தமிழ் செய்திகள்  /  தேர்தல்கள்  /  Bjp Bala Ganapathy: சசிகலா புஷ்பாவை சீண்டியவருக்கு பாஜகவில் எம்.பி சீட்! வெடித்தது சர்ச்சை! மாற்றப்படுவாரா வேட்பாளர்?

BJP Bala Ganapathy: சசிகலா புஷ்பாவை சீண்டியவருக்கு பாஜகவில் எம்.பி சீட்! வெடித்தது சர்ச்சை! மாற்றப்படுவாரா வேட்பாளர்?

Kathiravan V HT Tamil
Mar 23, 2024 10:10 AM IST

”சசிகலா புஷ்பா அஞ்சலி செலுத்த வந்தபோது, அவரது அருகில் இருந்த பாஜக மாநில பொதுச்செயலாளர் பொன். பால கணபதி கூட்ட நெரிசலில் சசிகலா புஷ்பாவை சீண்டுவதாக கூறி வீடியோக்கள் சமூகவலைத்தளங்களில் வைரல் ஆகின”

முன்னாள் எம்.பி சசிகலா புஷ்பாவிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட புகாரில் சிக்கிய பொன்.பால கணபதிக்கு பாஜகவில் சீட் தரப்பட்டுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
முன்னாள் எம்.பி சசிகலா புஷ்பாவிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட புகாரில் சிக்கிய பொன்.பால கணபதிக்கு பாஜகவில் சீட் தரப்பட்டுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

ட்ரெண்டிங் செய்திகள்

நாடாளுமன்றத் தேர்தல் 2024

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வரும் ஏப்ரல் 19ஆம் தேதி அன்று ஒரே கட்டமாக நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறுகிறது. இதற்கான வேட்புமனுத்தாக்கல் மார்ச் 20ஆம் தேதியான நாளை மறுநாள் தொடங்குகிறது. வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாள் மார்ச் 27 ஆகும்.மார்ச் 28ஆம் தேதி வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை நடைபெறும் நிலையில், வேட்புமனுக்களை திரும்பப் பெற மார்ச் 30ஆம் தேதி கடைசி நாள் ஆகும். பதிவு செய்யப்பட்ட வாக்குகள் வரும் ஜூன் 4ஆம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்படுகின்றன.

பாஜக வேட்பாளர்கள் பட்டியல்!

தமிழகம் மற்றும் புதுச்சேரியியில் உள்ள 40 தொகுதிகளில் 24 தொகுதிகளில் தாமரை சின்னத்தில் பாஜக வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இதில் 15 தொகுதிகளுக்கான இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியல் நேற்று (மார்ச் 22) வெளியானது. இதில், விருதுநகர் மக்களவை தொகுதியில் பாஜக சார்பில் நடிகை ராதிகா சரத்குமார் போட்டியிடுகிறார்.

நடிகர் சரத்குமார் தனது அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியை பாஜகவில் இணைத்த நிலையில் அவரது மனைவி ராதிகாவுக்கு பாஜக சீட் ஒதுக்கி உள்ளது.

திமுக சார்பில் விருதுநகர் தொகுதி காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. காங்கிரஸ் கட்சி சார்பில் தற்போது சிட்டிங் எம்பியாக உள்ள மாணிக்கம் தாகூர் மீண்டும் போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. அதிமுக சார்பில் தேமுதிகவுக்கு விருதுநகர் தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. விஜய பிரபாகரன் வேட்பாளராக போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

மதுரையில் பாஜகவின் மாநில பொதுச்செயலாளர் ராம சீனிவாசன் போட்டியிடுகிறார். திருவண்ணாமலையில் அஸ்வத்தாமன் போட்டியிடுகிறார்.

திருவள்ளூரில் பால கணபதி, வட சென்னையில் வழக்கறிஞர் பால் கனகராஜ், நாமக்கலில் கே.பி.ராமலிங்கம், கரூரில் செந்தில் நாதன், சிதம்பரத்தில் கார்த்தியாயினி, நாகையில் எஸ்.ஜி.எம்.ரமேஷ், திருப்பூரில் ஏபி முருகானந்தம், பொள்ளாச்சியில் கே.வசந்தராஜன், தஞ்சாவூரில் கருப்பு முருகானந்தம், சிவகங்கையில் தேவநாதன் யாதவ் ஆகியோர் வேட்பாளர்களாக போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரியில் உள்துறை அமைச்சராக உள்ள நமச்சிவாயம் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

பால கணபதிக்கு சீட் கொடுத்ததால் சர்ச்சை!

இதில் திருவள்ளூர் தொகுதி பாஜக வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள பால கணபதிக்கு சீட் கொடுக்கப்பட்டுள்ளது கடும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

கடந்த 2022ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் நடைபெற்ற தியாகி இம்மானுவேல் சேகரன் நினைவுநாளில் ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் உள்ள அவரது நினைவிடத்தில் பாஜக சார்பில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். அப்போது, முன்னாள் எம்.பியும் பாஜக மாநிலத் துணைத்தலைவராக உள்ள சசிகலா புஷ்பா அஞ்சலி செலுத்த வந்தபோது, அவரது அருகில் இருந்த பாஜக மாநில பொதுச்செயலாளர் பொன். பால கணபதி கூட்ட நெரிசலில் சசிகலா புஷ்பாவை சீண்டுவதாக கூறி வீடியோக்கள் சமூகவலைத்தளங்களில் வைரல் ஆகின. இந்த வீடியோவில் சசிகலா புஷ்பாவின் முடி, சேலை மற்றும் பிற இடங்களில் பால கணபதி சீண்டுவதாக கூறி பல்வேறு தரப்பினரின் கண்டனம் தெரிவித்தனர்.

இதனை அடுத்து இந்த சம்பவம் தொடர்பாக விளக்கம் தரக் கோரி தேசிய மகளிர் ஆணையம் பால கணபதிக்கு நோடீஸ் அனுப்பியது. மேலும் பால கணபதி மீது நடவடிக்கை எடுக்க கோரி சசிகலா புஷ்பாவின் கணவர் ராமசாமி தூத்துக்குடி எஸ்.பியிடம் புகார் அளித்து இருந்தார்.

இந்த நிலையில் திருவள்ளூர் தொகுதி பாஜக வேட்பாளராக பொன்.பாலகணபதி அறிவிக்கப்பட்டுள்ளது கடும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

WhatsApp channel