காரில் கஞ்சாவுடன் நடிகர் கைது..நயன்தாரா டாக்குமென்டரியில் சர்ச்சை காட்சி! டாப் சினிமா செய்திகள் இன்று
காரில் கஞ்சாவுடன் நடிகர் கைது, நயன்தாரா டாக்குமென்டரியில் சர்ச்சை காட்சி, ஏ.ஆர். ரஹ்மானுக்கு விருது, கஸ்தூரிக்கு நீதிமன்ற காவல் உள்பட டாப் சினிமா செய்திகள் இன்று எவையெல்லாம் என்பதை பார்க்கலாம்.

கடந்த இரு நாள்களாக கங்குவா படம் குறித்து பல்வேறு விமர்சனங்கள் வெளியாகி வந்துகொண்டிருந்த நிலையில், நயன்தாரா - தனுஷ் இடையிலான மோதல் கோலிவுட் சினிமாவில் தற்போது ஹாட் டாப்பிக்கா இருந்து வருகிறது. இது ஒரு புறம் இருக்க இன்றைய டாப் சினிமா செய்திகள் என்ன என்பதை பார்க்கலாம்.
ஏ.ஆர். ரஹ்மானுக்கு சிறந்த இயக்குநர் விருது
லே மஸ்க் என்ற விர்ச்சுவல் ரியாலிட்டி (மெய்நிகர்) படத்தை இயக்கியிருக்கும் இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மானுக்கு, சென்னை ஐஐடி சார்பில் புதுமைக்கான விருது வழங்கி கெளரவிக்கப்பட்டுள்ளது. இதுபற்றி ஏ.ஆர்.ரஹ்மான் கூறும்போது, "சென்னையில் விருது வாங்குவது சிறப்பானது. விர்ச்சுவல் ரியாலிட்டி படங்களை இயக்கிய மற்றவர்கள் செய்த தவறை இந்த படத்தில் செய்யக்கூடாது என தெளிவாக இருந்தோம்" என்று கூறினார்.
கஸ்தூரிக்கு நீதிமன்ற காவல்
தெலுங்கர்கள் குறித்து அவதூறாக பேசிய வழக்கில் தலைமறைவாக இருந்த நடிகை கஸ்தூரி போலீசாரால் கைது செய்யப்பட்ட நிலையில், சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது நீதிபதி, அவருக்கு நவம்பர் 29ஆம் தேதி வரை காவல் விதித்து உத்தரவிட்டார்.