2K கிட்ஸ்களின் இசைஞானி, இசைப்புயல், ராக்ஸ்டார் மற்றும் பல..இசை உலகின் ட்ரெண்டிங் நாயகன் அனிருத் பிறந்தநாள்
HBD Anirudh: தனது பாடல்களால் எப்போதும் இசை உலகின் ட்ரெண்டிங் நாயகன் ஆக இணைய உலகில் இருந்து வருகிறார் இசையமைப்பாளர் அனிருத். சொல்லப்போனால் 2K கிட்ஸ்களின் இசைஞானி, இசைப்புயல் மற்றும் பல பட்டங்களாககவும் வலம் வந்து கொண்டிருக்கிறார்.
சினிமாக்களில் பொதுவாக ஒரு டாப் நடிகருடன் இணைந்து நடிக்க வேண்டும் என்ற ஆசை மற்ற நடிகருக்கும், அந்த நடிகரை இயக்க வேண்டும் என்ற விருப்பம் இயக்குநருக்கோ இருப்பதுண்டு. அதேபோல் ஒரு முன்னணி இயக்குநர் படத்தில் நடித்து விட வேண்டும் என விரும்பும் ஹீரோக்களும் இருக்கிறார்கள். இதுபற்றி தங்களது ஆசையை பல ஹீரோக்கள் வெளிப்படையாகவே தெரிவித்துள் உள்ளார்கள்.
அந்த வகையில் இயக்குநரோ அல்லது ஹீரோவா தனது படத்தில் பணியாற்ற வேண்டும் என விரும்பும் டெக்னீஷ்யன்களின் முக்கியமானவராக இருப்பவர் இசையமைப்பாளர் அனிருத். சிறியவர்கள் முதல் வயதானவர்கள் வரை தனது துள்ளல் இசையால் ஆட்டம்போட வைக்கும் இசையமைப்பாளராக இருந்து வரும் அனிருத் தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு, இந்தி சினிமாக்களிலும் கோலோச்சி வருபவராக திகழ்கிறார்.
முதல் பாட்டிலேயே உலக பேமஸ்
தனுஷ் நடித்த 3 படத்தில் இடம்பிடித்திருக்கும் ஒய் திஸ் கொலை வெறி பாடல் தான் அனிருத் இசையில் வெளியான முதல் பாடல். யூடியூப்பில் வைரல் என்ற சொல்லுக்கு இலக்கனமாக அமைந்த இந்த பாடல் உலக அளவில் பேமஸ் ஆனதோடு, 450 மில்லியன் பார்வைகளை பெற்றது.
தனது படங்களில் அனைத்திலும் ஏதாவது ஒரு பாடலை ட்ரெண்டாக்கி அனைவரையும் முணு முணுக்க வைப்பதோடு மட்டுமல்லால், ஆட்டம் போட் வைப்பதிலும் வல்லவராக இருந்தார் அனிருத்.
கடந்த ஆண்டு ஷாருக்கான் நடிப்பில் வெளியான ஜவான் படம் மூலம் பாலிவுட் சினிமாவுக்கும் சென்றுள்ள அனிருத், தனது அற்புத பாடலால் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளார்.
அனிருத் குடும்ப பின்னணி
அனிருத் கலை குடும்ப பின்னணியை கொண்டவராக இருக்கிறார். 1980களில் தமிழில் பல்வேறு படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்தவர் நடிகர் ரவி ராகவேந்திரா. குறிப்பாக மறைந்த இயக்குநர் விசுவின் பல்வேறு படங்களில் ரவி ராகவேந்திரா நடித்துள்ளார். அவரது மகன்தான் இசையமைப்பாளர் அனிருத்.
அத்தோடு இல்லாமல், ரவி ராகவேந்திரா சகோதரிதான் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மனைவியான லதா ரஜினிகாந்த். அந்த வகையில் ரஜினிகாந்தின் உறவினராகவும் இருந்து வரும் அனிருத், அவருக்காக பேட்ட, தர்பார், ஜெயிலர், அண்மையில் வெளியாகியிருக்கும் வேட்டையன் என நான்கு படங்களுக்கு இசையமைத்துள்ளார். இதேபோல் உலக நாயகன் கமல்ஹாசன் நடித்த இந்தியன் 2 படத்துக்கும் அனிருத் தான் இசையமைப்பாளர்.
இளசுகளின் ராக் ஸ்டார்
இசையமைப்பாளராக மட்டுமல்லாமல், பாடகராகவும் தனது இசையிலும், பிற இசையமைப்பாளர்களின் இசையிலும் பாடல் பாடி இளசுகளின் மனதை கவரும் இசையமைப்பாளராக வலம் வருகிறார். ஒரு படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார் என்றாலே இணையத்தில் சென்சேஷனை ஏற்படுத்தும் பாடலுக்கு கியாரண்டி என்று சொல்லும் அளவில் அனைத்து வயதினருக்கும் பிடித்தமான ட்ரெண்டிங் பாடல் கொடுத்து வருகிறார்.
தமிழ் சினிமாவுக்கு இந்த நூற்றாண்டில் கிடைத்த சிறந்த இசையமைப்பாளர் என்று கொண்டாடப்படும் அனிருத் பாடல்கள்களுடன், தமிழ் சினிமாவின் மற்ற முன்னணி இசையமைப்பாளர்களான இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான், யுவன் ஷங்கர் ராஜா போன்றோரின் பாடல்களுடன் ஒப்பிட்டு சமூக வலைத்தளங்களில் ரசிகர்களுக்கு இடையே அடிக்கடி சண்டை நடப்பதுண்டு.
என்னதான் சண்டை, சச்சரவுகள் இருந்தாலும் ஜென் ஓய், ஜென் இஸ்ட் என்று அழைக்கப்படும் 2K கிட்ஸ்களின் ராக்ஸ்டார் ஆகவும், அவர்களது இசைஞானி, இசைப்புயல் ஆக இருந்து வருகிறார் அனிருத். தனது பாடல்களால் இணையத்தில் எப்போதும் இருந்து வரும் இசை உலகின் ட்ரெண்டிங் நாயகன் அனிருத்துக்கு இன்று பிறந்தநாள்
டாபிக்ஸ்