Arvind Swamy: “அரவிந்த அப்பவே தத்துக்கொடுத்துட்டோம்; அவன் எங்க வீட்டு பிள்ளை இல்ல.. நாங்க பேசுறது”-அரவிந்த் சாமி அப்பா!
Arvind Swamy: “எங்கள் வீட்டுக்கு அவர் வருவது போவது எல்லாம் எப்போதாவது ஒருமுறைதான் ஏதாவது குடும்ப நிகழ்வு என்றால் வந்து செல்வார் அவ்வளவு தான்” - அரவிந்த் சாமி அப்பா!
பிரபல நடிகரான அரவிந்த் சாமி அண்மையில் தொகுப்பாளர் கோபிநாத் சேனலுக்கு கொடுத்த பேட்டியானது சமூகவலைதளங்களில் வைரலானது. அதில், அவர் வாழ்க்கைப் பற்றியும், பணத்தை கையாள்வது குறித்தும், பிசினஸ் குறித்தான அவரது பார்வையையும் பகிர்ந்திருந்தார். அவை அனைத்தும் மக்கள் மத்தியில் பெரிய கவனத்தை பெற்று இருக்கிறது. அவரும், கார்த்தியும் இணைந்து நடித்த ‘மெய்யழகன்’ திரைப்படமும் இன்று வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. இந்த நிலையில், அவரின் பர்சனலான விஷயங்கள் சிலவற்றை பார்க்கலாம்.
தத்துக்கொடுக்கப்பட்ட அரவிந்த் சாமி
1970ஆம் ஆண்டு ஜூன் 18ஆம் தேதி சென்னையில் பிறந்த நடிகர் அரவிந்த் சாமியின் உண்மையான பயோலஜிக்கல் தந்தை ‘மெட்டி ஒலி’ சீரியல் புகழ் நடிகர் டெல்லி குமார்தான். ஆம், அரவிந்த் சுவாமி பிறந்த போதே, தன்னுடைய சகோதரியும் பரதநாட்டியக் கலைஞருமான வசந்தாவிற்கு அவரை தத்துக்கொடுத்து விட்டார்.
இவரது கணவர் மறைந்த பிரபல தொழிலதிபரான வி.டி. சுவாமி எனப்படும் வெங்கட சுவாமி எஃகு ஏற்றுமதி தொழிலில் முன்னோடியாக இருந்தவர். சிறுவயதிலேயே டெல்லி குமாரை பிரிந்து வசந்தா வீட்டிற்கு அரவிந்த் சாமி சென்றதால், ஆரம்பம் காலம் தொட்டே அவர்களின் பிள்ளையாகவே வளர்ந்தார். இந்த நிலையில், கடந்த 1 வருடத்திற்கு முன்னதாக டெல்லி குமார் பிஹைண்ட்வுட்ஸ் சேனலுக்கு அரவிந்த் சாமி குறித்து பேட்டிக்கொடுத்தார். அந்தப்பேட்டியை இங்கே பார்க்கலாம்.
இது குறித்து பேசும் போது, “ அரவிந்த்சாமி என்னுடைய மகன்தான். அதில் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை. அவரும், நானும் அப்பா மகனாக நடிக்கவில்லையே என்று கேட்கிறீர்கள். இந்த இடத்தில் நானும் அவரும் அப்பா, மகனாக ஏன் நடிக்கவில்லை என்ற கேள்வியைத் தவிர்த்து, நானும் அவரும் அந்த மாதிரி நடிக்கும் போது, அதில் அப்பாவிற்கான கதாபாத்திரம் அந்தளவு முக்கியத்துவம் இல்லாமல் இருந்ததை நீங்கள் கவனத்தில் கொள்ள வேண்டும். நாங்கள் நடிப்பதற்கு நல்ல முக்கியத்துவம் இருந்து, வாய்ப்பு கிடைத்து இருந்தால் நிச்சயமாக நடித்திருக்கலாம்.
அவர் பிறந்த உடனேயே அவரை நாங்கள் சகோதரிக்கு தத்தெடுத்து கொடுத்து விட்டோம். அவர் அவர்களின் குடும்பத்தோடு ஐக்கியமாகிவிட்டார். அதனால் எங்கள் வீட்டுக்கு அவர் வருவது போவது எல்லாம் எப்போதாவது ஒருமுறைதான் ஏதாவது குடும்ப நிகழ்வு என்றால் வந்து செல்வார் அவ்வளவு தான்.” என்று பேசினார்.
முன்னதாக, உடல் நிலை சரியில்லாமல் இருந்த காலங்களில் தான் எதிர்கொண்ட சோதனைகளை பிரபல நடிகரான அரவிந்த் சாமி பகிர்ந்து இருந்தார். அந்த பேட்டியையும் பார்க்கலாம்.
உடல் நிலை அவ்வளவு மோசமாக இருந்தது
இது குறித்து கடந்த 5 வருடங்களுக்கு முன்னதாக விகடன் யூடியூப் சேனலுக்கு பேட்டியளித்த அவர், “நான் குண்டாக சொட்டையாக இருந்ததை மறைக்க விரும்பவில்லை. அதற்கான காரணம், அப்போது என்னுடைய உடல் நிலையானது சரியாக இல்லாமல் இருந்ததே! அதற்காக நான் நிறைய மருந்து மாத்திரைகளை எடுத்துக் கொண்டேன். இதனை கிண்டல் செய்யும் விதமாக என்ன நடக்கிறது என்றே தெரியாமல் சிலர் சில மீம்களை போட்டிருக்கலாம். சிலர் தெரிந்தே கூட அதை செய்திருக்கலாம். அதை நான் இங்கு நியாயப்படுத்த வரவில்லை. அதை நாம் எப்படி எடுத்துக் கொள்கிறோம் என்பது நம் கையில் இருக்கிறது.
அதனால் எனக்கு எந்தவித பாதிப்பும் இல்லை. அதை பார்த்து நான் வருத்தப்படவும் இல்லை. நான் அழகாக இருக்கிறேன் என்று நான் நினைக்கவே இல்லை. இப்போது நான் அசிங்கமாக இருக்கிறேன் என்றும் சொல்லவில்லை. ஆனால் இந்த காலங்களில், ஒரு சம்பவம் என்னுடைய மனதை மிகவும் பாதித்தது. நான் ஒரு முறை ஸ்ரீலங்காவிற்கு என்னுடைய குடும்பத்தோடு சுற்றுலா சென்று இருந்தேன். அப்போது என்னுடைய குழந்தைகள் மிக மிக சிறிய குழந்தைகள்.
அங்கு ஹோட்டல் ஒன்றில் நான் சாப்பாடு எடுக்கச் சென்ற போது, அங்கு இருந்த பெண்மணி ஒருவர் என் குழந்தையை பார்த்து அப்பாவை குறைவாக சாப்பிட சொல் என்று சொன்னார். இது கண்டிப்பாக என்னை பெரிதாக பாதிக்காது. ஆனால் என்னுடைய குழந்தையை கண்டிப்பாக பாதிக்கும். நீங்கள் என்னைப் பற்றி எது வேண்டும் என்றாலும் சொல்லலாம். ஆனால் அதை நான் எடுத்துக்கொள்வேன். ஆனால் குழந்தை அப்படி கிடையாது. ஆகையால் மனிதர்கள் நிலைமை அறிந்து செயல்பட வேண்டும்” என்று பேசினார்.
தொடர்புடையை செய்திகள்
டாபிக்ஸ்