தமிழ் செய்திகள்  /  தேசம் மற்றும் உலகம்  /  Crime: திருமணமாகி ஒரு மாதம் கூட ஆகாத காதல் மனைவியை கொலை செய்த கணவர் உட்பட மூவர் கைது

Crime: திருமணமாகி ஒரு மாதம் கூட ஆகாத காதல் மனைவியை கொலை செய்த கணவர் உட்பட மூவர் கைது

Pandeeswari Gurusamy HT Tamil
Jun 01, 2023 09:31 AM IST

சஞ்சய் மற்றும் அவரது தந்தை லட்சுமணன்(50), தாயார் அம்முக்குட்டி(எ) பக்ருநிஷா(47) ஆகியோர் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணையை மேற்கொண்டனர்.

கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கணவன் மற்றும் பெற்றோர்
கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கணவன் மற்றும் பெற்றோர்

ட்ரெண்டிங் செய்திகள்

கோவை மத்துவராயபுரம் பகுதியைச் சேர்ந்த ரமணி (20) என்ற இளம் பெண் மற்றும் சஞ்சய்(20) ஆகிய இருவரும் கடந்த 6ம் தேதி வேளாங்கண்ணியில் காதல் திருமணம் செய்து கொண்டனர்.

இவர்களது திருமணத்திற்கு சஞ்சய்யின் இல்லத்தில் சம்மதம் தெரிவித்தனர். திருமணம் முடிந்து ரமணி, சஞ்சய்யின் குடும்பத்தினருடன் வசித்து வந்தார். இந்நிலையில் சஞ்சய் அடிக்கடி கல்லூரியில் படிக்கும் ஒரு மாணவியுடன் செல்போனில் பேசி வந்துள்ளார். இதனால் ரமணிக்கும் சஞ்சய்க்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாக தெரிகிறது. இதே வாக்குவாதம் தொடர்ந்த நிலையில் சஞ்சய் ரமணியின் கழுத்தை நசுக்கி கீழே தள்ளி துப்பட்டாவால் கழுத்தை நெறித்துள்ளார். இதில் ரமணி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

இதனை அடுத்து அந்த கொலையை மறைப்பதற்காக தனது தந்தை மற்றும் தாயாரின் உதவியுடன் ரமணியின் உடலில் இருந்த உடையை அகற்றி மஞ்சள் பொடியை கரைத்து உடல் முழுவதும் பூசி குளிக்க வைத்து மாற்று துணிகளை அணிவித்து சாணி பவுடர் குடித்து தற்கொலை செய்து கொண்டதாக நாடகமாடியுள்ளனர். இதனை அறியாமல் அக்கம் பக்கத்தினர் புளி கரைசலை கரைத்து ரமணியின் வாயில் ஊற்றியுள்ளனர்.

பின்னர் ஆலந்துறை பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு ரமணியின் உடலை எடுத்துச் சென்று காண்பித்து பிறகு பூலுவம்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு எடுத்துச் சென்றுள்ளனர். அங்கு அவர் உயிரிழந்ததாக மருத்துவர்கள் பரிசோதித்து தெரிவித்ததையடுத்து அவரது உடல் கோவை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக எடுத்துச் செல்லப்பட்டது.

இது குறித்து ரமணியின் தந்தை கருப்புசாமிக்கு தகவல் அளிக்கப்பட்டது. அங்கு வந்த கருப்புசாமி மற்றும் அவரது மகன் உயிரிழந்தது ரமணி தான் என்பதை உறுதி செய்தனர். இருப்பினும் ரமணியின் உயிரிழப்பில் சந்தேகம் இருப்பதாகவும் அவரது உயிரிழப்பிற்கு சஞ்சய் மற்றும் அவரது குடும்பத்தினர் மீதுதான் சந்தேகம் இருப்பதாகவும் கருப்புசாமி ஆலாந்துறை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் சஞ்சய் மற்றும் அவரது தந்தை லட்சுமணன்(50), தாயார் அம்முக்குட்டி(எ) பக்ருநிஷா(47) ஆகியோர் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணையை மேற்கொண்டனர். முதலில் இது சந்தேக மரணம் என்பதன் அடிப்படையில் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

இதையடுத்து நடந்த பிரேத பரிசோதனை முடிவில் ரமணி கழுத்து நெரிக்கப்பட்டு உயிரிழந்திருப்பது தெரியவந்தது. இதையடுத்து கணவர் மற்றும் பெற்றோரிடம் பேரூர் துணை காவல் கண்காணிப்பாளர் விசாரணை மேற்கொண்டார். விசாரணையில் சஞ்சய் தான் கொலை செய்ததை ஒப்புக்கொண்டதை அடுத்து சஞ்சய் மற்றும் அவரது தாய் தந்தை மூவர் மீதும் வழக்குப்பதிவு செய்து சந்தேக மரணம் கொலை வழக்காக மாற்றம் செய்யப்பட்டது. இதனை அடுத்து மூவரும் நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தப்பட்டனர்.

இச்சம்பவம் கோவையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
 

IPL_Entry_Point

டாபிக்ஸ்