Chicken Risk : சிக்கன் பிரியரா நீங்கள்? கோழியில் அதிகரிக்கும் கிருமிக்கொல்லிகள் பயன்பாடு! ஆய்வு தரும் அதிர்ச்சி!
Chicken Risk : சிக்கன் பிரியரா நீங்கள்? கோழியில் அதிகரிக்கும் கிருமிக்கொல்லிகள் பயன்பாடு குறித்து ஆய்வு தரும் அதிர்ச்சி தகவலை தெரிந்துகொள்வது அவசியம்.
தமிழக கோழிப் பண்ணைகளில் சட்டவிரோத கிருமிக்கொல்லி பயன்பாட்டால் கோழிகள், மனிதர்கள் மத்தியில் கிருமிக்கொல்லி எதிர்ப்புத்தன்மை அதிகமாவது ஆய்வில் உறுதி செய்யப்பட்டுள்ளது.
ஆய்வு தரும் அதிர்ச்சி தகவல்
Toxics Link மற்றும் World Animal Protection நிறுவனங்கள் இணைந்து நடத்திய ஆய்வில், தமிழக கோழிப் பண்ணைகள் கிருமிக்கொல்லி எதிர்ப்புத்தன்மை அதிகம் உருவாகும் இடங்களாக மாறிவருவது கண்டறியப்பட்டுள்ளது.
தமிழகத்தின் 14 பல்வேறு கோழிப் பண்ணை மாதிரிகளை ஆய்வு செய்ததில், 11 மாதிரிகளில் மிக அதிக அளவு கிருமிக்கொல்லி எதிர்ப்புத்தன்மை பெற்ற ஜீன்கள் இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது.
கோழி வளர்ப்போர், விதிகளின்படி அல்லாமல், முறையற்ற வகையில் கிருமிக்கொல்லிகளை பயன்படுத்தியத் தொடங்கியதின் விளைவாக, கிருமிக்கொல்லி எதிர்ப்புத்தன்மை அதிகம் உருவாகியுள்ள சூழலை அறிந்துகொள்ளாமலும், பின்விளைவுகளை கருத்தில்கொள்ளாமலும் உள்ளனர்.
Bureau of Indian Standards பரிந்துரைகளின்படி கோழி வளர்ப்பில், அதன் தீவணங்களில் கிருமிக்கொல்லி பயன்பாடு இருக்கக்கூடாது எனத் தெளிவாக இருந்தும், சந்தைகளில் அவை எளிதாகக் கிடைப்பதும், கோழி வளர்ப்போர், தீவணத்தில் அதை பயன்படுத்தி வரும் போக்கும் உள்ளது.
கிருமிக்கொல்லி எதிர்ப்புத்தன்மை பெற்ற கிருமிகளை கொல்ல பயன்படும் "கோலிஸ்டின்-Colistin-எனும் கிருமிக்கொல்லியை உணவு தரும் ஜீவராசிகள் மத்தியில் பயன்படுத்த மத்திய சுகாதாரத்துறை 2019ல் தடைவிதித்தும், ஆன்லைன் சந்தையிலும், கள்ளச் சந்தையிலும் அதன் விற்பனை தொடர்கிறது.
ஏற்படுத்தும் பாதிப்புகள் என்ன?
கிருமிக்கொல்லி எதிர்ப்புத்தன்மை பெற்ற மூலக்கூறுகள் மூலம், பாக்டீரியா, வைரஸ், காளான்கள், ஒட்டுண்ணிகள் (Parasites) கிருமிக்கொல்லி மருந்துகளின் பாதிப்பிலிருந்து தப்பிக்கும் திறன் பெறுகின்றன.
கிருமிக்கொல்லி எதிர்ப்புத்தன்மை பெற்ற மூலக்கூறுகள் இயற்கையாகக் கூட நிகழ்ந்தாலும், மனிதர்களின் தேவையற்ற, அளவிற்கு அதிகமாக, தவறான வழிகளில், கிருமிக்கொல்லிகள் பயன்படுத்தப்படுவதால், கிருமிக்கொல்லி எதிர்ப்புத்தன்மை பாதிப்பு அதிகமாகிறது.
இதனால் நிமோனியா, கோனோரியா, அறுவைசிகிச்சைக்குப் பின் கிருமித்தொற்று, எய்ட்ஸ், காசநோய் (TB), மலேரியா போன்ற நோய்களுக்கு சிகிச்சை அளிப்பதில் சிரமங்கள் அதிகம் ஏற்படுகிறது.
உலகளவில் கால்நடை அல்லது கோழித் தீவணங்களில், கிருமிக்கொல்லிகளின் பயன்பாடு, இந்தியாவில் 3 சதவீதம் என அதிகமாக உள்ளது.
அரசு என்ன செய்யவேண்டும்?
கால்நடை தீவணங்களில் அளவிற்கு மிக அதிகமாக கிருமிக்கொல்லிகளின் பயன்பாடு இந்தியாவில் உள்ளது என்பதும் கவலை அளிக்கும் செய்தி.
இந்த ஆய்வின் மூலம் கோழிப்பண்ணைகளில் சட்ட விரோதமாக, கிருமிக்கொல்லிகளின் பயன்பாடு வரம்புகளை மீறி இருப்பதால், கிருமிக்கொல்லி எதிர்ப்புத்தன்மை அதிகம் உருவாகி மக்களுக்கு பேராபத்தை ஏற்படுத்தி வருவது உண்மை என்பதை அரசு உணர்ந்து, உரிய தடுப்பு நடவடிக்கைகளை எடுக்க முன்வர வேண்டும்.
இந்தியாவில் அல்லது தமிழ்நாட்டில் பண்ணைகளில் கிருமிக்கொல்லி தவறாக சட்டவிரோதமாக பயன்படுத்தப்படுகிறது என்ற அறிக்கையை உடனே தயார் செய்து, அங்கெல்லாம் ஆய்வுகளும், மேற்பார்வையும் தீவிரபடுத்தப்பட்டு, கிருமிக்கொல்லி பயன்பாட்டை, விதிகளை மீறி பயன்படுத்துவோர் மீது சட்ட ரீதியாக தக்க நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
கிருமிக்கொல்லி மருந்தை எப்போது எப்படி பயன்படுத்தலாம் என்பது தற்போதுள்ள வழிகாட்டுதல்கள்போல் அல்லாமல் கட்டாய சட்டமாக்கப்படவேண்டும். மீறுவோர் மீது சட்டரீதியாக கடும் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
அப்போதுதான் கிருமிக்கொல்லி எதிர்ப்புத்தன்மை பெற்ற கிருமிகளிலிருந்து மக்களை எளிதில் காக்க முடியும். மேலும் இதுகுறித்து மக்களுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். அப்போதுதான் அவர்களை முழுமையாக காக்க முடியும்.
நன்றி - மருத்துவர். புகழேந்தி.
டாபிக்ஸ்