தமிழ் செய்திகள்  /  தேசம் மற்றும் உலகம்  /  Delhi Excise Policy Case: கலால் கொள்கை முறைகேடு வழக்கு.. கெஜ்ரிவாலுக்கு நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

Delhi Excise Policy Case: கலால் கொள்கை முறைகேடு வழக்கு.. கெஜ்ரிவாலுக்கு நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

Karthikeyan S HT Tamil
Apr 15, 2024 04:29 PM IST

Arvind Kejriwal: டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் நீதிமன்றக் காவல் ஏப்ரல் 23 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால்
டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால்

ட்ரெண்டிங் செய்திகள்

இதற்கிடையில், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அரவிந்த் கெஜ்ரிவாலை மார்ச் 28 வரை அமலாக்கத் துறை காவலில் வைத்து விசாரிக்க ரோஸ் அவென்யூ நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தது. அதன் பின்னர் கெஜ்ரிவாலின் காவல் முடிவடைந்த நிலையில் சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது கெஜ்ரிவாலை மேலும் காவலில் எடுத்து விசாரிக்க அவசியமில்லை என அமலாக்கத்துறை வாதத்தை முன்வைத்த நிலையில், ஏப்ரல் 15 வரை நீதிமன்றக் காவலில் திகார் சிறையில் அடைக்க ரோஸ் அவென்யூ நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதையடுத்து கெஜ்ரிவால் நீதிமன்றக் காவலில் டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டார். இந்த நிலையில், கெஜ்ரிவாலின் நீதிமன்றக் காவல் இன்றுடன் நிறைவடைந்த நிலையில், திகார் சிறையில் காணொளிக் காட்சி வாயிலாக டெல்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றத்தில் அவர் ஆஜர்படுத்தப்பட்டார். கெஜ்ரிவாலை மேலும் விசாரிக்க வேண்டியிருப்பதால் அவரது நீதிமன்றக் காவலை நீட்டிக்க வேண்டும் என அமலாக்கத்துறை தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. அந்த கோரிக்கையை ஏற்று சிபிஐ மற்றும் அமலாக்கத்துறையின் சிறப்பு நீதிபதி காவேரி பவேஜா கெஜ்ரிவாலின் காவலை ஏப்ரல் 23 வரை நீட்டித்து உத்தரவிட்டுள்ளார். அதே நேரத்தில் இதே வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட தெலங்கானா ராஷ்டிர சமிதி கட்சியின் தலைவர் கே கவிதாவும் ஏப்ரல் 23 வரை நீதிமன்றக் காவலுக்கு அனுப்பப்பட்டுள்ளார் என்று குறிப்பிட்டார்.

கடந்த இரண்டு ஆண்டுகளாக அமலாக்கத் துறையால் விசாரித்து வரும் டெல்லி கலால் கொள்கையுடன் தொடர்புடைய பணமோசடி வழக்கில் காவலை நீட்டிக்க டெல்லி நீதிமன்றம் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளது. இந்த வழக்கில் கைது செய்யப்படும் நான்காவது ஆம் ஆத்மி தலைவர் கெஜ்ரிவால் ஆவார்.

முன்னதாக, கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டதை எதிர்த்து சிறையில் இருந்து விடுவிக்கக் கோரி தாக்கல் செய்த மனுவை டெல்லி உயர் நீதிமன்றம் கடந்த வாரம் நிராகரித்தது. பணமோசடி குற்றத்தில் ஈடுபட்டதற்காக ஆம் ஆத்மி ஒருங்கிணைப்பாளரின் குற்றத்தை சுட்டிக்காட்டும் "இந்த கட்டத்தில்" அமலாக்கத்துறைக்கு போதுமான ஆதாரங்கள் உள்ளன என்று குறிப்பிட்டார்.

இதற்கிடையில், பணமோசடி வழக்கில் கைது செய்யப்பட்டதை எதிர்த்து கெஜ்ரிவால் தாக்கல் செய்த மனு குறித்து பதிலளிக்குமாறு அமலாக்கத்துறைக்கு உச்ச நீதிமன்றம் திங்கள்கிழமை நோட்டீஸ் அனுப்பியது.

லோக்சபா தேர்தலை முன்னிட்டு ஆம் ஆத்மி கட்சியும், பாஜகவும் இடையே மோதல் போக்கு நிலவி வருகிறது. குறிப்பாக மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கு தொடர்பாக மார்ச் 21 அன்று அமலாக்கத்துறையால் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டது முதல் இரு கட்சிகளும் ஒருவரை ஒருவர் விமர்சித்து வருகின்றனர். தற்போது கெஜ்ரிவால் நீதிமன்றக் காவலில் மீண்டும் டெல்லி திஹார் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

 

IPL_Entry_Point

டாபிக்ஸ்