தமிழ் செய்திகள்  /  தேசம் மற்றும் உலகம்  /  Article 370 Verdict: ’2024 செப்டம்பருக்குள் ஜம்மு காஷ்மீரில் தேர்தலை நடத்த வேண்டும்!’ உச்சநீதிமன்றம் கிடுக் தீர்ப்பு!

Article 370 verdict: ’2024 செப்டம்பருக்குள் ஜம்மு காஷ்மீரில் தேர்தலை நடத்த வேண்டும்!’ உச்சநீதிமன்றம் கிடுக் தீர்ப்பு!

Kathiravan V HT Tamil
Dec 11, 2023 11:59 AM IST

“காஷ்மீரில் இருந்து பிரித்து லடாக்கை தனி யூனியன் பிரதேசமாக மத்திய அரசு அறிவித்தது செல்லும்”

அரசியலமைப்பின் 370 வது பிரிவை ரத்து செய்ததை எதிர்த்து தொடரப்பட்ட மனுக்கள் மீதான தீர்ப்பை உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் வழங்கினார்
அரசியலமைப்பின் 370 வது பிரிவை ரத்து செய்ததை எதிர்த்து தொடரப்பட்ட மனுக்கள் மீதான தீர்ப்பை உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் வழங்கினார் (PTI)

ட்ரெண்டிங் செய்திகள்

கடந்த 2019ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 5ஆம் தேதி ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்வதாக மத்திய அரசு அறிவித்து ஜம்மு, காஷ்மீர், லடாக் பகுதிகளை யூனியன் பிரதேசங்களாக அறிவித்தது.

இந்த முடிவுகளுக்கு எதிரான மனுக்களை கடந்த ஆகஸ்ட் மாதம் முதல் உச்சநீதிமன்றம் விசாரணை நடத்தி வந்த நிலையில் இதற்கான தீர்ப்புகளை 5 நீதிபதிகள் கொண்ட நீதிபதிகள் அமர்வு வழங்கியது.

அரசியலமைப்பின் 370 வது பிரிவு ஒரு தற்காலிக விதி என்றும், அதை ரத்து செய்ய ஜனாதிபதிக்கு அதிகாரம் உள்ளது என தலைமை நீதிபதி சந்திரசூட் தெரிவித்துள்ளார்.

ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு நாட்டின் பிற மாநிலங்களில் இருந்து வேறுபட்ட தனி இறையாண்மை இல்லை என்றும் இந்திய அரசியலமைப்பின் அனைத்து விதிகளையும் ஜம்மு காஷ்மீரில் பயன்படுத்தலாம் என்றும் நீதிபதி கூறி உள்ளார்.

ஜம்மு காஷ்மீர் என்பது இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி என்றும் இதனை அரசியல் சட்டப்பிரிவு 1 மற்றும் 370 ஆகியவை தெளிவுப்படுத்துவதாக கூறிய நீதிபதி ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு என்று அமைக்கப்பட்ட அரசியலமைப்பு சபையானது நிரந்தர அமைப்பாக இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை என்று தீர்ப்பளித்துள்ளார்.

ஆகஸ்ட் 5, 2019 அன்று ரத்து செய்யப்பட்ட சட்டப்பிரிவு 370, முந்தைய மாநிலத்தில் போர் நிலைமைகள் காரணமாக செய்யப்பட்ட இடைக்கால ஏற்பாடு என்றும், ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் வரும் செப்டம்பர் மாதம் 30ஆம் தேதிக்குள் தேர்தலை நடத்தி முடிக்க வேண்டும் என்றும் கூறியதுடன், லடாக்கை தனி யூனியன் பிரதேசமாக மத்திய அரசு அறிவித்தது செல்லும் என கூறி உள்ளார்.

IPL_Entry_Point