39 Years of Poovilangu: தமிழ் சினிமாவின் மரபை உடைதெறிந்த பூவிலங்கு
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  39 Years Of Poovilangu: தமிழ் சினிமாவின் மரபை உடைதெறிந்த பூவிலங்கு

39 Years of Poovilangu: தமிழ் சினிமாவின் மரபை உடைதெறிந்த பூவிலங்கு

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
Apr 05, 2023 02:51 AM IST

நான்கு புதுமுகங்கள் அறிமுகம், வழக்கமான காதல் கதை, அற்புதமான பாடல்கள் என வெளிவந்து பட்டி தொட்டியெங்கும் ஹிட்டான படம் பூவிலங்கு. இளையராஜா இசையில் புகழ்பெற்ற ஆத்தாடி பாவாட காத்தாட பாடல் இடம்பிடித்திருக்கும் இந்தப் படம் வெளியாகி 39 ஆண்டுகள் ஆகிறது.

பூவிலங்கு படத்தில் நடிகர் முரளி
பூவிலங்கு படத்தில் நடிகர் முரளி

குயில் இந்கப் படத்துக்கு முன்னர் தூங்காதே தம்பி தூங்காதே படத்தில் டான்சராகவும், பொய்க்கால் குதிரை படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் தோன்றியபோதிலும் கதாநாயகியாக இந்தப் படத்தில்தான் அறிமுகமானார். கன்னட சினிமாவில் பிரபல இயக்குநர், தயாரிப்பாளரின் மகனான முரளியை, இயக்குநர் பாலசந்தர் தமிழில் ஹீரோவாக அறிமுகப்படுத்தினார்.

1980களில் தமிழ் சினிமாவில் அறிமுகமான ஹீரோக்களில் முக்கியமானவராக திகழ்ந்தார் முரளி. அதற்கு முக்கிய காரணம் தமிழ் சினிமாவில் ஹீரோக்கள் இப்படித்தான் இருக்க வேண்டும் என பின்பற்றப்பட்டு வந்த மரபுகளை உடைத்ததில் ரஜினி, விஜய்காந்த் ஆகியோருக்கு அடுத்தபடியான உதாரணமாக முரளி இருந்ததுதான்.

கருப்பான தோற்றம், ஒல்லியான உடல் என்று இருந்த முரளின் காதுபடவே ஒலித்த கேலி, கிண்டல்களை கடந்த ஹீரோவாக தனது திறமையை வெளிக்காட்டிய முரளி, அதன் பின்னர் தமிழ் சினிமாவில் பக்கத்து வீட்டு நபர் போன்ற கதாபாத்திரங்களில் தோன்றி பல்வேறு ஹிட்களை கொடுத்தார். இதற்கு முன்னர் முரளி சில கன்னட படங்களில் நடித்திருந்தாலும், இந்தப் படம்தான் அவரை ஹீரோவாக சினிமாவில் நிலை நிறுத்தியது.

பூவிலங்கு படத்தின் காட்சி
பூவிலங்கு படத்தின் காட்சி

1984 முதல் 2010 வரை என 26 ஆண்டுகள் சினிமாக்களில் நடித்தார். இந்தப் படத்தில் ஹீரோயினாக நடித்த குயிலி, இந்தப் படத்துக்கு பின்னர் சில படங்களில் ஹீரோயினாக தொடர்ந்தபோதிலும், கமல்ஹாசனின் நாயகன் படத்தில் குத்துபாட்டுக்கு நடனமாடினார்.

அதன்பிறகு ஒரு பாடலுக்கு நடனமாடும் நடிகையாகவே பல படங்களில் தோன்றி, ஒரு கட்டத்துக்கு பிறகு குணச்சித்திர நடிகையாகவும், அம்மா வேடங்களிலும் தோன்றி தென்னிந்திய சினிமாக்களில் தனக்கென தனியொரு இடத்தை பிடித்தார்.

பூவிலங்கு படத்தில் மற்றொரு முக்கிய கதாபாத்திரமாக முரளியின் நண்பனாக தோன்றிய மோகன், பின்னாளில் பூவிலங்கு மோகன் என்று அழைக்கு அளவுக்கு அவரது கதாபாத்திரம் இந்த படத்தில் பேசப்பட்டது. இந்த படத்தை தொடர்ந்து 100க்கும் மேற்பட்ட படங்களில் நடித்த பூவிலங்கு மோகன், சின்னத்திரை சீரயல்களிலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

பூவிலங்கு படத்தில் நடிகர் பூவிலங்கு மோகன்
பூவிலங்கு படத்தில் நடிகர் பூவிலங்கு மோகன்

இவர்கள் தவிர ராதா ரவி, செந்தாமரை, கள்ளாப்பட்டி சிங்காரம் உள்பட பலரும் நடித்திருந்த இந்த படம் எந்த குழப்பமும் இல்லாமல் நேர்கோட்டில் பயணிக்கும் கதையம்சத்துடன் அமைந்திருந்த நிலையில் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.

இந்தப் படத்துக்கு இளையராஜா இசையமைக்க, படத்தில் இடம்பிடித்த நான்கு பாடல்களையும் வைரமுத்து எழுதியிருந்தார். இளையராஜா ப்ளேலிஸ்டில் தவறாமல் இடம்பிடிக்கும் படலாக இருக்கும் "ஆத்தாடி பாவாட காத்தாட" அப்போது மட்டுமில்ல, படம் ரிலீசாக 39 ஆண்டுகள் ஆகும் இந்த தருணத்திலும் பட்டிதொட்டியெங்கும் ஒலிக்கும் பாடலாக உள்ளது.

ஆத்தாடி பாவாட காத்தாட பாடல் காட்சியில் குயிலி
ஆத்தாடி பாவாட காத்தாட பாடல் காட்சியில் குயிலி

கல்லூரி மாணவனான ஒரு முரட்டு ஹீரோ நல்லவர்களுடன் ஏற்பட்ட பழக்கத்தால் நல்ல மனிதனாக மாறுவதும், அவளை மனிதனாக மாற்றிய பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொள்வதும் என இருக்கும் வழக்கமான கதையை நான்கு புதுமுகங்களை வைத்து வெற்றி கண்டார் படத்தின் தயாரிப்பாளர் பாலசந்தர்.

இந்தப் படம் அந்த அறிமுகங்களுக்கு திருப்புமுனையாக அமைந்ததோடு மட்டுமில்லாமல், தமிழ் சினிமா ஹீரோக்கள் பற்றி பின்பற்றப்பட்டு வந்த மரபை உடைத்தெறிந்த பூவிலங்காகவே அமைந்தது.

Whats_app_banner

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.