தமிழ் செய்திகள்  /  தேசம் மற்றும் உலகம்  /  இந்தியாவுக்கு ஜாக்பாக்! வரலாற்றில் முதன்முறையாக லித்தியம் கண்டுபிடிப்பு!

இந்தியாவுக்கு ஜாக்பாக்! வரலாற்றில் முதன்முறையாக லித்தியம் கண்டுபிடிப்பு!

Karthikeyan S HT Tamil
Feb 10, 2023 01:54 PM IST

Lithium Found in India: நாட்டிலேயே முதன்முதலாக ஜம்மு-காஷ்மீரில் லித்தியம் படிவுகள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

ஜம்மு-காஷ்மீரில் லித்தியம் கண்டுபிடிப்பு
ஜம்மு-காஷ்மீரில் லித்தியம் கண்டுபிடிப்பு

ட்ரெண்டிங் செய்திகள்

இந்திய புவியியல் ஆய்வு மையத்தின் ஆராய்ச்சியாளர்கள் சலால்-ஹைமானா பகுதியில் ஆய்வில் ஈடுபட்டிருந்த போது அங்கு பூமிக்கு அடியில் 5.9 மில்லியன் டன் அளவிலான லித்திய படிவுகள் இருப்பதை கண்டறிந்தனர். இந்தியாவில் லித்திய படிவுகள் கண்டுபிடிக்கப்பட்டிருப்பது இதுவே முதல்முறை ஆகும். மேலும், லித்தியம், தங்கம் போன்ற 51 கனிமத் தொகுதிகள் மாநில அரசுகளிடம் ஒப்படைக்கப்பட்டதாக சுரங்கத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இந்திய புவியியல் ஆய்வு நிறுவனம் நாடு முழுவதும் சுமார் 51 கனிமத் தொகுதிகளைக் கண்டுபிடித்துள்ளது. இதில், 5 தொகுதிகள் தங்கம் மற்றும் பொட்டாஷ், மாலிப்டினம், அடிப்படை உலோகங்கள் போன்ற பொருட்கள் உள்ளது. இந்த 51 கனிமத் தொகுதிகள் ஜம்மு- காஷ்மீர் , ஆந்திரப் பிரதேசம், சத்தீஸ்கர், குஜராத், ஜார்கண்ட், கர்நாடகா, மத்திய பிரதேசம், ஒடிசா, ராஜஸ்தான், தமிழ்நாடு மற்றும் தெலங்கானா ஆகிய 11 மாநிலங்களில் உள்ளது என சுரங்கத்துறை அமைச்சகம் வியாழக்கிழமை தெரிவித்துள்ளது.

லித்தியம் தேவை:

எரிபொருள் தேவை, கச்சா எண்ணெய் விலை நாளுக்கு நாள் உயர்ந்து வருவதையடுத்து பெட்ரோல், டீசல் வாகன பயன்பாட்டை குறைத்து மின்சார வாகனங்களை நோக்கி பெரும்பாலான நாடுகள் படையெடுக்கத் துவங்கி விட்டன. மின்சார வாகனங்களுக்கு மிக மிக முக்கியமானது என்றால் அது பேட்டரிக்கள் தான். 

அந்த பேட்டரிகளை தயாரிப்பதற்கு மூலக்கூறாக முக்கிய பங்கு வகிப்பது இந்த லித்தியம் கனிமம். மொபைல் போன் பேட்டரிகள், எலெக்ரிக்கல் வாகன பேட்டரிகள் உள்ளிட்டவை தயாரிக்க லித்தியம் முக்கிய மூலப்பொருளாகும். இந்தியாவில் எலக்ட்ரிக் கார் மற்றும் பைக் தயாரிக்கப்பட்டாலும் அதிகளவிலான லித்தியம் பேட்டரி இதற்கு முன் அர்ஜென்டினா மற்றும் ஆஸ்திரேலியா நாடுகளிடம் இருந்து இறக்குமதி செய்யப்பட்டு வந்தது.

இந்த நிலையில் நாட்டிலேயே முதன்முறையாக ஜம்மு-காஷ்மீரில் 5.9 மில்லியன் டன் லித்தியம் இருப்பு கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. டிஜிட்டல் யுகத்தில் இப்போது பேட்டரிக்களுக்கு தேவையான முக்கிய தாது உள்நாட்டிலேயே கண்டுபிடிக்கப்பட்டுள்ளது முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது.

IPL_Entry_Point

டாபிக்ஸ்