Meiyazhagan: நான் ஸ்டாப் பேச்சு.. எழுந்த விமர்சனங்கள்.. படத்தின் நீளத்தை குறைத்த படக்குழு-meiyazhagan movie trimmed 18 minute says movie crew - HT Tamil ,பொழுதுபோக்கு செய்திகள்
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Meiyazhagan: நான் ஸ்டாப் பேச்சு.. எழுந்த விமர்சனங்கள்.. படத்தின் நீளத்தை குறைத்த படக்குழு

Meiyazhagan: நான் ஸ்டாப் பேச்சு.. எழுந்த விமர்சனங்கள்.. படத்தின் நீளத்தை குறைத்த படக்குழு

Malavica Natarajan HT Tamil
Sep 30, 2024 08:03 PM IST

Meiyazhagan: கார்த்தி- அரவிந்த் சாமி நடிப்பில் வெளியான மெய்யழகன் திரைப்படம் மிக நீளமாக இருக்கிறது. இருவரும் நீண்ட நேரம் பேசிக் கொண்டே இருக்கின்றனர் என பலரும் விமர்சித்துவந்த நிலையில், அப்படத்தின் நீளம் தற்போது குறைக்கப்பட்டுள்ளது.

Meiyazhagan: நான் ஸ்டாப் பேச்சு.. எழுந்த விமர்சனங்கள்.. படத்தின் நீளத்தை குறைத்த படக்குழு
Meiyazhagan: நான் ஸ்டாப் பேச்சு.. எழுந்த விமர்சனங்கள்.. படத்தின் நீளத்தை குறைத்த படக்குழு

இந்தப் படம் தற்போது திரையரங்கில் வெளியான பின், படம் குறித்து பாசிட்டிவான கருத்து தெரிவித்தாலும், அதன் நீளமும், பேசும் வசனங்கள் குறித்தும் பல விமர்சனங்களை முன்வைத்தனர். இதனைக் கருத்தில் கொண்ட படக்குழு, மெய்யழகன் படத்திலிருந்து 18 நிமிட காட்சிகளை நீக்கியுள்ளது. மேலும், இனி திரையரங்குகளில் நீளம் குறைந்த காட்சி ஒளிபரப்பப்படும் எனவும் அறிவித்துள்ளது.

மெய்யழகன் படக்குழு

நடிகர்கள் கார்த்தி, அரவிந்த் சாமி, ஸ்ரீதிவ்யா, தேவதர்ஷினி, ஜெயபிரகாஷ், ராஜ் கிரண் உள்ளிட்டோர் நடிப்பில் கடந்த 27ம் தேதி வெளியான திரைப்படம் மெய்யழகன். பிரேம் குமார் இயக்கிய இத்திரைப்படத்திற்கு கோவிந்த் வசந்தா இசையமைத்துள்ளார். நடிகர் சூர்யாவின் 2டி எண்டெர்டெய்ன்மெண்ட் நிறுவனம் தயாரித்துள்ளது.

மெய்யழகன் கூறும் கதை

சொந்தங்களால் சொத்தை இழந்து, இரவோடு இரவாக தஞ்சாவூரை விட்டுச் செல்லும் அரவிந்த்சாமியின் குடும்பம். 20 ஆண்டுகள் கடந்து, சொந்த ஊரில் நடக்கும் தன் சித்தி மகள் திருமணத்தில் பங்கேற்க, மீண்டும் தஞ்சாவூர் வருகிறார். அங்கு அவரை உபசரிக்க வரும் உறவுக்காரர் கார்த்தி உடன், அர்விந்த்சாமி பழக நேர்கிறது. இதற்கடுத்து இவர்களுக்கு நடக்கும் உரையாடல் தான் மொத்த படமும்.

தொடரும் விமர்சனம்

இப்போது சொன்னது தான் கதை. இதை கேட்கும் போது நன்றாக இருக்கும். ஆனால் பார்க்கும் போது? 3 மணி நேரத்திற்கு 3 நிமிடம் மட்டுமே குறைவு என்கிற கால தூரத்தில் படம் ஓடுகிறது. படம் ஆரம்பிக்கும் போது பேச ஆரம்பிப்பவர்கள், முடியும் வரை பேசுகிறார்கள். பேசிக்கொண்டே இருக்கிறார்கள். படத்தின் காட்சிகளை பார்க்கும் போது செலவே இல்லை; ஆனால், காகிதங்களுக்கு பெரிய அளவில் செலவாகியிருக்கும். அந்த அளவிற்கு டயலாக் உள்ளது இந்தப் படத்தில்.

படத்தில் திருமணத்திற்காக வந்த அரவிந்த் சாமி அதையே காணாமல் ஊருக்கு சென்று விடுவதாகத் தெரிகிறது. இந்தப் படத்தில் கார்த்தி மற்றும் அரவிந்த் சாமி கணக்கச்சிதமாக பொருந்தி போயிருக்கிறார்கள் எனக் கூறினாலும். அதை 3 மணி நேரத்திற்கும் நம்மால் பார்க்க முடியாதல்லவா.

இந்த படம், அது சொல்ல வந்த கருத்து என பல காட்சிகள் நன்றாக இருக்கிறது. ஆனால், படத்தின் வசனங்களும், படத்தின் நீளமும் ரசிகர்களால் தாக்குப்பிடிக்க முடியாமல் உள்ளது என பல விமர்சனங்கள் எழுந்த வண்ணமே இருந்தது.

காட்சிகளைக் குறைத்த படக்குழு

இந்த நிலையில், படக்குழு ரசிகர்களுக்கு முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், ரசிகர்களின் விருப்பத்திற்கு இணங்க படத்தின் நீளம் 18 நிமிடங்கள் குறைக்கப்பட்டுள்ளது. இனி திரையரங்குகளிலும் நீளம் குறைக்கப்பட்ட காட்சிகளே ஒளிபரப்பப்படும் எனக் கூறியுள்ளது. இதனால், பலரும் நிம்மதி அடைந்துள்ளனர்.

கார்த்திக்கும் அரவிந்த் சாமிக்கும் நடக்கும் உரையாடல் ஜல்லிக்கட்டு, ஸ்டெர்லைட் துப்பாக்கிச்சூடு, ஈழத்தமிழர் படுகொலை என படத்திற்கு சம்பந்தம் இல்லாத பல இடங்களைத் தொடுவதால், பலரும் கடுப்பாகி வந்தனர்.

இயக்குநரின் பதில்

இதுகுறித்து படத்தின் இயக்குநர் கூறுகைியில், அன்பால் உருவான மெய்யழகனுக்கு பேரன்பை அளித்து வரும் உங்கள் அனைவருக்கும் நன்றி. திரைமொழியின் வழக்கமான பாணியில் இருந்து விலகிய ஒரு திரை அனுபவத்திற்கு நீங்கள் தயாராக இருக்கிறீர்கள் என்ற நம்பிக்கையை விதைத்ததற்கு நன்றி. ஏராளமான அனுபல பகிர்வுகள் இந்த படைப்பின் மீதான நம்பிக்கையை அதிகரித்திருக்கின்றன. மெய்யழகளை உணர்ந்து புரிந்துகொண்ட பெரும்பாலானோரின் அன்பும், ரசனையும் பிரமிக்க வைக்கின்றன.

படத்தின் நீளம் குறித்து மட்டும் சில அக்கறை குரல்கள் வெளிப்பட்டு வந்த நிலையில், ஒரு படைப்பாளியின் முதல் கடமை மக்களின் குரல்களுக்கு செவிமடுப்பது. எல்லோரது திருப்தியும் எனக்கு முக்கியம். அதுவே மெய்யழகனின் மீது நீங்கள் கொண்ட அன்பிற்கு நான் செய்யும் கைம்மாறு.

எனவே இன்று முதல் சில காட்சிகள் நீக்கப்பட்டு, 18 நிமிடங்கள் 42 நொடிகள் குறைக்கப்பட்டு, 2 மணி நேரம் 38 நிமிடங்களாக திரையிடல் தொடரும். மெய்யழகனின் நீளம் மட்டுமே குறைக்கப்பட்டிருக்கிறது. ஆனால் அவன் பேசும் அன்பும், திரை அனுபவமும் சற்றும் குறையவில்லை எனக் கூறியுள்ளார்.

குற்ற உணர்ச்சி

அதேசமயம், தனக்காக காத்திருக்கும் கார்த்தியின் பெயர் கூட தெரியாமல், அல்லது தெரிந்து கொள்ள விரும்பாமல் அவருடன் பழகி அர்விந்த்சாமி குற்ற உணர்வில் தவிப்பதும், பின் பெயரை அறிந்து அந்த இடத்தில் கார்த்தியின் பெயரான மெய்யழகன் என்பதை டைட்டில் கார்டில் போட்டு படத்தை முடிப்பதும் விமர்சனத்திற்குள்ளானது குறிப்பிடத்தக்கது.

 

 

 

Whats_app_banner
தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.