டாப் 10 சினிமா.. கதாநாயகனான கூல் சுரேஷ் முதல்.. பல மொழிகளில் பேசும் சூர்யா வரை.. கோலிவுட்டின் முக்கிய செய்திகள்
கோலிவுட் சினிமாவில் இன்று நடைபெற்ற முக்கிய செய்திகளின் தொகுப்புகள் இங்கே தரப்பட்டுள்ளது. இந்த செய்தியில் கதாநாயகனான கூல் சுரேஷ் முதல்.. பல மொழிகளில் பேசும் சூர்யா வரை பல சுவாரசியமான செய்திகள் இடம்பெற்றுள்ளது.

1. ஜெய்பீம் புகழ் த.செ. ஞானவேல் இயக்கத்தில் நடிகர் ரஜினி காந்த், அமிதாப் பச்சன், பகத் பாசில், ராணா டகுபதி, மஞ்சு வாரியார் உள்ளிட்ட நட்சத்திரங்கள் நடிப்பில் வேட்டையன் திரைப்படம் வெளியானது. இந்தப் படம் உலகம் முழுவதும் வெளியான 4 நாட்களில் 215 கோடி ரூபாய் வசூலை பெற்றுள்ளது. இந்தத் திரைப்படம் தமிழ்நாட்டில் மட்டும் 100 கோடி ரூபாய் வசூலை பெற்றுள்ளது. வேட்டையன் படத்தின் உரிமையை அமேசான் பிரைம் ஓடிடி தளம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
2. பிரபல யூடியூபர் டிடிஎஃப் வாசன் மஞ்சள் வீரன் படத்திலிருந்து நீக்கப்பட்ட நிலையில், அப்படத்தின் இயக்குநர் செல் அம் இன்று புதிய கதாநாயகனை அறிமுகப்படுத்தியுள்ளார். அதன்படி, சர்ச்சைகளால், தனது வித்தியாசமான செய்கையாலும் மக்கள் மத்தியில் பிரபலமான நடிகர் கூல் சுரேஷ் மஞ்சள் வீரன் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளது தெரியவந்துள்ளது. விரைவில் இந்தப் படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் எனவும் தெரிகிறது.
3. வரலாற்றுப் பின்னணியில் நடிகர் சூர்யா நடித்துள்ள திரைப்படம் கங்குவா. சிறுத்தை சிவா இயக்கிய இந்தப் படம் வரும் நவம்பர் 14ம் தேதி உலகம் முழுவதும் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி, ஆங்கிலம் என 30க்கும் மேற்பட்ட மொழிகளில் வெளியாக உள்ளது. இந்த நிலையில், கங்குவா திரைப்படத்தின் பிறமொழி பதிப்பிற்கு சூர்யாவின் குரல் ஏஐ தொழில்நுட்பம் மூலம் பயன்படுத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதற்கிடையில் இத்திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா வரும் 20ம் தேதி சாய்ராம் கல்லூரியில் நடைபெறும் என சினிமா வட்டாரத்தில் பேசப்பட்டு வருகிறது.