தளபதி 69 முக்கியத் தகவல் முதல்.. மூச்சு விடாமல் சம்பவம் செய்த அனிருத் வரை.. கோலிவுட்டின் இன்றைய டாப் 10 செய்திகள் இதோ..
கோலிவுட்டில் இன்று நடைபெற்ற 10 முக்கிய நிகழ்வுகளின் தொகுப்புகள் இங்கு தரப்பட்டுள்ளது. இந்த செய்தித் தொகுப்பில்,தளபதி 69 முக்கியத் தகவல் முதல்.. மூச்சு விடாமல் சம்பவம் செய்த அனிருத் வரை.. இன்று நடந்த புதிய அப்டேட்டுகளைக் காணலாம்.
கோலிவுட்டில் இன்று நடைபெற்ற 10 முக்கிய நிகழ்வுகளின் தொகுப்புகள் இங்கு தரப்பட்டுள்ளது. இந்த செய்தித் தொகுப்பில், தளபதி 69 முக்கியத் தகவல் முதல்.. மூச்சு விடாமல் சம்பவம் செய்த அனிருத் வரை.. இன்று நடந்த புதிய அப்டேட்டுகளைக் காணலாம்.
1. கோலிவுட்டில் தனது கணவர் கார்த்திக், நடிகர் தனுஷ், நடிகை த்ரிஷா, பாடலாசிரியர் வைரமுத்து என பலர் குறித்தும் தொடர்ந்து சர்ச்சை கருத்துகள் கூறிவந்த பாடகி சுசித்ரா, இனி யார் குறித்தும் தான் பேட்டிகளிலோ, யூடியூபிலோ கருத்து தெரிவிக்க மாட்டேன் என அறிவித்துள்ளார். மேலும், குழந்தைகளுக்கான இதழ் ஒன்றில் பணிக்கு சேர்ந்திருப்பதால் அவர் மும்பைக்கு மொத்தமாக குடிபெயர்ந்து விட்டதாகவும் கூறியுள்ளார்.
2. ஏ.ஆர். முருகதாஸ்- சூர்யா கூட்டணியில் வெளியாகி மெகாஹிட் அடித்த கஜினி படத்தின் 2ம் பாகத்தை விரைவில் இயக்கவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இவர் நடிகர் சிவகார்த்திகேயனின் 23வது படத்தையும், சல்மான் கானின் சிக்கந்தர் படத்தையும் எடுத்து முடித்தப் பின் கஜினி திரைப்படத்தின் 2ம் பாகத்தை எடுக்க உள்ளதாக தெரிகிறது.
3. தமிழில் பல வெற்றித் திரைப்படங்களில் படத் தொகுப்பாளராக பணியாற்றிய லியோ ஜான் பால் தற்போது இயக்குநராக அறிமுகமாக உள்ளார். இவரின் முதல் படத்தில் நடிகரும் இசையமைப்பாளருமான விஜய் ஆண்டனி நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். ககன மார்கன் எனப் பெயரிடப்பட்டுள்ள இந்தப் படத்தின் போஸ்டர் வெளியாகி உள்ளது. இந்தப் படத்தின் பெயருக்கு காற்றின் வழி பயணிப்பவன் என அர்த்தமாம்.
4. கீர்த்தி சுரேஷ் நடிப்பில் உருவாகியுள்ள ரிவால்வர் ரீட்டா திரைப்படத்தின் டீசர் நாளை வெளியாகவுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. சரஸ்வதி சபதம் படத்தை எடுத்த சந்துருவின் இயக்கிய இப்படத்தின் படப்பிடிப்பு சில மாதங்களுக்கு முன் நிறைவடைந்த நிலையில், படக்குழு இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
5. இசையமைப்பாளர் அனிருத்தின் பிறந்தநாளை முன்னிட்டு, இயக்குநர் விக்னேஷ் சிவன் இயக்கும் லவ் இன்ஷூரன்ஸ் கம்பெனி படத்தின் தீமா பாடல் வெளியாகியுள்ளது. பிரதீப் ரங்கநாதன், கீர்த்தி ஷெட்டி நடிக்கும் இந்தப் படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இந்நிலையில், படத்தின் முதல் சிங்கிளான தீமா பாடலை அனிருத் இசையமைத்து பாடியுள்ளார். இந்த பாட்டின் சில வரிகளை அனிருத் மூச்சுவிடாமல் பாடி அசத்தியுள்ளார்.
6. அரசியலில் கவனம் செலுத்த இருக்கும் நடிகர் விஜய்யின் கடைசி படமாக உருவாகிறது தளபதி 69. இந்தப் படத்தில் விஜய் அரசியல்வாதியாக நடிக்க வாய்ப்புள்ளதாக பலரும் கூறி வந்த நிலையில், தற்போது தளபதி 69 படத்தில் நடிகர் விஜய் போலிஸ் அதிகாரியாக நடிக்க உள்ளார் என தகவல்கள் கசிந்துள்ளது. தீரன் அதிகாரம் ஒன்று, வலிமை போன்ற படங்களில் இயக்குநர் ஹெச். வினோத் தனது கதாநாயகர்களை போலீஸ் அதிகாரியாக மிரட்டி இருந்த நிலையில், விஜய்யும் தளபதி 69 படத்தில் போலீசாக நடிக்க வாய்ப்புள்ளது என தகவல்கள் தற்போது பரவி வருகிறது.
7. ஜெய்பீம் புகழ் த.செ. ஞானவேல் இயக்கத்தில் நடிகர் ரஜினி காந்த், அமிதாப் பச்சன், பகத் பாசில், ராணா டகுபதி, மஞ்சு வாரியார் உள்ளிட்ட நட்சத்திரங்கள் நடிப்பில் வேட்டையன் திரைப்படம் வெளியானது. இந்தப் படம் உலகம் முழுவதும் வெளியான 6வது நாளில் 264.31 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளதாக அப்படத்தின் தயாரிப்பு நிறுவனம் லைகா தெரிவித்துள்ளது. மேலும் இப்படம் உலகம் முழுவதும் இதுவரை 114.60 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
8. டீப் ஃபேக் தொழில்நுட்பத்தால் பாதிக்கப்பட்ட நடிகை ராஷ்மிகா மந்தனா, இந்திய சைபர் க்ரைம் ஒருங்கிணைப்பு குழுவின் பிராண்ட் அம்பாசிடராக நியமிக்கப்பட்டுள்ளார். நமக்காகவும் எதிர்கால சந்ததியினருக்காகவும் பாதுகாப்பான சூழலை உருவாக்க நாம் அனைவரும் ஒன்றிணைய வேண்டிய நேரம் வந்துவிட்டது. ஐ4சி (I4C)க்கான பிராண்ட் அம்பாசிடராக நான் பொறுப்பேற்றுள்ளேன். இதந் பின், இணையக் குற்றங்கள் குறித்த விழிப்புணர்வை அதிகளவு ஏற்படுத்த உள்ளேன் எனவும் அவர் கூறியுள்ளார்.
9. பட்டியலின ஊராட்சி மன்ற தலைவர்களின் வாழ்வியலை பேசும் படமான வெளியான நந்தன் படத்தை பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் பாராட்டியுள்ளார். இதுகுறித்து பேசிய அவர், அமேசான் பிரைம் வீடியோ தளத்தில் பத்திரிகையாளர் இரா.சரவணன் இயக்கி நடிகர் சசிகுமார் நடித்த நந்தன் திரைப்படம் பார்த்தேன். உள்ளாட்சிகளின் வாயிலை நந்தன்களுக்கு சட்டம் திறந்து விட்டாலும் சமூகநீதிக்கு எதிரானவர்கள் மூடி விடுகின்றனர் என்ற சமூகநீதியின் கருப்பு வரலாற்றைத் தான் நந்தன் திரைப்படம் பேசுகிறது. உள்ளாட்சிகளில் பட்டியலினத்தவருக்கான உரிமைகளை அரசும், சமூகமும் உறுதி செய்ய வேண்டும் என வலியுறுத்தி இருந்தார்.
10. நடிகர் விமல் நடித்துள்ள சார் படத்தை பார்த்த நடிகர் விஜய் சேதுபதி அந்தப் படத்தை புகழ்ந்து பாராட்டியுள்ளார். இந்தப் படம் குறித்து பேசிய அவர், ஒரு குழந்தைக்கு போகிற கல்வியை தடுப்பவர்கள் கடவுளாக இருந்தாலும் சரி, அதை எதிர்த்து நிற்பது தவறே இல்லை என படம் கூறுகிறது. கிராமத்தில் கல்வி போய் சேர வேண்டும் என்று ஒரு ஆசிரியர் எடுக்கும் முயற்சி தான் இந்த சார் படம். இந்த படம் முடியும் போது நாம் அனைவரும் விமல் கதாபாத்திரத்துடன் நிற்போம் என நம்புகிறேன் எனக் கூறியுள்ளார்.
டாபிக்ஸ்