கங்குவாவை விட மிக பிரம்மாண்டம்..ஆன்மாவை தக்க வைக்க தவறிய கிளாடியேட்டர் 2 - படம் எப்படி இருக்கு?
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  கங்குவாவை விட மிக பிரம்மாண்டம்..ஆன்மாவை தக்க வைக்க தவறிய கிளாடியேட்டர் 2 - படம் எப்படி இருக்கு?

கங்குவாவை விட மிக பிரம்மாண்டம்..ஆன்மாவை தக்க வைக்க தவறிய கிளாடியேட்டர் 2 - படம் எப்படி இருக்கு?

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
Nov 17, 2024 06:40 PM IST

கங்குவா படத்தை விட மிகவும் பிரம்மாண்டமாக இருக்கின்ற போதிலும், முதல் பாகத்தின் ஆன்மாவை தக்க தவறியுள்ளது கிளாடியேட்டர் 2. இருப்பினும் மேக்கிங் சார்ந்து பல புதிய அனுபவங்களை தருகிறது.

கங்குவாவை விட மிக பிரம்மாண்டம்..ஆன்மாவை தக்க வைக்க தவறிய கிளாடியேட்டர் 2 - படம் எப்படி இருக்கு?
கங்குவாவை விட மிக பிரம்மாண்டம்..ஆன்மாவை தக்க வைக்க தவறிய கிளாடியேட்டர் 2 - படம் எப்படி இருக்கு?

கிளாடியேட்டர் 2

ரிட்லி ஸ்காட் இயக்கத்தில் 2000ஆம் ஆண்டு வெளியான வரலாற்று திரைப்படமான கிளாடியேட்டர், வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் மிகப்பெரிய வெற்றிபெற்றதுய தற்போது இரண்டாம் பாகம் நவம்பர் 15ஆம் தேதி வெளியாகியுள்ளது. முதல் பாகத்தை இயக்கிய ரிட்லி ஸ்காட் இந்த பாகத்தையும் இயக்கியுள்ளார்.

படத்தின் நாயகனாக பால் மெஸல் (Paul Mescal ) நடித்துள்ளார். கிளாடியேட்டர் 2 படத்தின் விமர்சனத்துக்குள் செல்வதற்குள் முதல் பாகத்தில் என்ன நடந்தது என்பதை சுருக்கமாக நினைவுபடுத்திக் கொள்ளலாம்.

கிளாடியேட்டர் முதல் பாகம் கதைசுருக்கம்

ரோமப் பேரரசர் சீஸர் மார்கஸ் ஒளரேலியஸ் (Marcus Aurelius) ஐரோப்பா முதல் ஆப்பிரிக்கா வரையில் தனது ஆட்சியை நிலைநாட்ட போர் புரிகிறார். இந்த போர்களில் படைத்தலைவனாக இருந்து பெரும் வெற்றிகளை ஈட்டு தருகிறார் மாக்ஸிமஸ் (Maximus).

சீஸருக்குப் பின் ஆட்சியில் அமர காத்திருக்கிறார் அவரது மகன் கொமொடஸ். ஆனால் சீஸர் தனக்குப்பின் தனது படைத்தலைவன் மாக்ஸிமஸிடம் ரோம சாம்ராஜ்ஜியத்தை ஒப்படைக்க விரும்புகிறார். இது பிடிக்காத கொமொடஸ் தனது தந்தையை கொலை செய்து மாக்ஸிமஸின் மனைவி மற்றும் மகனை கொலை செய்ய உத்தரவிடுகிறார்.

தப்பிச் செல்லும் மாக்ஸிமஸ் அடிமையாக விற்கப்பட்டு கிளாடியேட்டராக (மக்கள் பொழுதுபோக்குக்காக சண்டையிட்டுக்கொள்ளும் பிரிவினர்) மாற்றப்படுகிறார். தனது குடும்பத்தை இழந்து நிற்கும் கிளாடியேட்டராக இருந்து மக்களின் ஆதரவை வென்று கொமொடஸின் எதிர்க்க திட்டமிடுகிறார். இதனை சாத்தியப்படுத்த கொமொடஸின் தங்கை மாக்ஸிமஸின் முன்னாள் காதலியுமான லூசில்லா அவருக்கு உதவி செய்கிறாள்.இறுதியில் கொமொடஸின் கொடுங்கோல் ஆட்சியில் இருந்து ரோம் மக்களை விடுவித்து தானும் இறந்தும் விடுகிறார் மாக்ஸிமஸ்.

கிளாடியேட்டர் 2 கதை

மாக்ஸிமஸ் கொமோடஸின் இருந்து ரோம் நாட்டு மக்களுக்கு சுதந்திரம் வாங்கிக்கொடுத்து 18 ஆண்டுகள்க்குப் பின் நடைபெறும் கதை தான் கிளாடியேட்டர் 2. ரோம் மீண்டும் ஒருமுறை கெட்டா மற்றும் காராகெல்லா ஆகிய இரட்டை சகோதரர்களின் கொடுங்கோல் ஆட்சியில் உள்ளது. போர்கள் தொடுப்பது கொலை செய்வது மட்டுமே இரட்டை அரசர்களின் ஒரே நோக்கம்.

முந்தய பாகத்தில் படைத்தலைவராக மாக்ஸிமஸ் இருந்த இடத்தில் தற்போது அகாசியஸ் இருக்கிறார். மாக்ஸிமஸ் மற்றும் அவரது காதலியாக லூசில்லாவுக்கு பிறந்த லூசியஸ் தான் இப்படத்தின் நாயகன். அரசாள சட்டப்பூர்வமான வாரிசு லூசியஸ் என்பதால் அவனை கொலை செய்ய பலர் முயற்சி செய்கிறார்கள். இதனால் அவனது அண்ணை லூசில்லா அவனை தப்பியோட வைக்கிறார். தப்பியோடிய லூசியஸ் ரோமானியர்களுக்கு எதிராக ஆப்பிரிக்கர்கள் சார்பாக போரிடுகிறான். போரில் கைது செய்யப்பட்டு அடிமையாக விற்கப்படுகிறான் லூசியஸ். தனது தந்தை மாக்ஸிமஸ் போலவே கிளாடியேட்டராக இருந்து மக்களின் ஆதரவைப் பெற்று மீண்டும் அமைதியை நிலைநாடுவதே கிளாடியேட்டர் 2ஆம் பாகத்தின் கதை.

கதை ரீதியாக. முதல் பாகத்துக்கும், இரண்டாம் பாகத்துக்கும் பெரியளவில் வித்தியாசமில்லை. ஆனால் திரை அனுபவமாக கிளாடியேட்டர் 2 இன்னும் பிரம்மாண்டமாக உருவாக்கப்பட்டிருக்கிறது. முதல் பாகம் 2000ஆம் ஆண்டு கால தொழில்நுட்ப வசதிகளை கொண்டு பெரும்பாலான காட்சிகள் கிராஃபிக்ஸ் மற்றும் வி.எஃப்.எக்ஸ் காட்சிகளால் உருவாக்கப்பட்டன. ஆனால் இந்த பாகத்தில் பிரம்மாண்டமான செட்கள் அமைக்கப்பட்டு ஆயிரக்கணக்கான மக்களைக் நிஜமாக நடிக்க வைத்து ஒரு பிரம்மாண்டமான திரை அனுபவத்தை வழங்கியிருக்கிறார்கள்.

அதேபோல் சண்டைக்காட்சிகள் முதல் பாகத்தைக் காட்டிலும் இன்னும் கற்பனை கலந்து இன்னும் சிறப்பாக உருவாக்கப்பட்டிருக்கின்றன. கடல்போல போட்டி மேடை அமைத்து, அதில் வீரர்கள் சண்டை போடுவது , குரங்குகளுடன் சண்டையிடும் காட்சிகள் எல்லாம் ரசிகர்களுக்கு ட்ரீட்டாக அமைந்துள்ளன.

கதை ரீதியாக இரண்டாம் பாகத்தில் அடிமை வர்த்தகராக வரும் டென்ஸல் வாஷிங்டன் ஒரு தனித்துவமான கதாபாத்திரமாக நடித்துள்ளார். ஒரு அடிமையாக கொண்டு வரப்பட்டு தந்திரங்கள் செய்து ஒட்டுமொத்த அரசை தன்பிடியில் கொண்டு வர அவர் போடும் திட்டங்கள் நம்மை வியக்க வைக்கின்றன. டயலாக் டெலிவரி உடல்மொழியில் அட்டகாசம் செய்திருக்கிறார் டென்ஸல்.

ஆன்மாவை தக்க வைக்க தவறிய கிளாடியேட்டர் 2

முதல் பாகத்தில் தனது குடும்பத்தை இழந்து நிற்கும் மாக்ஸிமஸாக ரஸல் க்ரோ ரசிகர்களின் மனதை கவர்ந்தார். படத்தில் பாஸ் மெஸல் ரஸல் க்ரோ அளவுக்கு ரசிகர்களை கவரவில்லை என்றுதான் சொல்ல வேண்டும். தோற்றமாகவும் நடிப்பு ரீதியாகவும் தன்னுடைய அதிகபட்ச உழைப்பை பால் வழங்கியிருக்கிறார் என்றாலும், இந்த கதாபாத்திரத்துடன் எமோஷனலாக ரசிகர்களுக்கு பெரிய கனெக்ட் ஏற்படுவதில்லை. முதல் பாகத்தில் இருந்த அதே உணர்ச்சியைக் கொண்டே இந்த படத்தில் அப்லை செய்தது ஒர்க் அவுட் ஆகவில்லை. தனது தந்தை மாக்ஸிமஸைப் பற்றி லூசியஸ் பல இடங்களில் நினைவு கூர்ந்தாலும் இது அந்த அளவுக்கு தாக்கத்தை ஏற்படுத்துவதில்லை.

கிளாடியேட்டர் 2 மேக்கிங் சார்ந்து பல புதிய அனுபவங்களை வழங்குகிறது என்றாலும், முதல் பாகத்தின் ஆன்மாவை அதனால் இரண்டாம் பாகத்தில் தக்க வைக்க முடியவில்ல என்றுதான் சொல்ல வேண்டும் .

Whats_app_banner

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.