OPS About NDA Allaiance: தாமரை சின்னத்தில் நிற்க சொல்ல டார்ச்சரா? ஓபிஎஸ் பரபரப்பு பேட்டி!
”நாங்கள் அந்த கூட்டணியில் இல்லை என்று எப்போது பாஜகவினர் சொல்லி உள்ளார்கள். அல்லது நாங்கள் விலகிவிட்டோம் என்று சொன்னோமா?”
நாடாளுமன்றத் தேர்தல் கூட்டணி தொடர்பாக முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் மற்றும் பண்ரூட்டி ராமச்சந்திரன் ஆகியோர் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது பேசிய பண்ரூட்டி ராமச்சந்திரன், நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தலில் பிரதமர் மோடி ஆட்சி தொடர வேண்டும் என்பதுதான் எங்களின் அரசியல் நிலைப்பாடு. எதிர்க்கட்சிகள் சார்பில் இந்தியா என்ற கூட்டணியை ஏற்பாடு செய்து அவர்கள் போட்டியிடுகிறார்கள். கடந்த காலங்களில் பல கட்சிகள் சேர்ந்து ஆட்சியை கைப்பற்றி குழப்பம் விளைவித்தார்களே தவிர நிலையான அட்சி ஏற்படவில்லை. இந்தியாவில் நிலையான ஆட்சி வேண்டும் என்பது காலத்தின் கட்டாயம். நிலையான ஆட்சியை தரும் வாய்ப்பு பிரதமர் மோடிக்கும், தேசிய ஜனநாயக கூட்டணிக்கும் மட்டுமே உள்ளது.
தேர்தலை பொறுத்தவரை தேர்தல் இன்னும் அறிவிக்கப்படவில்லை. தேர்தல் வரும்போது என்ன செய்ய வேண்டும் என்பதை கழக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் முடிவெடுப்பார்.
கேள்வி:- பாஜக கூட்டணியில் உள்ளோம் என்று சொன்னீர்கள், ஆனால் பிரதமர் மோடி கலந்து கொண்ட பொதுக்கூட்டத்திற்கு அழைப்பு வந்ததா?
விருந்துக்கு அழைத்துவிட்டு வீட்டில் உள்ளவர்களே சாப்பிடுவதில்லை, வீட்டில் உள்ளவர்கள் கடைசியாகத்தான் சாப்பிட வேண்டும். அவர்கள் விருந்தினர்களை அழைத்துள்ளார்கள், வீட்டில் இருக்கும் எங்களை அழைக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை.
கேள்வி:- வீட்டில் உள்ள நீங்கள் தாமகவே சென்று பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டிருக்க வேண்டுமே?
நாங்கள் அந்த கூட்டணியில் இல்லை என்று எப்போது பாஜகவினர் சொல்லி உள்ளார்கள். அல்லது நாங்கள் விலகிவிட்டோம் என்று சொன்னோமா?
கேள்வி:- பாஜக கூட்டணியில் நீங்கள் உள்ளீர்கள் என்பதையும் கூற மறுக்கிறார்களே?
நாங்கள் கூட்டணியில் இல்லை என்பதையும் அவர்கள் சொல்லவில்லையே! தேசிய ஜனநாயக கூட்டணியை ஆதரிக்கிறோம் என்பது எங்கள் நிலைப்பாடு, அவர்களை பொறுத்தவரை அவர்கள் வெற்றி பெற வகுக்கும் வியூகங்கள் அவர்கள பொறுத்தது ஆனால் அவர்கள் யாரிடம் பேசுகிறார்கள் என்பதில் தலையிடுவது அரசியல் நாகரீகம் ஆகாது.
கேள்வி:- சின்னம் தொடர்பாக பாஜக நிபதனைகளை விதிக்கிறதா?
அதுபோன்ற நிபந்தனை ஏதும் இல்லை; தேர்தல் தேதி அறிவிக்காதபோது அதற்கான அவசியமே இல்லை. எந்த பேச்சுவார்த்தையும் முடிந்த பிந்தான் அறிவிப்போமே தவிர நடக்கும்போது அறிவிக்கமாட்டார்கள்.
கேள்வி:- கூட்டணி இறுதியானால் தாமரை சின்னத்தில் போட்டியிடுவீர்களா?
அப்போது உங்களை கூப்பிடுகிறேன்! வந்து கேட்டுக்கொள்ளுங்கள். எங்கள் கழக ஒருங்கிணைப்பாளர் பெயரில் வருவதுதான் அதிகாரப்பூர்வமான அறிவிப்புகள் ஆகும், எங்கள் பெயரில் வெளியிடும் அறிவிப்புகளுக்கும் எங்களுக்கும் சம்பந்தம் இல்லை, மருது அழகுராஜ் அறிக்கை என்பது அவரது சொந்த கருத்து.
கேள்வி:- தேசிய ஜனநாயக கூட்டணிக்கு தமிழ்நாட்டில் பாஜகதான் தலைமை ஏற்குமா?
பாஜக தலைமையில்தான் கூட்டணிதான் என்பதை ஒருங்கிணைப்பாளரே சொல்லி உள்ளார்.
கேள்வி:- தமிழ்நாட்டில் பாஜக செல்வாக்கு எப்படி உள்ளது என நினைக்கிறீர்கள்?
அது எங்கள் வேலை இல்லை; எங்களை பொறுத்தவரை எங்கள் ஆதரவு உண்டு. அவர்களுக்கு எவ்வளவு செல்வாக்கு என்பதை தேர்தலில் தீர்மானிக்கலாம்.
ஓ.பன்னீர் செல்வம் செய்தியாளர் சந்திப்பு
தொடர்ந்து பேசிய ஓ.பன்னிர் செல்வம் , நாங்களும், பாஜக உயர்மட்ட தலைவர்களும் இன்று வரை பேசி உள்ளோம். பிரதமரை சந்திக்க எந்த நேரமும் கேட்கவில்லை.
கேள்வி:-டிடிவி உடன் இணைந்து செயல்படுவீர்களா?
பொறுமையாக இருங்கள்! காலம் கனிந்து வருகிறது.
கேள்வி:- பாஜகவின் செயல்பாட்டில் வருத்தம் உள்ளதா?
தனிப்பட்ட முறையில் எங்களுக்கு எந்த வருத்தமும் இல்லை; நாங்கள் தொடர்ந்து பேசிக் கொண்டு வருகிறோம். நாளை நடைபெறும் தலைமைக்கழக நிர்வாகிகள், மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் ஆலோசனை நடத்த உள்ளோம்.