக்கை என்று கருதப்படுகிறது. ஆகவே அதன் வீச்செல்லை குறித்த நம்பகமான உடனடி தரவுகள் தற்போது இல்லாதிருக்கிறது. ஆள் கடத்தல் தொடர்பான ஒட்டு மொத்த நிகழ்வுகளில் அறியப்பட்ட அல்லது புகார் அளிக்கப்பட்டவைகளின் எண்ணிக்கை அதன் உள்ளமைந்த ஒரு சிறு பகுதியாக மட்டுமே காணப்படுகிறதே ஒழிய அதன் உண்மையான வீச்சளவு இப்போதும் அறியப்படாததாகவே இருக்கிறது.

ஆகவே பல்வேறு நோக்கங்களுக்காகக் கடத்தப்பட்ட குழந்தைகளின் சரியான எண்ணிக்கையைப் பெறுவது கிட்டத்தட்ட இயலாத காரியமாகவே இப்போதும் இருக்கிறது

இருப்பினும், இந்த கவலையளிக்கக் கூடிய இந்த குழந்தைகள் பாதுகாப்பு பிரச்சினைக்கு விரைவில் தீர்வு காண வேண்டிய அவசியத்தை தமிழ்நாடு மாநிலத்திற்கான தேசிய குற்ற ஆவனக் காப்பகம் (NCRB) சமீபத்தில் வெளியிட்ட புள்ளிவிவரங்கள் கோடிட்டுக் காட்டுகிறது

தேசிய குற்ற ஆவனக் காப்பக தரவுகளின் படி, 2021 ஆம் ஆண்டு தமிழ்நாடு மாநிலத்தில் மொத்தத்தில் 16 குழந்தைகள் (18 வயதுக்கும் உட்பட்டவர்கள்) கடத்தப்பட்டு அவர்கள் அனைவரும் மீட்கப்பட்டிருக்கிறார்கள். ஆள்கடத்தலுக்கான முக்கிய நோக்கமாக பாலியல் சுரண்டல் மற்றும் வலுக்கட்டாய உடலுழைப்பு ஆகியவை சுட்டிக்காட்டப்படுகின்றது

ஆனாலும், காணாமல் போகும் குழந்தைகளின் பெரும் எண்ணிக்கை கவலையளிக்கக் கூடிய ஒன்றாக இருக்கிறது. 2021 ஆம் ஆண்டு மாநிலத்திலிருந்து மொத்தம் 6,399 குழந்தைகள் (18 வயதுக்கும் உட்பட்டவர்கள்) காணாமல் போனவர்களாக அறிவிக்கப்பட்டிருக்கிறார்கள். அவர்களில் 4,914 பேர் பெண் குழந்தைகள். கடந்த வருடங்களில் காணாமல் போன கண்டுபிடிக்கமுடியாத (1035 பெண் குழந்தைகள் உட்பட) 1769 குழந்தைகளும் இந்த எண்ணிக்கையுடன் சேர்க்கப்படவேண்டும்.

ஆக 2021 ஆம் ஆண்டு இறுதியில் மொத்தம் காணாமல் போன குழந்தைகளின் எண்ணிக்கை 8168, அதில் 5949 பெண் குழந்தைகள் அதாவது 73 சதவிதத்தினர் பெண் குழந்தைகள். 2021 ஆம் ஆண்டு 4,832 பெண் குழந்தைகள் உட்பட மொத்தம் 6,301 குழந்தைகள் கண்டறியப்பட்டு மீட்கப்பட்டிருந்தாலும், 1117 சிறுமிகள் உட்பட மொத்தம் 1867 குழந்தைகள் இன்னும் கண்டுபிடிக்கப்படாமலேயே இருக்கிறார்கள்.

அப்படியானால், 2021 ஆம் ஆண்டு மாநில அளவில் ஒவ்வொரு நாளும் சாசரியாக 5 குழந்தைகள்,காணாமல் போயிருக்கிறார்கள் அதில் 3 பேர் பெண் குழந்தைகள், மற்றும் அவர்கள் இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை என்று புரிந்துகொள்ளப்படுகிறது. இது மிகவும் பெரும் கவலையளிக்கக் கூடிய ஒரு விஷயமாகும்.

கவலையளிக்கக் கூடிய போக்குகள்

கடந்த சில ஆண்டுகளாக கடத்தலுக்கு உள்ளாகும் குழந்தைகளின் எண்ணிக்கை குறைந்து வருகிறது என்றாலும் காணாமல் போகும் குழந்தைகளின் எண்ணிக்கை அபாயகரமாக அதிகரித்துவருகிறது.

தமிழ்நாட்டில் 2021 ஆம் ஆண்டு கடத்தப்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 2019 ஆண்டின் எண்ணிக்கையான 43 குழந்தைகளோடு ஒப்பிடுகையில் 16 ஆகக் குறைந்துள்ளதாக NCRBதரவுகள் தெரிவிக்கிறது மற்றும் முன்னெப்போதுமில்லாத வகையில் கிட்டத்தட்ட 4 மாதங்கள் பொதுமுடக்கத்தால் பாதிக்கப்பட்ட 2020 ஆம் ஆண்டிலும் கூட 24 குழந்தைகள் கடத்தப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால் மாநில அளவில் 2019 ஆம் ஆண்டில் காணாமல் போன குழந்தைகளின் எண்ணிக்கையான 4,519 ஐ விட 2021ஆம் ஆண்டு காணாமல் போன குழந்தைகளின் எண்ணிக்கை 6,399 ஆக அதிகரித்துக் காணப்பட்டது. இது கடந்த மூன்றுவருடங்களில் 41% அதிகமாகும். 2020 ஆம் ஆண்டிலும் கூட முன்னெப்போதுமில்லாத வகையில் கோவிட் -19 பெருந்தொற்று காரணமாக தேசிய அளவிலான பொது முடக்கம் மார்ச் மாதத்திலிருந்து ஜூன்மாதம் வரை கிட்டத்தட்ட நான்கு மாதங்களுக்கு அமலில் இருந்த போதும், மாநிலத்தில் 4,591 குழந்தைகள் காணாமல் போனதாக அறிவிக்கப்பட்டது.

நமது குழந்தைகளை பாதுகாக்க நாம் அனைவரும் ஒன்றிணைவோம்”

CRY- குழந்தைகளின் உரிமைகள் மற்றும் நீங்கள்(சைல்ட் ரைட்ஸ் அண்ட் யூ) தென்னிந்திய பிராந்திய இயக்குனர் ஜான் ராபர்ட்ஸ் கூறுவது, “ குழந்தைக் கடத்தல் என்பது ஒரு அருவருக்கத்தக்க குற்றச்செயல். அது குழந்தைகளின் களங்கமில்லா குணம் மற்றும் அவர்களின் பிரகாசமான எதிர்காலத்தை அழித்துவிடுகிறது. இந்த அகில உலக மனித கடத்தலுக்கு எதிரான தினத்தில், இந்த ஆபத்துக்கு எதிராக ஒன்றிணைந்து தமிழ்நாட்டிலுள்ள ஒவ்வொரு குழந்தையின் பாதுகாப்பையும், நல வாழ்வையும் உறுதி செய்ய அனைவருக்கும் நாங்கள் அழைப்பு விடுக்கிறோம் “.

மேலும், “இந்த நெருக்கடியின் தீவிரத்தை அடையாளம் கண்டு சுரண்டல் மற்றும் துன்புறுத்தல்களுக்கு ஆளாகாமல் நமது குழந்தைகளை காப்பதற்கு நாம் அனைவரும் ஒரு சமூகமாக ஒன்றிணைந்து செயல்படுவது மிக அத்தியாவசியமான ஒன்று “ என்று ஜான் தெரிவித்தார்.

பங்குதாரர்களுக்கு வேண்டுகோள்

தனிநபர் ஆட்கடத்தலுக்கு எதிரான உலக தினத்தன்று குழந்தைகளின் உரிமைகளை பாதுகாக்கவும் மற்றும் குழந்தை கடத்தலுக்கு எதிராக போராடவும் இறுதி நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு தமிழ் நாடு அரசை ஜான் ராபர்ட்ஸ் அவர்கள் வலுயுறுத்துகிறார்.

பின்வரும் பங்கு தாரர்களை, தமது துறை மற்றும் அமைப்பு சார் முயற்சிகளை தீவிரப்படுத்துமாறு வேண்டுகோள்விடுத்தார்;

அரசு அதிகாரிகள்: ஆட்கடத்தல்காரர்களை பிடிப்பதற்கான சட்டசெயல்முறைகளை வலுப்படுத்தி, எல்லை தாண்டிய கடத்தல் பிணையங்களைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர மாநிலங்களுக்கிடையேயான கூட்டாண்மையை மேம்படச்செய்ய வேண்டும்.

சமுதாயத்தினர் : குழந்தை கடத்தல் செயல்பாடுகளை முன்கூட்டியே அறிந்து புகார் அளிக்க உதவும் வகையில் அது தொடர்பான அறிகுறிகள் குறித்த விழிப்புணர்வை மேம்படுத்தவேண்டும்

NGOs(அரசு சாரா அமைப்புக்கள்) மற்றும் குடிமைச் சமூகம்: மீட்டெடுக்கப்பட்ட குழந்தைகளுக்கு ஒரு வலிமையான ஆதரவு அமைப்பை உருவாக்கவும் அவர்களுக்கு கல்வி, ஆரோக்கியம் மற்றும் மறுவாழ்வு வசதிகளை வழங்க அரசு மற்றும் சமூகத்துடன் ஒன்றிணைந்து செயல்படவேண்டும்

பொது மக்கள்: குழந்தைகளின் உரிமைகளை பாதுகாத்தல் மற்றும் குழந்தைகளுக்கு இணக்கமான ஒரு வாழ்வியல்சூழலை உருவாக்குதலுக்கான குறியிலக்கோடு மேற்கொள்ளப்படும் முன்முயற்சிகளுக்கு தீவிர ஆதரவை வழங்க வேண்டும்.

ஒரு வார விழிப்புணர்வு பிரச்சாரம்

தனிநபர் கடத்தலுக்கு எதிரான உலக தினத்தை முன்னிலைப்படுத்தும் நோக்கத்தோடு CRYஅதன் கூட்டு நிறுவனங்களோடு இணைந்து சேலம், தருமபுரி, திருநெல்வேலி, இராமநாதபுரம், திண்டுக்கல் மற்றும் சென்னை உட்பட தமிழ் நாட்டின் ஆறு மாவட்டங்களில் ஒரு வார கால விழிப்புணர்வு மற்றும் உணர்வூட்டல் பிரச்சாரத்தை மேற்கொள்ளவிருக்கிறது.

2023 ஜூலை 25 அன்று தொடங்கி 2023 ஜூலை 31 வரை நீடிக்கும் இந்த பிரச்சாரத் திட்டத்தில் உள்ளடங்குபவை:

வளரிளம்பருவ சிறுமிகள், பெற்றோர்கள் மற்றும் கிராம குழந்தை பாதுகாப்பு குழுக்கள் மற்றும் ஆட்கடத்தல் பிரச்சினை அடிப்படையிலான இதர சமூக அமைப்புக்களுக்கு உணர்வூட்டல் செயல்பாடுகள்.

அங்கன்வாடி பணியாளர்கள், ANMகள், பஞ்சாயத்து செயலாளர்கள் ஆகிய முன்னிலை பங்குதாரர்களுக்கு ஆட்கடத்தல் பிரச்சினை மற்றும் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வது பற்றிய உணர்வூட்டல் பயிலரங்க செயல்பாடுகள்.

ICPS, காவல்துறை(AHTUs), ICDS, CWC, வருவாய்த் துறை, சமூக நலவாழ்வு, கிராம பஞ்சாயத்து, IKP, பஞ்சாயத்து / மண்டல்/ மடலாம்/ மாவட்ட அளவிலான சுகாதாரம் மற்றும் கல்வி அமைப்புகளுடன் ஒருங்கிணைந்த கலந்தாய்வு சந்திப்புக்கள்.

முக்கிய இரயில் நிலையங்கள் மற்றும் பேருந்து நிலையங்களில்; பயனியர், வியாபாரிகள் மற்றும் அதிகாரிகளுக்கு ஆட்கடத்தல் பிரச்சினை குறித்து உணர்வூட்டும் செயல்திட்டங்கள்.

“ஆட்கடத்தல் அச்சத்திலிருந்து விடுபட்டுஒரு பாதுகாப்பான வாழ்க்கைச்சூழலை, சுதந்திரமாக அனுபவிக்கும் உரிமையை ஒவ்வொரு குழந்தையும் கொண்டுள்ளது என்பதில் CRY அதீத நம்பிக்கை கொண்டுள்ளது. குழந்தைகளின் உரிமைகளை தொடர்ந்து முன்னெடுத்துச்செல்வதில் CRY உறுதிபூண்டுள்ளது. மற்றும் பாதிப்புக்குள்ளாகக் கூடிய குழந்தைகளை கடத்தல் நடவடிக்கைகளில் இருந்து காப்பாற்றும் முயற்சிகளை அது தொடர்ந்து இடைவிடாது மேற்கொள்ளும்.” என்று ஜான் ராபர்ட்ஸ் கூறினார்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

IPL_Entry_Point

டாபிக்ஸ்