தமிழ் செய்திகள்  /  latest news  /  ஒரு வருடத்தில் பால் விலை இத்தனை முறை உயர்வா?

ஒரு வருடத்தில் பால் விலை இத்தனை முறை உயர்வா?

Pandeeswari Gurusamy HT Tamil
Jan 20, 2023 01:53 PM IST

தமிழகத்தில் தனியார் பால் விலை மீண்டும் ரூ.2 உயர்த்தப்பட்டுள்ளது

அன்புமணி ராமதாஸ்
அன்புமணி ராமதாஸ்

ட்ரெண்டிங் செய்திகள்

தமிழகத்தில் தனியார் நிறுவனங்களான ஹெரிடேஜ், திருமலா, ஜெர்சி,வல்லபா சீனிவாசா உள்ளிட்ட தனியார் பால் நிறுவனங்கள் இணைந்து தங்கள் பால் விலையை ரூ. 2 உயர்த்தி உள்ளன. இந்நிலையில் தனியார் பால் நிறுவனங்கள் ஓராண்டில் தற்போது 5 வது முறையாக விலை உயர்த்தி உள்ளன.

இந்த விலையேற்றத்தால் இருமுறை சமன் படுத்தப்பட்ட பால் லிட்டர் ஒன்றுக்கு ரூ.48 இல் இருந்து ரூ.50 ஆகவும், சமன்படுத்தப்பட்ட பால் லிட்டர் ஒன்றுக்கு ரூ.50ல் இருந்து ரூ.52 ஆகவும் , நிலைப்படுத்தப்பட்ட பால் லிட்டர் ஒன்றுக்கு ரூ. 70ல் இருந்து ரூ.72ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது.

அதே சமயம் தயிர் விலை ரூ.72ல் இருந்து ரூ.74 ஆக விலை உயர்த்தப்பட்டுள்ளது. இந்த விலை உயர்வு இன்று முதல் அமல்படுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் தனியார் நிறுவனங்களின் பால் விலை உயர்வுக்கு பாட்டாளி மக்கள் கட்சித்தலைவர் அன்பு மணி ராமதாஸ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளர். இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பதிவில்,

"தமிழ்நாட்டில் 5 தனியார் பால் நிறுவனங்கள் தங்களின் பால் விலையை லிட்டருக்கு ரூ.2 உயர்த்தியுள்ளன. கடந்த ஓராண்டில் தனியார் பால் விலைகள் உயர்த்தப்படுவது இது ஐந்தாவது முறையாகும். சராசரியாக 70 நாட்களுக்கு ஒருமுறை தனியார் பால் விலைகள் உயர்த்தப்படுவது கண்டிக்கத்தக்கது.

ஆவின் நிறுவனத்துடன் ஒப்பிடும் போது நீல உறை பால் விலை லிட்டருக்கு ரூ.12 (ஆவின் விலை ரூ.40/தனியார் விலை ரூ.52), பச்சை உறை பால் ரூ.20 (ரூ. 44/ரூ.64), ஆரஞ்சு உரை பால் ரூ.12 ( ரூ.60/ரூ.72) அதிகமாக விற்பனை செய்யப்படுகிறது. இந்த விலை உயர்வு சாமானிய மக்களை கடுமையாக பாதிக்கும்!

தமிழ்நாட்டின் ஒட்டுமொத்த பால் சந்தையில் 84% தனியார் நிறுவனங்களிடம் உள்ளன. அதனால் அவை கூட்டணி அமைத்துக் கொண்டு நிர்ணயிப்பது தான் பால் விலை என்றாகி விட்டது. தனியார் நிறுவனங்களில் கட்டணக் கொள்ளையை தடுக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்காதது ஏமாற்றம் அளிக்கிறது!

தனியார் பால் விலையை கட்டுப்படுத்த வேண்டும் என்றால் ஆவின் நிறுவனம் அதன் சந்தைப் பங்கை வலுப்படுத்த வேண்டும். 16%பங்கை வைத்துக் கொண்டு ஆவின் நிறுவனத்தால் ஆதிக்கம் செலுத்த வேண்டும். ஆவினின் சந்தைப் பங்கு 50% ஆக உயர்ந்தால் தான் தனியார் நிறுவனங்களை கட்டுப்படுத்த முடியும்!

மக்களின் அத்தியாவசியத் தேவையான பால் விலை தொடர்ந்து உயர்த்தப்படுவதை தமிழக அரசு அனுமதிக்கக் கூடாது. அதை தடுப்பதற்கான உடனடி நடவடிக்கையாக பால் விலை ஒழுங்குமுறை ஆணையத்தை அரசு அமைத்து, பாலுக்கான அதிகபட்ச விற்பனை விலையை நிர்ணயிக்க வேண்டும்" என்று தெரிவித்துள்ளார்

WhatsApp channel

டாபிக்ஸ்