தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Leo Fdfs: லியோ படத்திற்கு அதிகாலை காட்சியா? - அனுமதி கொடுக்க முடியாது! - நீதிமன்றத்தில் அரசு விளக்கம்!

Leo FDFS: லியோ படத்திற்கு அதிகாலை காட்சியா? - அனுமதி கொடுக்க முடியாது! - நீதிமன்றத்தில் அரசு விளக்கம்!

Kalyani Pandiyan S HT Tamil
Oct 18, 2023 10:16 AM IST

லியோ திரைப்படத்திற்கு அதிகாலை காட்சி வழங்க முடியாது என்று தமிழ்நாடு அரசு தெரிவித்திருக்கிறது.

லியோ திரைப்படத்தில் விஜய்!
லியோ திரைப்படத்தில் விஜய்!

ட்ரெண்டிங் செய்திகள்

விஜய் நடிப்பில் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி இருக்கும் திரைப்படம் ‘லியோ’. இந்தத்திரைப்படத்தில் பல வருடங்களுக்கு பிறகு, விஜயுடன் ஜோடியாக சேர்ந்து நடிகை த்ரிஷா இருக்கிறார். இவர்களுடன் நடிகர்கள் கெளதம் மேனன், மிஷ்கின், அர்ஜூன், மன்சூர் அலிகான் என ஒரு நட்சத்திரப்பட்டாளமே நடித்திருக்கிறது.

முன்னதாக, விஜயின் வாரிசு திரைப்படமும், அஜித்தின் துணிவு திரைப்படமும் கடந்த பொங்கலுக்கு மோதியது. அதில் துணிவு திரைப்படத்தின் அதிகாலை காட்சியின் போது, ரசிகர் ஒருவர் உயிரிழந்தார். இந்த விவகாரம் பெரிய சர்ச்சையாக உருவெடுத்த நிலையில், அதற்கடுத்ததாக வெளியான எந்த படங்களுக்கும் அரசு சார்பில் இருந்து, அதிகாலை 4 மணி காட்சிக்கு அனுமதி கொடுக்கப்படவில்லை.

இந்த நிலையில், லியோ திரைப்படத்திற்கு, சிறப்பு காட்சிகளுக்கு அனுமதி வழங்க வேண்டும் என்று கூறி, அந்தப்படத்தின் தயாரிப்பு நிறுவனம் அரசிற்கு கோரிக்கை வைத்தது. அந்தக்கோரிக்கையை ஏற்ற தமிழ்நாடு அரசு லியோ திரைப்படத்தின் சிறப்பு காட்சிகளுக்கு அனுமதி அளித்தது. அதில் நாள் ஒன்றுக்கு 5 காட்சிகளை திரையிட்டுக்கொள்ளலாம் என்று உத்தரவிடப்பட்டு இருந்தது.

ஆனால் அதில் சில குழப்பங்கள் இருந்தன. காரணம், இந்த 5 காட்சிகளில், அதிகாலை 4 மணிக்கு காட்சி இருக்குமா? என்ற கேள்வி எழுந்தது. இந்த நிலையில் அதனை தெளிவுப்படுத்தும் விதமாக, தமிழ்நாடு அரசு புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது. அந்த அறிவிப்பில், முதல் காட்சி காலை 9 மணிக்கு திரையிட வேண்டும் என்றும் இறுதி காட்சி நள்ளிரவு 1.30 மணிக்கு முடிக்கப்பட வேண்டும் என்றும் விதிகளை மீறும் திரையரங்கங்கள் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் அதில் குறிப்பிடப்பட்டு இருந்தது.

ஆனால் தமிழ்நாடு தவிர்த்து, கேரளா உள்ளிட்ட பிற மாநிலங்களில் லியோ திரைப்படமானது அதிகாலை 4 மணிக்கு திரையிடப்பட இருக்கிறது. 

இந்த நிலையில் லியோ திரைப்பட தயாரிப்பு நிறுவனம் சார்பில் லியோ திரைப்படம் வெளியாகும் அக்டோபர் 19ம் தேதி அன்று, அதிகாலை 4 மணி காட்சிக்கு அனுமதி அளிக்க வேண்டும் என்றும் மற்ற நாட்களில் காலை 9 மணிக்கு துவங்கும் காட்சிகளை, 7 மணிக்கே திரையிட அனுமதி வழங்க வேண்டும் என்று கூறி நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்கு நீதிபதி அனிதா முன்னர் நேற்று அவசர வழக்காக எடுத்துக்கொள்ளப்பட்டு விசாரணைக்கு வந்தது. அப்போது தயாரிப்பு நிறுவனம் சார்பில், அக்டோபர் 19ம் தேதி இரண்டு சிறப்பு காட்சிகளுக்கு அனுமதி கேட்கப்பட்டு இருந்த நிலையில், ஒரு காட்சிக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டு இருப்பதாகவும், அக்டோபர் 20ம் தேதி முதல் 24ம் தேதி வரை கூடுதலாக ஒரு காட்சிக்கு அனுமதி கோரப்பட்டிருந்தது. 

அதற்கு அனுமதி கிடைத்திருந்தாலும், அதனை 9 மணிக்கே திரையிட அனுமதி அளிக்கப்பட்டு இருப்பதாகவும் வாதம் முன்வைக்கப்பட்டது. மேலும் சட்டப்படி ஒரு காட்சிக்கும் இன்னொரு காட்சிக்கும் இடையே 45 நிமிடங்கள் இடைவேளை விட வேண்டும் என்ற சூழ்நிலை இருக்கிறது. அத்துடன் காட்சிக்கு நடுவே 20 நிமிடம் இடைவேளை விட வேண்டி இருக்கிறது.

இதனைக்கூட்டி பார்க்கும் போது நேரமானது, 18 மணி நேரத்திற்கும் அதிகமாக வரும். அப்படி பார்க்கும் போது, காலை 9 மணிக்கு தொடங்கி 1.30 வரைக்குள் 5 காட்சிகளை திரையிட முடியாது என்பதால், 7 மணிக்கு காட்சிகளை திரையிட அனுமதிக்க வேண்டும் என்று வாதிடப்பட்டது. 

இதனைக்கேட்ட நீதிபதி 4 மணி காட்சிக்கு அனுமதி அளிக்க முடியாது. 7 மணி காட்சிக்கு அனுமதி அளிப்பதற்கு விண்ணப்பம் அளியுங்கள். அதனை தமிழக அரசு பரிசீலிக்க வேண்டும் என்று கூறியிருந்தார். இதனையடுத்து அது தொடர்பான மனுவை லியோ பட தரப்பு வழக்கறிஞர்கள் உள்துறை செயலர் அமுதா ஐஏஎஸ் -யிடம் கொண்டு கொடுத்தனர். இந்த நிலையில் தமிழக அரசு இப்படியான ஒரு விளக்கத்தை நீதிமன்றத்தில் கொடுத்து இருக்கிறது.

IPL_Entry_Point

டாபிக்ஸ்