Sivakarthikeyan: அது உண்மையே இல்ல.. பேரைக் கெடுக்காதீங்க.. கொதித்த சிவகார்த்திகேயன்..
Sivakarthikeyan: நடிகர் சிவகார்த்திகேயனின் எஸ்கே புரொடக்ஷன்ஸ் நிறுவனத்தில் காஸ்டிங் ஏஜென்ட் நியமிக்கப்படவில்லை. அந்த பெயரில் யாரும் உங்களை தொடர்புகொண்டால் அதில் எந்த உண்மையும் இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.
விஜய் டிவியில் தொகுப்பாளராக பணியாற்றி பலரின் கவனத்தையும் ஈர்த்தவர் நடிகர் சிவகார்த்திகேயன். இவர், மெரினா திரைப்படத்தின் மூலம் சின்னத்திரையிலிருந்து வெள்ளித்திரைக்குள் நுழைந்தார். பின் நடிகர் தனுஷின் 3 திரைப்படத்தில் அவரது நண்பராக நடித்திருந்தார். அதைத் தொடர்ந்து மனம் கொத்திப் பறவை, கேடி பில்லா கில்லாடி ரங்கா என அடுத்தடுத்த படங்களில் கமிட்டாகி நடிக்க ஆரம்பித்தார். பின் இவரின் நடிப்பில் வெளியான எதிர் நீச்சல் படத்திற்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. இதைத்தொடர்ந்து அவர் சரசரவென பல ஹிட் படங்களைக் கொடுத்து, முன்னணி ஹீரோக்களின் பட்டியலில் இடம் பிடித்தார்.
தயாரிப்பாளரான சிவகார்த்திகேயன்
மேலும், சினிமாவில் நடிகராக மட்டும் தொடராமல் தயாரிப்பாளராகவும், பாடலாசிரியராகவும், பாடகராகவும் தன்னை அடையாளப்படுத்திக் கொண்டார். பின்னர், சினிமா கனவுடன் வரும் இளைஞர்களை ஊக்கப்படுத்தும் விதமாக இவர் பல புதுமுக இயக்குநர்களுக்கு வாய்ப்பளித்து படத்தை தயாரித்து வெற்றி பெற்றுள்ளார். எஸ்கே புரொடக்ஷன்ஸ் எனும் சிவகார்த்திகேயனின் தயாரிப்பு நிறுவனம் கனா, அருவி, டாக்டர், டான், கொட்டுக்காளி போன்ற பல படங்களைத் தயாரித்துள்ளது. மேலும், சிறய பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட சில படங்கள் இந்த தயாரிப்பு நிறுவனத்திற்கு நல்ல லாபத்தையும் கொடுத்துள்ளது.
எஸ்கே புரொடக்ஷன் மீது அவதூறு
இந்நிலையில், சிவகார்த்திகேயனின் எஸ் கே புரொடக்ஷன்ஸ் நிறுவனத்தின் பெயரை பயன்படுத்தி இணையத்தில் சில அவதூறு கருத்துகள் பரவி வந்தது. இதைக்கண்ட எஸ் கே புரொடக்ஷன்ஸ் நிறுவம், தனது தயாரிப்பு நிறுவனம் குறித்து விளக்கமளித்துள்ளது. அத்தோடு நில்லாமல், தங்களது நிறுவனத்தின் பெயரை தவறாக பயன்படுத்துவோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரித்துள்ளது.
விளக்க அறிக்கை
இதுதொடர்பாக, சிவகார்த்திகேயனின் எஸ்கே புரொடக்ஷன்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "எங்கள் சிவகார்த்திகேயன் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிக்கப்படும் எந்தத் திரைப்படங்களுக்கும் காஸ்டிங் ஏஜென்ட்கள் நியமிக்கப்படவில்லை என்பதை தெளிவாக அறிவிக்கிறோம்.
இதற்கு மாறாகத் தோன்றும் எந்த மின்னஞ்சல்கள், செய்திகள் அல்லது சமூக வலைதள பதிவுகளையும் நம்ப வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம்.
சிவகார்த்திகேயன் புரொடக்ஷன்ஸ் பெயரை தவறாக பயன்படுத்துவோருக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்பதை தெரிவித்துக்கொள்கிறோம்." எனக் கூறப்பட்டுள்ளது.
குழப்பத்தில் ரசிகர்கள்
சிவகார்த்திகேயனின் தயாரிப்பு நிறுவனத்தின் பேரில் என்ன நடந்தது என்பது குறித்த முழுமையான தகவல்கள் எதுவும் வெளியாகாத நிலையில், தயாரிப்பு நிறுவனத்தின் இந்த அறிவிப்பு பல கேள்விகளை எழுப்பியுள்ளது. அத்துடன், ராணுவ வீரரின் வாழ்க்கையை மையமாக வைத்து எடுக்கப்படும் ஒரு உண்மை கதையில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள அமரன் திரைப்படம் வெளியாக உள்ள நிலையில், இதுபோன்ற செய்திகள் வெளியாகி ரசிகர்களிடம் பல்வேறு கேள்விகளை எழுப்பி வருகிறது.
முன்னதாக, எஸ்கே புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் வெளியான கொட்டுக்காளி திரைப்படம் சர்வதேச திரைப்பட விழாக்களில் பல விருதுகளை குவித்துவரும் நிலையில், எஸ்கே புரொடக்ஷனுக்கு என்ன ஆனது என ரசிகர்கள் குழம்பி வருகின்றனர்.
பொறுப்புத் துறப்பு:
இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல், பொருள் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்களில் இருந்து சேகரித்து, உங்களுக்குத் தரப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.