Anna ben About SivaKarthikeyan: ‘சிவகார்த்திகேயனின் இன்னொரு முகம்.. மதுரை என்றாலே’: புட்டுபுட்டு வைத்த மலையாள நடிகை பென்
Anna ben About SivaKarthikeyan: ‘சிவகார்த்திகேயனின் இன்னொரு முகம் பற்றியும் மதுரை பற்றியும் புட்டுபுட்டு வைத்த மலையாள நடிகை அன்னா பென்னின் பேட்டி வைரல் ஆகியுள்ளது.
Anna ben About SivaKarthikeyan: நடிகர் சூரி கதையின் நாயகனாக நடிக்க, மலையாள நடிகை அன்னா பென் தமிழில் முதன்முறையாக அறிமுகமாகும் படம் தான், ‘கொட்டுக்காளி’. இப்படத்தை ‘கூழாங்கல்’ படத்தை இயக்கிய வினோத் ராஜ் இயக்கியுள்ளார்.
இப்படத்தை தமிழின் முன்னணி நடிகராக வலம்வரும் சிவகார்த்திகேயன், தனது எஸ்.கே. புரொடக்ஷன்ஸ் மூலம் தயாரித்திருக்கிறார். இந்நிலையில் ‘கொட்டுக்காளி’ திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகும் அன்னாபேன் பிஹைண்ட் வுட்ஸ் யூட்யூப் சேனலுக்கு அளித்த பேட்டியில், சிவகார்த்திகேயன் குறித்தும் ‘கொட்டுக்காளி’ படத்தில் நடித்த அனுபவங்கள் குறித்தும் பல்வேறு தகவல்களைப் பகிர்ந்துகொண்டார்.
‘’சூரி சாரின் உணர்வுப்பூர்வமான நடிப்பை அருகில் இருந்து பார்த்தேன்'':
இதுதொடர்பாக நடிகை அன்னா பென் கொடுத்த பேட்டியானது, ‘’சூரி சார் காமெடி ரோலில் நடித்து சமீப காலமாக ஹீரோ அவதாரம் எடுத்துள்ளார். அவருடைய பரோட்டா காமெடி காட்சியெல்லாம் நான் பார்த்திருக்கேன். ஆனால், அதன்பின், நான் அவர் நடித்த விடுதலை படம் பார்த்து, பிரமித்துள்ளேன். அவர் என்னுடன் பணிசெய்யும்போது சில உணர்வுப்பூர்வமான காட்சிகளில் நடிக்கும்போது இதனை நான் முதன்முறையாக முயற்சித்துபார்க்கிறேன் என்று என்னிடம் கூறினார். அதனை நான் அருகில் இருக்கும்போது பார்க்கும்போது பெருமையாக இருந்தது.
சீரியஸ் படத்தில் நடிக்கும்போது கொஞ்சம் பிரேக் கிடைக்கும்போது எல்லாம் சிரிச்சிட்டுத்தான் இருப்போம். கேமரா ஆன் பண்ணும்போது சீரியஸ் ஆகிடுவோம்.
எல்லோரும் என்னை கதாபாத்திரத்தின் பெயரான ’மீனா’ என்ற பெயரை வைச்சு தான் கூப்பிடுவாங்க. ’கொட்டுக்காளி’ திரைப்படம் ஒரு ரொமான்டிக் படம் கிடையாது. அது உலகில் பெண்கள் படும்பிரச்னைகளைப் பற்றித்தான் பேசிக்கொண்டு இருக்கும். இதுக்குத் தேவையான இசை இப்படத்தில் இருக்கும். ஆனால், பாடல் எல்லாம் கிடையாது.
சிவகார்த்திகேயன் சார், சினிமா எடுக்கும்போது எல்லாம் செட்டிற்கு வரவில்லை. இயக்குநரின் கிரியேட்டிவ் ஆன யோசனைகளை எல்லாம் சுதந்திரமாக படமாக்கவிட்டார். இயக்குநரையும் நடிகர்களையும் மிகவும் நம்பினார்.
என்னுடைய எந்தவொரு படத்தையும் அவர் பார்த்தது கிடையாது. ஆனால், அந்த வாய்ப்பை தந்தாங்க. ‘கொட்டுக்காளி’ படம் பார்த்துட்டு, என்னுடைய நடிப்பு நல்லாயிருக்குன்னு சொன்னாங்க. ஒரு கட்டத்தில் நான் அவர் கூட நடிக்கணும்னு சொன்னேன். அப்போது வாய்ப்பு கிடைக்கும்போது கண்டிப்பாக ஒன்றாக சேர்ந்து நடிப்போம் என்று சிவகார்த்திகேயன் சார் என்னிடம் சொன்னார்.
’இயக்குநர் வினோத் ராஜை நம்பக் காரணம் இதுதான்’:
இரண்டு வருடங்களுக்கு முன் வினோத் ராஜ் சார் என்னை வந்து பார்த்து, ’கொட்டுக்காளி’கதையைச் சொல்லும்போதும் சரி, ஸ்கிரிப்ட் படிக்க சொல்லும்போதும் சரி அதில் நிறைய திருப்பங்கள் இருந்தது. கதையை பயங்கரமாக அவர் சொன்னார். எனது நிறைய நண்பர்கள் அவரது ‘கூழாங்கல்’படத்தினைப் பார்த்துவிட்டு நல்ல இயக்குநர் என்று பரிந்துரைத்தனர். அப்படி தான் இந்த கதைக்குள்ள வந்தேன். அதற்காக 6 மாதம் ட்ரெய்னிங் எல்லாம் போக வேண்டியிருந்தது. கொட்டுக்காளி படத்தின் அர்த்தம் என்னவென்றால், பிடிவாதமான பெண் என்று அர்த்தம். அப்படி தான் படம் முழுக்க இப்படத்தின் கதாபாத்திரம் இருக்கும்.
படத்தில் எனக்கு இருந்த சவால் என்னவென்றால், நான் எந்தவொரு வசனமும் பேசவில்லை என்றாலும், அந்த மீனா கதாபாத்திரத்துடன் படம் பார்க்கும் நபர்கள் ஒன்றிப்போக வேண்டும் என்று தான். அதை நான் செய்திருக்கேன்னு நினைக்கிறேன்.
இயக்குநர் வினோத் ராஜுடைய எண்ண ஓட்டமெல்லாம் உலகத்தரத்தில் இருக்கும். அவர் மதுரையில் இருந்து வந்தவர். அவரது படமும் அப்படி உலகத்தரத்தில் இருக்கணும்னு தான் எடுத்தார். இந்தப் படமும் அவருக்கு மிகப்பெரிய அங்கீகாரத்தைப் பெற்றுத்தரும்.
எனக்கு மீனா அப்படிங்கிற கதாபாத்திரம் எப்படி நடக்கும், எப்படி பேசும்னு எல்லாம் அடிக்கடி சொல்வார். ஆனால், அதை என் நடிப்பில் அவர் வெளியில் கொண்டுவந்தார்.
மதுரை எனக்கு மிகவும் பிடிச்சிருந்துச்சு. அங்கு உணவுக்காக நிறைய டிராவல் செஞ்சிருக்கேன். குமார் மெஸ்ஸில் சாப்பிட்ட மட்டன் பிரியாணி எனக்குப் பிடிச்சிருந்துச்சு’ என்றார்.
நன்றி: பிஹெண்ட்வுட்ஸ்
தொடர்புடையை செய்திகள்