Albert Einstein: அறிவியல் உலகை திரும்பி பார்க்க வைத்த ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் நினைவு நாள் இன்று!
இயற்பியல் அறிஞர் ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் நினைவு தின சிறப்பு பகிர்வு. இந்நாளில் அவரது சிந்தனையையும் நினைவையும் போற்றுவோம்.

இயற்கையில் புதைந்திருக்கும் ஏராளமான அதிசயங்களையும் அற்புதங்களுக்கும் வெளி உலகுக்கு கொண்டு வந்தவர் ஆல்பர்ட் ஐன்ஸ்டீன். அவரது நினைவு நாள் இன்று! (ஏப்ரல் 18)
பிறப்பு
1879 ஆம் ஆண்டு மார்ச் 14ஆம் தேதி ஜெர்மனி நாட்டில் வுட்டென்பெர்க் என்கிற ஊரில் ஹெர்மென் ஐன்ஸ்டீன் - பவுலின் கோச் தம்பதியினருக்கு மகனாக பிறந்தார் ஆல்பர்ட் ஐன்ஸ்டீன். இவரது தந்தை சிறிய அளவில் மின்வேதியியல் தொழிற்சாலை ஒன்றை நடத்திவந்தார். நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்தவர்.
குழந்தை பருவம்
குழந்தை பருவத்திலே புத்திசாலியாக அறியப்பட்ட ஐன்ஸ்டீன், எந்த கேள்விக்கும் உடனடியாக பதிலளிக்க மாட்டார். பள்ளியில் சுமாரான மாணவனாகவே ஐன்ஸ்டீன் இருந்தார். எப்போதும் எதன் மீதோ ஆழ்ந்த சிந்தனை கொண்டவராக இருந்த ஐன்ஸ்டீனுக்கு பள்ளி வகுப்புகள் ருசிக்கவில்லை. எப்போதும் காந்த ஊசிகளை வைத்துக்கொண்டு பொழுதைப் போக்கிக் கொண்டிருப்பார். ஆனால், அறிவியல் மீதும் கணிதம் மீதும் அவருக்கு இயல்பாகவே ஆர்வம் இருந்தது. அதனாலே அதை விரும்பிய அளவுக்கு மொழிப்படங்களை அவர் விரும்பவில்லை. தானாகவே தனக்கு விரும்பியதை படிக்கத் தொடங்கினார்.
அறிவியல் ஆர்வம்
ஒருமுறை கடும் காய்ச்சலால் படுக்கையில் இருந்த ஆல்பர்ட் ஐன்ஸ்டீனுக்கு அவரது தந்தை ஹெர்மென் ஐன்ஸ்டீன் திசைகாட்டியை அவருக்கு பரிசாக வழங்கினார். அந்த சம்பவம் ஐன்ஸ்டீனின் வாழ்க்கையை அறிவியலின் பக்கம் திருப்பியது. அக்கருவியை எப்படி சுற்றினாலும் முள் வடக்குத்திசை நோக்கி திரும்பியது அவருக்கு அடக்கமுடியாத ஆச்சரியத்தை அளித்தது. இதன் மூலம் பல அறிவியல் காட்சிகளை உருவகம் செய்து ஆழ்ந்த சிந்தனையில் மூழ்கி போனார். இப்படியாக அவரது இளமை காலம் உருண்டோடின.
நோபல் பரிசு
1905-ஆம் ஆண்டு ஐன்ஸ்டீன் வாழ்க்கையில் மட்டுமல்ல அறிவியல் உலகுக்கே அதிசயங்களை வழங்கிய ஆண்டு. ஒளிமின் விளைவு, பிரெளனியன் இயக்கம், சிறப்பு சார்புகோட்பாடு E=mc2 போன்றவை அறிவியல் உலகையே அதிர வைத்தன. தொடர்ந்து பல கோட்பாடுகளையும் கட்டுரைகளையும் வெளியிட்டு வந்த ஐன்ஸ்டீனுக்கு உலகப்புகழ் கிடைத்தது. ஐன்ஸ்டீன் குவான்டம் எந்திரவியல், புள்ளியியல் எந்திரவியல், அண்டவியல் துறைகளிலும் குறிப்பிடத்தக்க பங்களிப்புகளை வழங்கியுள்ளார். இயற்பியலில் அவர் செய்த சேவைக்காக 1921-ல் இவருக்கு இயற்பியலுக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது. அவரது கண்டுப்பிடிப்புகள் மனிதன் அறிவியலின் புதிய பரிணாமங்களுக்கு செல்ல வழிவகுத்தது.
வருத்தமடைந்த ஐன்ஸ்டீன்
ஜெர்மனியில் ஹிட்லர் அதிகாரத்தை கைப்பற்றியபோது, அமெரிக்காவில் இருந்த ஐன்ஸ்டீன் அதன் பிறகு நாடு திரும்பவே இல்லை. இந்த முடிவே இரண்டாம் உலகப்போரில் அமெரிக்காவின் கை ஓங்குவதற்கு முக்கிய காரணமாக அமைந்தது. ஜெர்மனியில் அணுகுண்டு தயாரிக்கப்படுவதாக, ஐன்ஸ்டீனின் ஒப்புதலுடன் அனுப்பப்பட்ட கடிதமே அமெரிக்க அதிபர் ரூஸ்வெல்ட்டை புதிய வியூகத்தை வகுக்கச் செய்தது. அவற்றின் மூலமே போரின் முடிவுகள் மாறின. தான் இறக்கும் தருவாயில், அவ்வாறு தான் கடிதம் அளித்ததன் விளைவாகவே அமெரிக்கா அணுகுண்டு தயாரித்தது. அதனால், ஜப்பானில் பல்லாயிரக்கணக்கானோர் மரணமடைந்தனர் என்கிற வருத்தமும் ஐன்ஸ்டீனுக்கு இருந்தது.
சிறுபான்மையினருக்கு குரல் கொடுத்த ஐன்ஸ்டீன்
அறிவியல் மட்டுமல்லாமல், அரசியல், சமூகம், தத்துவம், சேவை என பல துறைகளில் முழு ஈடுபாட்டுடன் பணியாற்றியவர் ஐன்ஸ்டீன். வாழ்நாள் முழுவதும், அறிவியல் மனிதகுல மேம்பாட்டிற்கு மட்டுமே பயன்படவேண்டும் என்று விரும்பினார். ஆயுதத்தின் மூலமாக அமைதியை ஏற்படுத்த முடியாது, புரிதல் மட்டுமே அமைதிக்கான நிரந்தர வழி என்றும் வலியுறுத்தினார். ஐன்ஸ்டீன் ஒரு விஞ்ஞானி மட்டுமல்ல, அவர் ஒரு மனிதாபிமானமிக்க நல்ல மனிதரும் கூட. அவர் ஆப்பிரிக்க அமெரிக்கர்கள் மற்றும் ஐரோப்பாவில் சிறுபான்மையினரின் உரிமைகளுக்காக குரல் கொடுத்தவர். தாம் ஒரு பொதுவுடைமைவாதி என்று வெளிப்படையாக அறிவித்தவர் ஐன்ஸ்டீன்.
மறைவு
1955-ஆம் ஆண்டு ஏப்ரல் 18-ல் ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் காலமானார். அப்போது ஐன்ஸ்டீனின் மூளை உடலிலிருந்து நீக்கப்பட்டு ஆராய்ச்சிக்காக பத்திரப்படுத்தப்பட்டது. ஐன்ஸ்டீன் மறைவு அறிவியல் உலகிற்கு பெரும் இழப்பாக கருதப்பட்டாலும் அவர் கண்டுபிடிப்புகள் இன்றைக்கு வழிகாட்டியாக திகழ்கிறது.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9

டாபிக்ஸ்