தமிழ் செய்திகள்  /  latest news  /  ஸ்விக்கியில் பணியாற்றுகிறாரா இந்த புர்கா பெண்?

ஸ்விக்கியில் பணியாற்றுகிறாரா இந்த புர்கா பெண்?

Pandeeswari Gurusamy HT Tamil
Jan 17, 2023 11:58 AM IST

நட்வா கல்லூரி பகுதியில் ஸ்விக்கி பேக்குடன் சென்ற பெண் குறித்த புகைப்படம் வைரலான நிலையில் அவர் உணவு டெலிவரி செய்யும் ஸ்விக்கி நிறுவன ஊழியர் இல்லை என்பது தெரிய வந்துள்ளது.

புர்கா அணிந்து ஸ்விக்கி பேக்குடன் நடந்த செல்லும் பெண்
புர்கா அணிந்து ஸ்விக்கி பேக்குடன் நடந்த செல்லும் பெண்

ட்ரெண்டிங் செய்திகள்

உத்தரபிரதேச மாநிலம் நட்வா கல்லூரி பகுதியில் பெண் ஒருவர் புர்கா அணிந்த படி ஸ்விக்கி பேக்குடன் செல்லும் புகைப்படம் சமூக வலை தளங்களில் வைரலானது. இந்த புகைப்படத்தை பார்த்த இணைய வாசிகள் புர்கா அணிந்து செல்லும் பெண் உணவு டெலிவரி செய்யும் ஸ்விக்கி நிறுவனத்தில் பணி புரிவதாக நினைத்து அந்த பெண்ணின் பணி குறித்த தங்கள் கருத்துகளை பகிரத்தொடங்கினர். ஒரு கட்டத்தில் சிலர் இந்த புகைப்படம் போலியானது என்று இது ஆர்டிபிஷியல் இன்டலிஜன்ஸ் கொண்டு உருவாக்கப்பட்ட படம் என்று பதிவிட்டனர். அதே சமயம் அந்த படம் பின்னால் இருந்து எடுக்கப்பட்டதால் அந்த படத்தில் இருந்த பெண் யார் என்பதும் தெளிவாக தெரியவில்லை.

இந்த நிலையில் தான் "நீங்கள் கேட்கும் எதையும் நம்பாதீர்கள் நீங்கள் ஒரு பகுதியை மட்டும் தான் பார்க்கிறீர்கள் என்று எட்கர் ஆலன் போவின் வார்த்தைகள் இந்த புர்கா பெண்ணின் விஷயத்தில் பொருந்தி போயுள்ளது.

அந்த புர்கா அணிந்த பெண் ஸ்விக்கி பையுடன் சென்றது உண்மைதான். ஆனால் அந்த பெண் உணவு விநியோகம் செய்து வரும் பணியில் இல்லை. 40 வயதான ரிஸ்வானா என்ற பெண் உண்மையில் தாலிகஞ்ச் பகுதியில் உள்ள வீடுகளில் வீட்டு வேலை செய்யும் பெண்ணாக பணியாற்றி வருகிறார். இதுகுறித்து அந்த பெண், "நான் காலையிலும் மாலையிலும் வீடுகளில் வேலை செய்து வருகிறேன். அதன் வழியாக நான் ரூ .1500 வரை சம்பாதிக்கிறேன். மேலும் மதிய நேரத்தில் சந்தையில் சிறிய வியாபாரத்தை செய்து வருகிறேன். ஆடைகள் மற்றும் தூக்கி எறியப்படும் டம்ளர்களை விற்கிறேன். இதன் வழியாக நான் மாதம் 5 ஆயிரம் முதல் 6 ஆயிரம் வரை சம்பாதிக்கிறேன். இந்த வருமானத்தால் தான் என் வீட்டின் சமையலறையில் அடுப்பு எரிகிறது" என்று உருக்கமாக தெரிவித்துள்ளார்.

ஜனதா நகரி காலனி பகுதியில் வாழ்ந்து வரும் ரிஸ்வானாவிற்கு 22 வயதான லுப்னா, 19 வயது நிரம்பிய புஷ்ரா, 7 வயது மகள் நஷ்ரா, மற்றும் எம்டி யாஷி என்ற இளைய மகன் உள்ளிட்ட 4 பிள்ளைகள் உள்ளனர். திருமணமான ரிஸ்வானா தனது மாமியார் வீட்டின் அருகில் 10க்கு 10 அளவுடைய சிறிய அறையில் வசித்து வருகிறார்.

ரிஸ்வானாவிடம் ஸ்விக்கி பேக் குறித்து கேட்ட போது "ஒரு முறை வியாபாரத்திற்கான பொருட்களை வைக்க எனக்கு ஒரு திடமான பை தேவைப்பட்டது. அதனால் தாலிகஞ்ச் பகுதியில் உள்ள பாலத்தில் விற்பனை செய்யும் நபரிடம் 50 ரூபாய் கொடுத்து வாங்கினேன். அப்போதிருந்தே என் பொருட்களை இந்த பையில் வைத்து தான் சுமந்து வருகிறேன். ஆனால் நான் ஸ்விக்கியில் வேலை செய்யவில்லை. இந்த பைக்குள் எல்லா பொருட்களையும் வைத்து எடுத்து கொண்டு வேலைக்காக சந்தைக்கு நடந்து செல்வேன். தினமும் 20 முதல் 25 கிலோ மீட்டர் வரை நடந்து செல்வேன். ஒரு கடைக்காரர் இந்த படத்தை என்னிடம் காட்டி இது எப்படி வைரலாகியது என்பதை காட்டினார். இதையடுத்து ஒரு நபர் என்னை சந்திக்க வந்து என் வங்கி விபரங்களை கேட்டார். அந்த சம்பவத்திற்கு பிறகு வேறு சிலரிடமிருந்தும் எனக்கு உதவி கிடைத்தது" என்றார்.

அந்த வகையில் இந்த உதவி ரிஸ்வானாவை பொருத்தமட்டில் மிக மிக முக்கியமானது. ஏனெனில் ரிஸ்வானாவிற்கு 23 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது. பின்னர் அவர் திடீரென ஒரு நாள் அவரது கணவர் வீட்டை விட்டு போய்விட்டார். இதையடுத்து ரிஸ்வானா தனது குழந்தைகளை தனியாக வளர்த்து வருகிறார். ரிஸ்வானாவின் கணவர் ரிக்சா ஓட்டும் தொழிலாளியாக இருந்தார். திடீரென ஒருநாள் ரிக்சா திருடப்பட்ட பின்னர் அவர் பிச்சை எடுப்பவராக இருந்தார். இதுகுறித்து ரிஸ்வானா ,"ஆரம்பத்தில் மக்கள் என்னை கேலி செய்தார்கள் அது எளிதாக இல்லை. ஆனால் நான் என் குடும்பத்திற்காக உழைக்க வேண்டியிருந்தது. நான் ஆரம்பத்தில் மோசமாக உணர்ந்தேன். இப்போது நான் அதற்கு பழகி விட்டேன்" என்று தெரிவித்துள்ளார்.

அந்த வகையில் ரிஸ்வானாவின் பை காரணமாக ஸ்விக்கி ஊழியர் என்று இணையத்தில் தவறாக நெட்டிசன்களால் வைரலாக்கப்பட்ட புகைப்படம் போலி என்பது உறுதியாகி உள்ளது. ஆனால் இணையவாசிகளால் தவறாக அறிந்து கொள்ளப்பட்ட புகைப்படத்தால் கடும் வறுமையில் உள்ள ரிஸ்வானாவிற்கு மிகச்சிறிய உதவிகள் கிடைத்து வருவது அவரது வாழ்க்கைக்கு தற்போதைய சூழலில் உதவியாக மாறி உள்ளது

WhatsApp channel