தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Htspecial:பெண்ணுறுப்பு சிதைவு எனும் கொடூரம்; 500 விருதுகள்; வெளிச்சமிட்ட ‘சிதை’!

HTSpecial:பெண்ணுறுப்பு சிதைவு எனும் கொடூரம்; 500 விருதுகள்; வெளிச்சமிட்ட ‘சிதை’!

Kalyani Pandiyan S HT Tamil
Feb 09, 2023 12:47 PM IST

பெண்ணுறுப்பு சிதைவை மையமாக வைத்து வெளியாகியிருக்கும் சிதை குறும்படம் 500க்கும் மேற்பட்ட விருதுகளை பெற்றுள்ளது

இயக்குநர் கார்த்தி ராம்
இயக்குநர் கார்த்தி ராம் (Obinwannem News)

ட்ரெண்டிங் செய்திகள்

பெண்ணுறுப்பு சிதைவு எனும் கொடூரம்
பெண்ணுறுப்பு சிதைவு எனும் கொடூரம்

அந்த சடங்கின் போது குழந்தையின் தாயால் ஏதொன்றும் அரியாத அந்த சிறுமிகள் வெட்ட வெளிக்கு அழைத்துச் செல்லப்படுவார்கள். அந்த இனத்தை சேர்ந்த வயது முதிர்ந்த மூதாட்டி அந்த குழந்தையை பாறையில் படுக்க வைப்பாள். தாயும் அங்கிருக்கும் மற்ற பெண்களும் பிடித்துக்கொள்ள அந்த பெண் குழந்தையின் பிறப்புறுப்பில் உள்ள கிளிட்டோரிஸ் என்ற உணர்வு முடிச்சை அடியோடு அறுத்து எறிவாள்.

அப்போதும் அந்த மூதாட்டிக்கு திருப்தி இல்லாமல் அந்த குழந்தையின் பிறப்புறுப்பில் உள்ள உள் உதடுகளை கண்டபடி தன் துருப்பிடித்த பிளேடால் கீறி விட்டு பின் அங்கு கிடக்கும் கரித்துணியால் அந்த இடத்தை துடைத்து விட்டு மேல் உதடுகளை மூடி விட்டு சின்னதாய் ஒரு ஓட்டை மட்டும் இருக்கும் அளவிற்கு விட்டு விட்டு அந்த இடத்தை தைத்து விடுவாள். அந்த சிறிய ஓட்டை வழியாகவே அந்த பெண்குழந்தை சிறுநீர் கழிக்க வேண்டும் பெரியவள் ஆன பின் மாதவிடாய் பிரச்சினைகளையும் எதிர்கொள்ள வேண்டும்.

 

ஆப்பிரிக்காவின் பல இடங்களில் அரங்கேறுகிறது
ஆப்பிரிக்காவின் பல இடங்களில் அரங்கேறுகிறது (Vanguard news)

இந்த சடங்கு முடித்த பெண்களுக்கு ஏற்படும் உடல் நலக்குறைவால் மரணம் கூடநேரிடும். ஆனால் உயிரோடு பிழைக்கும் குழந்தைகளின் நிலையோ அதை விட கொடூரம். அந்த துருப்பிடித்த பிளேடால் உண்டாகும் தொற்று, அதிகமான ரத்தப்போக்கு, போன்றவற்றால் கடுமையாக பாதிக்கப்படுவாள். ஒவ்வொரு முறை சிறுநீர் கழிக்கும்போது ஒரு விதமான காந்தல் ஏற்படும். பின்னாளில் உணர்வு முடிச்சுகளை துண்டித்தல், உணர்வு நாளங்களை சிதைத்தல் போன்ற கொடூரங்களால் கடும் மன உளைச்சல் உள்ளிட்ட மன ரீதியான பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்பு உண்டு. ஆனால் இது எது குறித்தும் அந்த மக்களுக்கு சிறிதும் கவலை இல்லை.

ஒரு பெண் எதற்காக தெரியுமா இத்தனை கொடூரங்களையும் பொறுத்துக் கொள்ள வேண்டும் என்றால் அவளது கணவன் கற்புள்ள பெண்ணை பெற்றதற்கான அடையாளத்திற்காகத்தான். பின்நாட்களில் திருமணம் முடிந்து முதல் உடலுறவின் போது பெண்ணின் கணவன் மூடப்பட்ட பிறப்புறுப்பில் போடப்பட்ட தையல்களை வெட்டி விடுவான்; ஆனால் அப்போது ஏற்கனவே லேசாக தையல் பிரிந்திருந்தால் கூட அவள் சபிக்கப்பட்டவளாக நடத்தப்படுவாள். அதன் பிறகான அந்த பெண்ணின் உடல் உறவு குழந்தை பிறத்தல் உள்ளிட்ட அத்தனை செயல்பாடுகளும் ஏதோ எந்திரம் போல நடைபெறும்; இப்படிப்பட்ட கொடூர சடங்கை மையப்படுத்தி மானாமதுரையை சேர்ந்த இயக்குநர் கார்த்திராம் குறும்படம் ஒன்றை இயக்கி இருக்கிறார்.

அந்த குறும் படத்திற்கு ‘சிதை’ என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. அந்த குறும் படத்தை பார்க்கும் ஒவ்வொரு ஆண் மகனும் படம் முடியும் தருவாயில் குற்ற உணர்வால் கூனிக்குறுகி நிச்சயம் சிதைவான் என்பதில் மாற்றுக்கருத்தில்லை.

பல தரப்பிலும் பாராட்டை பெற்றுள்ள இந்த குறும்படம் பல்வேறு விருது நிகழ்ச்சிகளில் பங்குபெற்று 500க்கும் மேற்பட்ட விருதுகளை பெற்று இருக்கிறது. இந்த குறும்படம் குறித்து கார்த்திராமிடம் பேசினேன்.

சிதை குழு
சிதை குழு

இந்த விஷயத்தை குறும்படமாக எடுக்கும் எண்ணம் எப்போது வந்தது?

கூகுளில் வழக்கம் போல படித்துக்கொண்டிருக்கும் போது ஏதேச்சையாக கண்ணில் பட்டதுதான் இந்த பெண்ணுறுப்பு சிதைவு விஷயம்; அதன் பின்னர் இந்த விஷயம் பற்றி பலவற்றை படித்து தெரிந்து கொண்டு இந்த ஸ்கிரிப்டை ரெடி செய்தேன். கதையை இந்தப்படத்தில் கதாநாயகனாக நடித்த பிஜூ சாரிடம் சொன்னேன்; கதையை கேட்ட அவர் இந்தப்படத்தை தயாரிக்க முன் வந்தார். 60,000 பட்ஜெட்டில் இந்தப்படத்தை உருவாக்கினோம்.

படத்திற்கு பல்வேறு விருது நிகழ்ச்சிகளில் விருது கிடைத்திருக்கிறதே?

ஆமாம். படத்திற்கு இதுவரை 514 விருதுகள் கிடைத்திருக்கின்றன. அதிகமான விருதுகளை வாங்கிய படங்களின் பட்டியலில் ‘சிதை’ திரைப்படம் முதல் இடத்தில் இருக்கிறது.

500க்கும் மேற்பட்ட விருதுகள்
500க்கும் மேற்பட்ட விருதுகள்

 

பாகிஸ்தானில் நடந்த ஃபிலிம்பேர், சென்னையில் நடந்த ஃபிலிம்பேர் உள்ளிட்ட பல்வேறு விருது நிகழ்ச்சிகளில் ‘சிதை’ குறும்படத்திற்கு விருதுகள் கிடைத்துள்ளன;

இந்தப்படத்தை பார்த்த இயக்குநர் வெங்கட் பிரபு இப்படி ஒரு விஷயம் நடக்கிறதா? என்று ஆச்சரியமாக கேட்டு படத்தை வெகுவாக பாராட்டினார்; அதே போல ‘மாநாடு’ பட தயாரிப்பாளார் சுரேஷ் காமாட்சியும் படத்தை பார்த்து பாராட்டினார். அதனைத்தொடர்ந்துதான் தன்ராஜ் இந்த குறும்படத்தை திரைப்படமாக தயாரிக்க முன்வந்தார். ஷூட்டிங் முடிந்து விட்டது.. எடிட்டிங் போய்க்கொண்டிருக்கிறது.

படத்தில் ஏன் இந்தக்கொடுமை எதற்காக நடக்கிறது என்று நீங்கள் சொல்லவில்லை?

அதற்கான காரணமுமே, பின்னணியுமே திரைப்படமாக உருவாகி இருக்கிறது.

வரும் காலத்தில் உங்களது படங்கள் எப்படியானதாக இருக்கும்?

என்னுடைய படங்கள் நிச்சயம் சமூக பிரச்சினைகளை பேசும் படங்களாக இருக்கும். அது மிக முக்கியம் என்று நினைக்கிறேன். திரைத்துறைக்கு வந்து குறும்படங்களை எடுக்கும் புதுமுக இயக்குநர்களும், சமூக பிரச்சினைகளில் மையமாக வைதது குறும்படங்களை இயக்க வேண்டும் என்பது என்னுடைய எண்ணம்”என்றார்

IPL_Entry_Point

டாபிக்ஸ்