Modi vs Seeman: ’மோதவிட்டு இரத்தம் குடிக்கும் குரூர ஓநாய்! பிரதமர் நரேந்திர மோடியை விளாசும் சீமான்!’
தமிழ் செய்திகள்  /  தேர்தல்கள்  /  Modi Vs Seeman: ’மோதவிட்டு இரத்தம் குடிக்கும் குரூர ஓநாய்! பிரதமர் நரேந்திர மோடியை விளாசும் சீமான்!’

Modi vs Seeman: ’மோதவிட்டு இரத்தம் குடிக்கும் குரூர ஓநாய்! பிரதமர் நரேந்திர மோடியை விளாசும் சீமான்!’

Kathiravan V HT Tamil
Apr 23, 2024 07:52 PM IST

”ஆட்டுக்குட்டிகளை மோத விட்டு இரத்தம் குடிக்கும் ஓநாயின் குரூர மனப்பான்மையே பிரதமருடைய பேச்சில் வெளிப்படுகிறது”

ராஜஸ்தான் பரப்புரையில் இஸ்லாமியர்கள் குறித்து பிரதமர் நரேந்திர மோடி பேசியதற்கு நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கண்டனம்
ராஜஸ்தான் பரப்புரையில் இஸ்லாமியர்கள் குறித்து பிரதமர் நரேந்திர மோடி பேசியதற்கு நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கண்டனம்

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், இராஜஸ்தான் மாநிலத்தில் தேர்தல் பரப்புரையின்போது இசுலாமியப் பெருமக்களை இழிவுப்படுத்தும் வகையில் பிரதமர் மோடி பேசியுள்ளது வன்மையான கண்டனத்துக்குரியது. இந்துக்களுக்கும் இசுலாமியர்களுக்கும் இடையே கலவரத்தைத் தூண்டும் வகையிலான பிரதமர் மோடியின் பேச்சு மதவெறியின் உச்சமாகும்.

இந்தியப் பெருநாடு விடுதலையடைவதற்கு முன்பிருந்தே இசுலாமியப் பெருமக்கள் நீண்டகாலமாக இந்த நிலத்தில் நிலைத்து வாழ்ந்து வருகின்றனர். இந்த மண்ணின் கோடிக்கணக்கான பூர்வகுடி மக்கள் இசுலாத்தை விரும்பி ஏற்றுக்கொண்டார்கள். அவர்கள் யாரும் இந்த நாட்டிற்கு அந்நியர்கள் அல்ல. ஆனால், பிரதமர் மோடி இந்தியாவில் வாழும் இசுலாமியர்கள் அனைவரும் இந்த நாட்டிற்கு வெளியிலிருந்து வந்தவர்கள் போலவும், இந்துக்களின் சொத்துகளை அபகரித்தது போலவும் பேசுவது அற்ப அரசியல் இலாபத்திற்காக மதப்பிரிவினையை ஏற்படுத்துகின்ற சிறிதும் மனச்சான்றற்றச் செயலாகும்.

ஆட்டுக்குட்டிகளை மோத விட்டு இரத்தம் குடிக்கும் ஓநாயின் குரூர மனப்பான்மையே பிரதமருடைய பேச்சில் வெளிப்படுகிறது. தம்முடைய ஆட்சி அதிகாரத்தைத் தக்க வைப்பதற்காக நாட்டு மக்களின் மனங்களில் வெறுப்பு நஞ்சை விதைக்கும் பிரதமர் மோடியின் பரப்புரை பேச்சு இந்த நாட்டினை அழிவுப்பாதைக்கே இட்டுச் செல்லும்.

மீண்டும் மோடி இந்தியாவின் பிரதமரானால் இந்த நாட்டில் சமத்துவம், சனநாயகம், சகோதரத்துவம், மதச்சார்பின்மை என்பதெல்லாம் முற்று முழுதாக ஒழிக்கப்பட்டுவிடும். இந்திய நாட்டின் ஒருமைப்பாட்டையும்,

பன்முகத்தன்மையையும் சிதைத்தழிக்கும் மோடி தலைமையிலான பாஜகவிற்கு தேசபக்தி குறித்துப் பேச எந்தத் தகுதியும் கிடையாது. நடைபெறுகின்ற நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவின் பாசிச மனப்பான்மைக்கு நாட்டு மக்கள் தக்கப்பாடம் புகட்டுவார்கள்.

ஆகவே, இசுலாமியர்களை இழிவுப்படுத்தி, இந்து - இசுலாம் கலவரத்தை ஏற்படுத்தும் வகையில் பேசியதற்கு பிரதமர் மோடி நாட்டு மக்கள் அனைவரிடமும் உடனடியாகப் பொதுமன்னிப்பு கேட்க வேண்டுமென நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்துகிறேன் என தெரிவித்து உள்ளார். 

பிரதமர் மோடி பேசியது என்ன?

ராஜஸ்தானில் நேற்றைய தினம் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, இந்திய தேசிய காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால், முஸ்லிம்கள் மற்றும் "ஊடுருவல்காரர்கள்" போன்ற சிறுபான்மையினருக்கு செல்வத்தை மறு விநியோகம் செய்வார்கள் என்று கூறினார்.

"தாய்மார்கள் மற்றும் சகோதரிகளின் தங்கத்தை கணக்கிட்டு, பின்னர் அந்த சொத்தை விநியோகிப்போம் என்று காங்கிரஸ் தேர்தல் அறிக்கை கூறுகிறது" என்ற பிரதமர் நரேந்திர மோடி, "அவர்கள் அதை யாருக்கு விநியோகிப்பார்கள்?" என்று அவர் கேட்டார்.

"நீங்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த பணத்தை ஊடுருவல்காரர்களுக்கு வழங்க வேண்டுமா? அதற்கு நீங்கள் சம்மதிக்கிறீர்களா?" என்று மோடி கேள்வி எழுப்பினார். “உங்கள் தாய்மார்கள் மற்றும் சகோதரிகளுக்குச் சொந்தமான தங்கத்தை எண்ணி பின்னர் அவர்கள் அதை விநியோகிப்பார்கள் என்று காங்கிரஸ் தேர்தல் அறிக்கை கூறுகிறது.”

முந்தைய காங்கிரஸ் தலைமையிலான அரசாங்கத்தில் பிரதமராக இருந்த மன்மோகன் சிங், "நாட்டின் சொத்துக்களில் முஸ்லிம்களுக்கு முதல் உரிமை உண்டு" கூறியதாக குறிப்பிட்டார்.

தேர்தல் ஆணையத்தில் காங்கிரஸ் புகார்

இதுகுறித்து காங்கிரஸ் மூத்த தலைவர் அபிஷேக் சிங்வி கூறுகையில், இந்திய தேர்தல் ஆணையத்திடம் காங்கிரஸ் கட்சி புகார் அளித்துள்ளது.

டெல்லியில் உள்ள ஆணைய அலுவலகங்களுக்கு வெளியே செய்தியாளர்களிடம் பேசிய சிங்வி, "ஒரே மதம் மற்றும் காங்கிரஸ் கட்சி அவர்களுக்கு நாட்டின் அனைத்து செல்வங்களையும் கொடுக்கும் மற்றும் கட்சி ஊடுருவல்காரர்களுடன் தொடர்புடையது என்ற குற்றச்சாட்டு தெளிவாக உள்ளது" என்று கூறினார். அரசியல் கட்சிகளுக்கான நடத்தை விதிகள் மீறப்பட்டுள்ளதால் தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கட்சி கோரியது.

Whats_app_banner
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல்கள், மக்களவைத் தேர்தல்கள், அதன் முடிவுகள் குறித்த அனைத்து செய்திகளையும் இந்தப்பிரிவில் பார்க்கலாம்.