Vettaiyan: வேட்டையன் படத்திற்கு தடை? படக்குழுவுக்கு பறந்த உத்தரவு! என்ன தான் ஆச்சு?
Vettaiyan: வேட்டையன் படத்தின் வெளியீட்டிற்கு தடை விதிக்கக் கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அத்துடன் இந்த வழக்கு குறித்து பதிலளிக்கவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நடிகர் ரஜினிகாந்த், அமிதாப் பச்சான் உள்ளிட்ட நட்சத்திர பட்டாளங்களின் கூட்டணியை வைத்து, இயக்குநர் த.செ.ஞானவேல் இயக்கியுள்ள திரைப்படம் வேட்டையன்.
சமூகத்தில் நடக்கும் பிரச்சனைகளை மையமாக வைத்து உருவாக்கப்பட்டுள்ள இந்தப் படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டும் என உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், படத்தில் வரும் என்கவுன்டர் குறித்த வசனங்களுக்கு உரிய பதில் அளிக்குமாறு உத்தரவிட்டுள்ளது.
வேட்டையன் பராக்
ஜெய்பீம் படத்தின் மூலம் கவனம் பெற்ற இயக்குநர் த.செ. ஞானவேல் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ள படம் வேட்டையன். இந்தப் படத்தில் ரஜினிகாந்த்துடன் அமிதாப் பச்சன், மஞ்சு வாரியார், பகத் பாசில் உள்ளிட்ட பல நடிகர்கள் இணைந்துள்ளனர். தர்பார் படத்தைத் தொடர்ந்து நடிகர் ரஜினிகாந்த் இந்தப் படத்திலும் போலிஸ் அதிகாரியாக நடித்துள்ளார்.
இப்படத்தின் ட்ரெயிலர் வெளியாகி பரபரப்பை கிளப்பி உள்ளது. போலீஸ் அதிகாரியாக வரும் ரஜினி, குற்றவாளிகளைக் கண்டுபிடிப்பது போன்றும், அதற்காக காவலர்களுடன் ஆலோசனை நடத்துவது போன்றும், நீதிபதியிடம் உரையாடுவது போன்றும் விறுவிறப்பான காட்சிகளுடன் வந்துள்ளது வேட்டையன் ட்ரெயிலர். பெண்கள் பாதுகாப்பு, திருடன், என்கவுன்டர், அநீதி என பல ஏரியாக்களில் வேட்டையன் படம் பயணிக்கிறது என ட்ரெயிலர் மூலம் ரசிகர்கள் புரிந்து கொண்டுள்ளனர்.
அக்டோபர் 10ம் தேதி ரிலீஸ்
முன்னதாக, வேட்டையன் படத்தின் பாடல்கள் மற்றும் டீசர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்ற நிலையில், வேட்டையன் திரைப்படம் வரும் அக்டோபர் 10 அன்று திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. அனிருத் இசையில் வெளியான பாடல்கள் துள்ளலான இசையினால் இளைஞர்களையும் குழந்தைகளையும் வெகுவாக கவர்ந்துள்ளது. இந்த படத்தை லைகா நிறுவனம் தயாரித்துள்ளது. 2 மணி நேரம் 47 நிமிடம் உள்ள இந்தப் படத்திற்கு தணிக்கை வாரியம் யு/ஏ சான்றிதழ் வழங்கியுள்ளது.
நடிகர் ரஜினி காந்த்தின் 170வது படமான வேட்டையனை எதிர்பார்த்து அவரது ரசிகர்கள் ஆர்வத்துடன் காத்திருக்கும் நிலையில், படத்தில் நடிக்கும் முக்கிய நடிகர்களின் கதாப்பாத்திர பெயர்களை படக்குழு தொடர்ந்து வெளியிட்டு வந்தது.
ட்ரெயிலர் வெளியீடு
இதைத்தொடர்ந்து நேற்று, படத்தின் ட்ரெயிலர் வெளியானது. அதில், இங்க பொன்னுங்களுக்கு பாதுகாப்பே இல்ல. பொறுக்கிங்களுக்கு தான் பாதுகாப்பு.. இந்த மாதிரி பொறுக்கிங்கள என்கவுன்டர் தான் பண்ணனும்.. குற்றவாளியை கண்டுபிடிக்க என்ன வேணும்னாலும் பண்ணுங்க.. இன்னும் ஒரு வாரத்துல என்கவுன்டர் பண்ணியே ஆகனும்.. ஒருவாரம் ரொம்ப அதிகம் 3 நாளுல டிபார்ட்மெண்டக்கு நல்ல பேர் வரும்.. போதும்..
திருடன்னா முகமுடி போட வேண்டாம். கொஞ்சம் மூளை இருந்தா போதும். பேசிப் புரியோஜனம் இல்ல.. தூக்குவோம்.. ஒரு அநீதியை இன்னொரு அநீதியால வெல்ல முடியாது.. நீங்க என் எங்க தூக்கி அடிச்சாலும் நான் அதே போலீஸ்காரன் தான்.. என்கிட்ட இருந்து யாராலையும் காப்பாத்த முடியாது போன்ற வசனங்கள் படத்தின் கதையை யூகிக்க வைக்கிறது.
தொடரப்பட்ட வழக்கு
இந்த நிலையில் தான், வேட்டையன் படத்தில் என்கவுன்ட்டர் தொடர்பான வசனங்களை நீக்க வேண்டும். அல்லது மியூட் செய்யும் வரை அப்படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டும் எனக் கூறி மதுரையைச் சேர்ந்த பழனிவேலு என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், படத்தை வெளியிட இடைக்கால தடை விதிக்க முடியாது எனக் கூறியுள்ளது. அத்துடன், இத்திரைப்படத்தில் வரும் வசனங்கள் தொடர்பா, மத்திய திரைப்பட தணிக்கை வாரியம், படத்தின் தயாரிப்பு நிறுவனமான லைகா, தமிழ்நாடு அரசு பதிலளிக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது. அத்துடன் இத்த வழக்கின் விசாரணையையும் ஒத்தி வைத்துள்ளது.
ஏற்கனவே, ரஜினியின் உடல் நலக் குறைவால் வருத்தத்தில் இருக்கும் அவரது ரசிகர்கள் இந்த வழக்கால், படம் வெளிவருவதில் ஏதேனும் சிக்கல் ஏற்படுமா என புலம்பி வருகின்றனர்.