‘வெட்டிக் கழக தலைவர்.. செபாஸ்டின் சைமன் போல ஜோசப் விஜய்..’ தவெக மாநாடு பேச்சுக்கு உடனே எதிர்வினையாற்றி பாஜக!
‘கடந்த தேர்தலில் திமுகவுக்கு வாக்களிக்க, சைக்கிளில் சென்று திமுகவிற்கு மறைமுக ஆதரவு தெரிவித்து, வாக்குப்பதிவு நாளன்று வாக்காளர்களை திமுகவிற்கு ஆதரவாக திசை திருப்பிய நடிகர் விஜய்..’

நடிகரும், தமிழக வெற்றிக் கழகத் தலைவருமான விஜய், விக்ரவாண்டியில் நடந்த தனது கட்சியின் முதல் மாநாட்டில் பாஜக மற்றும் திமுகவை நேரடியாக தாக்கி , அவர்களை தங்கள் எதிரி என பிரகடனம் செய்தார். அவர் பேசி முடித்த கையோடு, அதற்கு எதிர்வினை ஆற்றியிருக்கிறது தமிழக பாஜக. அது தொடர்பாக தமிழக பாஜக மாநில செய்தி தொடர்பாளர் ஏ.என்.எஸ்.பிரசாத் வெளியிட்டுள்ள அறிக்கை இதோ:
‘‘வெற்றிக்கழக தலைவர் விஜய், தமிழக அரசியலில் வெட்டிக்கழக தலைவராக மாறக்கூடாது. விஜய் அதிகார அரசியலுக்காக திமுக வழியில், ஓட்டு வங்கி அரசியலுக்காக சீமான் பாதையில் செயல்பட முடிவு செய்து இருப்பது தமிழக மக்களை ஏமாற்றும் விதத்தில் உள்ளது.
‘ஜோசப் விஜய்.. அழுத்தமாக கூறும் பாஜக’
தமிழக வெற்றிக் கழக மாநாட்டில் நடிகர் விஜய் அவர்களின் வீர வசனங்கள் அடங்கிய உரை ஒரு அரசியல் திரைப்படத்தை பார்ப்பது போல இருந்தது. நடிகர் விஜய் அவர்களின் கன்னி பேச்சு என்பதால் இது குறித்து விமர்சனங்களை வைக்க விரும்பவில்லை. தேர்தல் அரசியலுக்காகவும் ஓட்டு வங்கிக்காகவும் சொல்லுக்கும் செயலுக்கும் சம்பந்தமில்லாத வகையில், நாம் தமிழர் கட்சி தலைவர் செபாஸ்டின் சைமனின் மறு உருவமாக, அரசியல் நடிகர் ஜோசப் விஜய் விளங்குவார் என்பது மட்டும் தற்போது வெட்ட வெளிச்சமாகியுள்ளது.